India

பா.ஜ.க.,வுக்கு ‘ஆப்பு’ வைக்கும் கோமாதா! - இதுதான் உத்தர பிரதேச அரசியல் நிலவரம்  

டந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராக பதவியேற்றபிறகு, அம்மாநிலத்தில் செயல்பட்டுவந்த, உரிமம் பெறாத மாட்டிறைச்சி நிலையங்களுக்கு தடை விதித்தார். உண்மையில் ‘உரிமம் பெறாத’ என்பது பெயரளவுக்குதான். மற்றபடி அனைத்து மாட்டிறைச்சி கூடங்களுமே மூடப்பட்டன.

அப்புறம் மாடுகளை என்ன செய்வது? கறவை நின்று போன மாடுகளைதான் விவசாயிகள் விற்பார்கள். அதை விற்க முடியாது என்றால் என்ன செய்வார்கள். “ஒரு மாட்டை பராமரிக்க வேண்டுமானால் மாதம் 5 முதல் 7 ஆயிரம் வரை செலவாகும். அந்த பசு பால் தந்தால், அந்த வருமானத்தில் செலவழிக்கலாம். கறவை நின்றுபோன மாடுகளுக்கு எப்படி தொடர்ந்து செலவு செய்ய முடியும்? இதற்கு முன்பு, கறவை நின்ற மாடுகளை விற்றுவிடுவோம். இப்போது இந்த பசு பாதுகாவலர்களின் கண்காணிப்பினால் எந்த வியாபாரியும் மாடுகளை வாங்க முன்வருவதில்லை. வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வெளியூருக்குச் செல்வது மேலும் அபாயமானதாக மாறிவிட்டது. ஆக, தெருவில் விடுவதைத் தவிர எங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? ” என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.

இப்படி விவசாயிகளால் தெருக்களில் கைவிடப்படும் மாடுகள்தான் இப்போது உ.பி.,யின் முக்கியப் பிரச்னை. தெருக்களில் திரியும் மாடுகள் என்றால் ஏதோ ஐம்பது, நூறு இல்லை. பல்லாயிரம் மாடுகள் மாநிலத்தின் சாலைகள், வீதிகள் என அனைத்துப் பகுதிகளும் அலைந்து திரிகின்றன. இது கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றன.

எந்த பயிர் பச்சையையும் விட்டு வைப்பதில்லை. கூட்டம், கூட்டமாக சென்று பயிர்களை தின்று, துவைத்து, நாசம் செய்துவிடுகின்றன மாடுகள். இதனால், விவசாயிகள் இரவு, பகல் பாராது ஷிப்ட் முறையில் வெள்ளாமை வயல்களை காவல் காத்து வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் மாநிலங்களுக்கு இடையில் யமுனை ஆற்றக்கரையை ஒட்டியுள்ள ’சன்வாரா’ என்ற கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார் என்ற விவசாயி. பொழுது சாயும் நேரம் வரையிலும் வயலை காவல் காப்பது இவரது வேலை. அதன்பிறகு, இரண்டாவது ஷிப்டில் இரவு முழுவதும் இந்த சௌகிதார் வேலையைச் செய்பவர் அவருடைய 65 வயது அப்பா.’ “நைட் எல்லாம் ஒரு பொட்டு கண்ணை மூட முடியாது. கூட்டம் கூட்டமா மாடுங்க வந்து நாசம் பண்ணிடும்’’ என்கிறார் அந்த 65 வயது முதியவர்.

கடந்த ஜனவரி மாதத்தில், தங்கள் விவசாய வயல்களை நாசம் செய்த மாடுகளின் 14 உரிமையாளர்களை கிராம மக்கள் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் சிறைபிடித்து பூட்டி வைத்தனர். போலீஸ் வந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருநாள் சிறைவாசத்துக்கு பிறகு அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதே ஜனவரியில், வயலில் மேய்ந்த மாடுகளை விரட்டிய விவசாயிகளை காளைகள் தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

இப்படியாக இந்த மாடுகள் கிராமப்புறங்களின் விவசாயத்தை குலைத்து, நிம்மதியை கெடுத்து, மக்களுக்குள் புதிய பூசல்களை உருவாக்கியிருக்கிறது. விளையப்போகும் கோதுமை அறுவடையை மனதில் கொண்டு தீட்டி வைக்கும் திட்டங்களை எல்லாம் மாடுகள் வந்து நாசம் செய்துவிடுகின்றன. போட்ட முதலும் வீணாகி, மீண்டும் கடன் வாங்க வேண்டியிருக்கிறது. ‘மாடுகள் பயிர்களை நாசம் செய்வதால் வயலை சுற்றி மின் வேலி அமைக்க வங்கிகள் கடன் தர வேண்டும்’ எனக்கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

உண்மையில் இந்த மாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் இந்து விவசாயிகள்தான். இத்தனை காலம் வரை பசு மாட்டை ’கோமாதா’ என கும்பிட்ட இவர்கள், இப்போது வயலின் அறுவடையை காலி செய்ய வரும் பசு கூட்டத்தை கையில் கிடைக்கும் கல்லையோ, கட்டையையோ தூக்கி அடிக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளால் திட்டி சாபம் விடுகின்றனர்.

‘’இதுக்கு முன்னாடி எங்க மாடுகளை முஸ்லிம்கள் வந்து இறைச்சிக் கடைக்கு வாங்கிட்டுப் போவாங்க. ஆனால் இப்போ, எங்க பசு மாடுகளை நாங்களே லத்தியை வெச்சு அடிச்சு நொறுக்க வேண்டிய சூழ்நிலையை யோகி ஆதித்யநாத் உருவாக்கிட்டார். சில நேரங்கள்ல மண்ணெண்ணையை கொண்டு தீயை உருவாக்கி மாடுகளை விரட்டுறோம். வேற என்ன செய்றது? நாங்க இப்படி நடந்துக்கலன்னா, எங்க பயிர் எல்லாம் நாசமாயிடும். அப்புறம் எங்க பிள்ளைங்க பட்டினியில சாக வேண்டியிருக்கும்” என்கிறார் உ.பி.யின் மதுரா மாவட்டத்தில் உள்ள சஜாத்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த மகாவீர் சிங் என்ற விவசாயி.

“எங்க விவசாயிங்க எல்லாம் மாடுகளை பார்த்தாலே அடிச்சு நொறுக்குறாங்க. ‘இறைச்சிக் கூடங்கள்ல மாடுகளை துன்புறுத்துறாங்க’ன்னு சொல்லிதான் ஆதித்யநாத் விற்பனையை தடுக்கிறார். ஆனால், இப்போ விவசாயிகளே அதைத்தானே செய்யுறோம்?! இதுக்கு எப்பவும் போல இருக்க விட்டா, நாங்க பாட்டுக்கும் வயசான மாடுகளை விற்போம். பணப்புழக்கம் இருக்கும். நிம்மதியா இருப்போமே..” என்று கேட்கிறார்கள் பல விவசாயிகள்.

மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் கோசாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாக அரசு கூறினாலும், உண்மையான எண்ணிக்கை இவ்வளவு இல்லை என்கின்றன செய்திகள். இருக்கும் கோசாலைகளும் பிரச்னையின் தீவிரத்தை குறைக்கவில்லை. வெவ்வேறு நகரங்களுக்கு இடையிலான தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் திரியும் இந்த மாடுகள் உ.பி.யில் போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றன. அதிவேகமாக வாகனத்தில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென வந்து நிற்கும் மாட்டு கூட்டம் வாகன ஓட்டிகளை பதற செய்து, மோசமான விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் இப்படி 35 விபத்துக்கள் நடந்திருக்கின்றன.

‘இந்த பிரச்னை எங்கள் துறை தொடர்பானது இல்லை’ என்று உ.பி.யின் விவசாயத் துறை கை கழுவிவிட்டது. கால்நடை பராமரிப்புத்துறையோ, ‘தெருவில் திரியும் மாடுகளை பராமரிப்பது எங்கள் துறையின் பணி என்று எந்த விதிமுறையிலும் இல்லை’ என்று சொல்லிவிட்டது. ‘சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் மாடுகளை ஓட்டுவதும், அடிபட்டு கிடக்கும் மாடுகளை அப்புறப்படுத்துவதும்தான் எங்கள் வேலையா?’ என்று கேட்கிற போக்குவரத்து காவல்துறை.

மொத்தத்தில் மாட்டிறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை உ.பி. முழுமையையும் பெரும் சூறாவளியாக ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக உ.பி.யின் கிராமப்புற வாக்கு வங்கியாக இருக்கும் விவசாயிகள், கடந்த இரு தேர்தல்களில் பா.ஜ.க.வின் பக்கம் நின்றனர். இப்போது நேர் எதிராக திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை.

- பாரதி தம்பி