India
தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க புதிய செயலி வெளியீடு
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை எளிதில் தெரிவிக்க வசதியாக ‘சி விஜில்’ என்ற செல்போன் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.தேர்தல் விதிமீறல்கள் குறித்துபுகார் செய்ய ‘சி விஜில்’ (C Vigil-Vigilant Citizen) என்ற செல்போன்செயலியை (App) தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் இந்தசெயலி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் இந்த செயலி மூலம் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கூகுள் ப்ளேஸ்டோர் மூலமாக ஸ்மார்ட்போனில் ‘C Vigil’செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். இந்த செயலியில் செல்போன் எண்ணை பதிவு செய்தால், ஒருமுறை பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு (OTP) வரும். அதையும் பதிவு செய்த பிறகு, செயலியை பயன்படுத்தலாம். செல்போன் எண்ணை பதிவு செய்யாமலும் செயலியை பயன்படுத்தலாம்.
எப்படி புகார் அளிப்பது?
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் விநியோகிப்பது, திருமண மண்டபங்களில் விருந்து வைப்பது, மிரட்டுவது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது, வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது, பொய்யான செய்திகளைப் பரப்புவது, பணம் கொடுத்து செய்திகளை பிரசுரிக்கச் செய்வது போன்ற அனைத்து நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகவும் இந்த செயலி மூலம் புகார் அளிக்கலாம்.
இருப்பிடத்தை காட்டுவதற்கான Auto location capture மூலம் புகைப்படம் அல்லது 2 நிமிட வீடியோவாக எடுத்து புகாரை அனுப்பலாம். ஏற்கெனவே எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோவை இந்த செயலி மூலம் அனுப்ப முடியாது.
100 நிமிடத்தில் நடவடிக்கை
இவ்வாறு புகார் அனுப்ப சுமார் 5 நிமிடங்கள் ஆகும். புகார் அளித்த பிறகு, அனுப்பியவரின் செல்போனுக்கு, அடையாள எண் (Unique ID) அனுப்பப்படும். இந்த எண்ணைக் கொண்டு, நமது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பதை டிராக் (Track) செய்து தெரிந்துகொள்ளலாம்.
அனுப்பப்படும் புகார்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். பின்னர், தேர்தல் பறக்கும்படை அல்லது தனிப்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு 15 நிமிடத்தில் விரைந்து சென்று, புகாரின் உண்மைத்தன்மை குறித்து அரை மணி நேரத்துக்குள் விசாரணை நடத்துவார்கள்.
புகார் உண்மையாக இருந்தால்,மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அவர் இதுகுறித்து 50 நிமிடங்களுக்குள் விசாரணை நடத்துவார். அந்த புகார் உண்மையானது என்றுஉறுதிசெய்யப்பட்டால், தேர்தல் ஆணையத்தின் தேசிய குறைதீர்வுமையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில் புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது செயல்பாட்டுக்கு வரும் இந்த செயலி, தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் வரை பயன்பாட்டில் இருக்கும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!