India

ஒடிசாவில் கரையை கடக்க தொடங்கியது பானி புயல்!

ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே பானி புயலின் கண் பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. போனி புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஒடிசாவில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஒடிசாவில் தற்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. காலை 8 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயலின் தாக்கம் 11 மணி வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான அதிதீவிர பானி புயல், ஒடிசாவில் கரையை கடக்க தொடங்கியது. இதனால், கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மீட்பு பணிக்காக கடற்படை, விமான படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான பானி புயல், அதிதீவிர புயலாக மாறியது.

இந்த புயலால் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் உள்ள 11 முதல் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என தெரிகிறது. எனவே, இப்பகுதிகளில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 11 லட்சம் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஒடிசாவுக்கு இன்று இயக்கப்பட இருந்த 223 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவுரா-சென்னை, சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், டெல்லி- புவனேஷ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும் புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா விமான நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.