India

கைகோர்த்து கழுத்தறுக்கும் பாஜக!

நேரடியாக ஒருவரை வீழ்த்த முடியாமல் அவரை நண்பராக்கி ஒரு கட்டத்தில் அவரை அவருக்கு ஆதரவானவர்களிடமிருந்து பிரித்து, பின்பு அவர் ஒருவரை மட்டுமே நம்பியிருக்கும் சமயத்தில் கழுத்தறுப்பது காலம் காலமாக இருந்துவரும் துரோக அரசியல். மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும், பா.ஜ.கவுக்கும் இதுதான் சித்தாந்தம். சுருக்கமாகச் சொன்னால் உறவாடிக் கெடுப்பதே உயர்ந்த ராஜதந்திரம் என்பதே அவர்களின் கொள்கை.

அசாம், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர் என வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையை விட குறைவான இடங்களையும், ஒற்றை இலக்க இடங்களைப் பெற்றாலும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது பா.ஜ.க. அதற்கு அவர்களுக்கு உதவியது அந்தத் தந்திரம்தான்.

ஒரு மாநிலத்தை தேர்வு செய்வது அந்த மாநிலத்தில் பெரும்பானமை வாக்குகள் வைத்திருக்கும் மாநிலக் கட்சியை மிரட்டி கூட்டணிக்குள் கொண்டு வருவது. கொள்கை ரீதியாக மாறியிருந்தாலும் கூட்டணிக்கு அழைப்பது. தேர்தலை சந்தித்து மாநிலக்கட்சி பெரும் தொகுதிகளின் எண்ணிக்கையோடு பா.ஜ.க பெறும் ஒன்றிரண்டு தொகுதிகளை சேர்த்து பெரும்பான்மையை நிரூபிக்க வைத்து அதனை கூச்சமே இல்லாமல் கூட்டணி என்பது. இதுதான் பாஜக.

Nithish Kumar , Ram vilas paswan

ஜெயபிரகாஷ் நாராயணன், வி.பி.சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றவர்களிடம் அரசியல் பழகிய நிதிஷ்குமார் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் இருவரும் அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தனர். இதன் விளைவு அவர்களது தனித்தன்மையை இழந்து இன்னோரு பாஜகவாக மாறி நிற்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஜக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கை நித்திஷ் குமாருக்கே அதிர்ச்சியானதாகதான் இருந்துள்ளது. ”காமன்சிவில் கோட், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து, அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதென்று பிஜேபியின் தேர்தல் அறிக்கையின் நகலாக இருக்கக்கூடாது'' என நமது கட்சி தேர்தல் அறிக்கை இருக்கக் கூடாது என்று நித்திஷ் சொல்லியிருக்கிறார். அதற்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. திகைத்து போனாராம் நித்தீஷ். மதசார்பற்ற கொள்கை கொண்ட நித்தீஷையே பா.ஜ.கவின் 2.Oவாக மாறி நிற்க வைத்திருப்பது தான் ஆர்.எஸ்.எஸின் பின்வாசல் அரசியல்.

பீகாரில் பலம் கொண்ட நித்தீஷுக்கு 17 இடங்களை கொடுத்துவிட்டு மற்றதை பறித்துக்கொண்டது பா.ஜ.க. இதனை தட்டிக்கேட்க முடியாமல் நிற்கிறார் நித்தீஷ். பீகார் முழுவதுமுள்ள சாதிக்குழுக்களை ஆர்.எஸ்.எஸ் தனது பக்கத்தில் சேர்ந்து கொண்டு சட்டம் ஒழுங்கை கெடுத்து வைத்திருக்கிறது. கிட்டதட்ட இதே நிலைமைதான் ராம் விலாஸ் பஸ்வானுக்கும். பஸ்வானின் அடித்தளமான தலித் மக்களின் வாக்கு வங்கியை கொஞ்சம் கொஞ்சமாக ஆர்.எஸ்.எஸ் கபளிகரம் செய்து கொண்டிருக்கிறது.

mehabooba mufti

இப்படி எல்லாம் செய்ய முடியவில்லை என்றால், மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல் படுத்தி ஆளுநரை கையில் வைத்துக் கொண்டு தனது ஆட்சியை நடத்தும் பாஜக. அதற்கு உதாரணம் ஜம்மு காஷ்மீர்.

ஜம்மு காஷ்மீரில் முஃப்தி முகமதை சம்மதிக்க வைத்து ஆட்சியமைத்தது. பின்னர் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து மெகபூபா கூட்டணியை விட்டு விலகியதும் குடியரசுதலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டு வந்தது. கோவாவிலும் இதே போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.

அதிமுக என்று சொல்லாதீர்கள் என்டிஏ என்று சொல்லுங்கள் என மிரட்டி அடிமைகளாக்கி வைத்துள்ளது பாஜக 

இன்னொன்றையும் செய்வார்கள். ஆட்சியை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். அவர்களின் அதிகாரத்தைப் பிடுங்கி, ஆளுநரை வைத்து ஆட்சி செய்வது. ஆளுநர் பன்வாரிலால், தமிழகத்தில் அப்படித்தான் நிர்வாகத்தை தான் கையில் எடுத்தார். எதிர்த்தப் பேச வேண்டிய எடப்பாடி அரசு கைகட்டி வாய் பொத்தி நின்றது. லேடியா... மோடியா என்று பார்த்துவிடலாம் என்று கூறிய ஜெயலலிதாவின் அ.தி.மு.கவையே தன்னோடு இணைத்துக்கொண்ட பா.ஜ.க இப்போது அ.தி.மு.க என்று சொல்லாதீர்கள் என்.டி.ஏ என்று சொல்லுங்கள் என மிரட்டி அடிமைகளாக்கி வைத்திருப்பது பின்வாசல் அரசியலின் உச்சம். ஆளுநரின் அத்துமீறலுக்கு புதுவை கிரண் பேடியும் ஒரு உதாரணம்.

banwarilal, kiran bedi

இப்படி ஆளுநர் ஆட்சியோ அல்லது ஆளுநரை வைத்து ஆட்சியை மிரட்டுவது போன்ற வேலைகளை பா.ஜ.க பிரதானமாக செய்து வருகிறது. இதற்கு சாட்சி இந்தியாவில் 31 மாநிலங்களில் 21 பாஜக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தான்.

இந்தியாவில் 31 மாநிலங்களில் 21 பாஜக ஆளுநர்கள்

கர்நாடகாவில் எப்பாடியாவது தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என ஒரே நாளில் பெரும்பான்மை இல்லாமல் பதவிப்பிரமாணம் எடுக்க ஆளுநரை சம்மதிக்க வைத்தது பா.ஜ.க. நல்ல வேளையாக காங்கிரஸ், குமாரசாமி கூட்டணி ஆட்சியை பிடித்து, சமயோஜிதமாக பா.ஜ.கவுக்கு முட்டுக்கட்டை போட்டது.

ஐந்து மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் அதனை வெற்றிகரமான தோல்வி என ஆட்சிக்கு ஆசைப்படும் இந்த பா.ஜ.கவின் ஆதிமூலத்தை ஆராய்ந்தால் இவர்கள் தேர்தலுக்கே எதிரானவர்கள் என்பது புரியும்.

நேரு இந்திய மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதில் உறுதியாய் இருந்த நேரத்தில் ''அனைவருக்கும் வாக்குரிமை என்ற திட்டத்தின் தோல்வியை நேரு தன் வாழ்நாளிலேயே பார்த்துவிடுவார்'' என்றது ஆர்.எஸ்.எஸ்-ன் ஆர்கனைசர் பத்திரிக்கை.

‘’அனைவருக்கும் வாக்குரிமை என்ற திட்டத்தின் தோல்வியை நேரு தன் வாழ்நாளிலேயே பார்த்துவிடுவார்’’ என்றது ஆர்.எஸ்.எஸ்-ன் ஆர்கனைசர் பத்திரிகை

இன்றும் சிலர் சொல்வது போல இன்னொரு முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் அன்று ஆர்கனைசர் சொன்ன தேர்தலே வேண்டாம் அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் வாக்களிக்க வேண்டும் என்ற விஷயத்தை முன்னிறுத்துமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

1999ம் ஆண்டிலிருந்து இன்றுவரை என்.டி.ஏ கூட்டணியிலிருந்து 33 கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கி கொண்டு வெளியேறியுள்ளன. இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மட்டும் கூட்டணியிலிருந்து 16 கட்சிகள் விலகியுள்ளன. 2019 தேர்தலுக்கு முன்பு 6 கட்சிகள் வெளியேறியுள்ளன.

தனக்கு அடிபணிய மறுக்கும் கட்சிகள் மீது வருமானவரித்துறை.. சி.பி.ஐ என அரசு அமைப்புகளை ஏவி விட்டு மிரட்டுவது என்று நான்காம் தர அரசியல் செய்யும் பா.ஜ.க, தன்னோடு கூட்டணிக்கு வந்த கட்சிகளை மட்டுமல்ல, வாக்களித்த மக்களையும் கழுத்தறுக்கும் என்பது, அவர்களின் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் நிரூபணம்.