India

தாய் மொழியான இந்தியில் ஃபெயிலான லட்சக்கணக்கான உ.பி. மாணவர்கள்! 

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்., 26ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில் 165 பள்ளிகளில் ஒன்றில் கூட மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. மேலும், 385 பள்ளிகளில் 20 சதிவிகிதத்துக்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்வில் 50 அரசுப் பள்ளிகள், 5 அரசு உதவிப்பெறும் பள்ளிகள், 84 தனியார் பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை. இதேபோல், +2 தேர்வில், 15 அரசுப் பள்ளிகள், 58 அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 176 தனியார் பள்ளிகள் என ஒன்றில் கூட மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

இந்நிலையில், உ.பியின் தாய்மொழியான இந்தி பாடத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் 1.93 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 5.74 லட்சம் மாணவர்களில் 19% பேரும் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது.

முந்தைய கல்வி ஆண்டுகளில் பொதுத்தேர்வுகளின் போது புத்தகத்தை வைத்து காப்பி அடித்து 100% தேர்ச்சி பெற்ற கெளசாம்பியில் உள்ள 13 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை.

மோடியின் பாஜக அரசு, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்க முற்படும் வேளையில் இந்தியை தாய் மொழியாக கொண்ட உத்தர பிரதேச மாநிலத்திலேயே இந்த அளவு வீழ்ச்சி என்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்தியைக் கொண்டு அரசியல் அதிகாரத்தை திணிக்க நினைப்பவர்கள், உண்மையில் அந்த மொழி மீது அக்கறைக் கொண்டு, அதை வளர்ப்பதற்கன முயற்சிகள் எடுப்பதில்லை என்பதற்கு உத்தர பிரதேசம் ஒரு சாட்சி.