DMK Government
“தொழுநோயைத் துடைத்த கருணைக் கரங்கள்” : முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து மருத்துவர் எழிலன் நெகிழ்ச்சி பதிவு!
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தன் ஆட்சிக் காலத்தில் மருத்துவத் துறையில் நிகழ்த்திய மகத்தான மக்கள் பணிகள் பற்றி வாரந்தோறும் இங்கே...
கல்வி, சுகாதாரம் என்று எதை எடுத்துக்கொண்டாலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு சமூகத்தில் அவை உயர் அடுக்கில் உள்ளவர்களுக்கே சென்று சேரும். அவை யெல்லாம் சமூகத்தின் எல்லா தரப்புகளுக்கும் சென்று சேர வேண்டுமானால், அங்கே உள்ள ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும்.
திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை, சமூகப் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முன்பாக, அவை எல்லா தரப்புக்கும் சென்று சேரும் வகையில் ஒழுங்கு செய்துள்ளனர். அதனால்தான் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூகப் பொருளாதாரத் திட்டங்களின் விளைவுகள் கடைநிலையில் இருப்பவர்கள் வரை சென்று சேர்ந்துள்ளன. இந்த அடிப்படையில் செய்யப்பட்ட மிகப்பெரிய சாதனை ஒன்றைப் பார்க்கலாம்.
பிறந்தநாளில் உதயமான திட்டம்
1972-ஆம் ஆண்டில் ஜூன் 3-ஆம் தேதி கலைஞர் தன்னுடைய 48-வது பிறந்த நாளை ஒட்டி அறிவித்த திட்டங்கள்தான் தொழுநோய் ஒழிப்புத் திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்.
தொழுநோய் என்பது கொடுமையான ஒன்று. `குஷ்டம்’ என்றும் சொல்வார்கள். ‘இரத்தக்கண்ணீர்’ படத்தில் தொழுநோயாளிகளின் கஷ்டத்தை தன் நடிப்பின் மூலம் உணர்த்தியிருப்பார்
எம்.ஆர்.ராதா. அது தோலில் வரக்கூடிய கிருமி. பின்னர் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். அதன் பின்னர் விரல்கள் எல்லாம் சுருங்கி, முகமெல்லாம் விகாரமாக மாறிவிடும். அதிகமாகப் பரவும் இயல்புகொண்ட இந்த நோயினால் பல கோடிக் கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள்.
அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டிலும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதை ஒழிக்க வேண்டும் என்று கலைஞர் முடிவு செய்தார். அதனுடைய விளைவு தான் இந்தத் திட்டம்.
கலைஞர் திரட்டிய ‘கருணை’ நிதி
மத்திய அரசு தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டம் மருத்துவம் அளிப்பதை மட்டும் உள்ளடக்கியது. அதில் உள்ள நிதியை எடுத்து, கூடுதலாக மனசாட்சி உள்ள தொழிலதிபர்கள் பலரிடமும் உதவி கேட்டு நெருங்கி ஒரு கோடி ரூபாய் தனி நிதி திரட்டி, இரண்டையும் இணைத்துத்தான் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டத்தையும், தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தையும் கலைஞர் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு முழுக்க 400 - 500 தொழுநோயாளிகள் மறுவாழ்வுக் குடியிருப்புகளைக் கட்டி, ஒவ்வொன்றி லும் நூற்றுக்கணக்கான தொழுநோயாளிகளை அவர்களுடைய குடும்பத்தோடு சேர்த்து வாழ வைத்தார். ஒவ்வொரு குடியிருப்பிலும் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், ஒரு தொழில் நிபுணர், ஒரு குழந்தைகள் நல நிபுணர் கொண்ட ஒரு குழுவினர் பணியாற்றுவார்கள்.
இதன் மூலமாக முறையான மருத்துவம், குழந்தை களுக்கான கல்வி, இரண்டு வேளை முழு உணவு, தேநீர், தீனிகள், வாரத்துக்கு இரண்டு முறை அசைவ உணவு, அவர்கள் சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ, சிறு குறு தொழிற்பயிற்சிகள் ஆகியவை அவர்களுக்குக் கிடைத்தன. மேலும் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை அரசே கொள்முதல் செய்து, கூடுதலாக வாரச் சம்பளமாக இரண்டு ரூபாய் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மறுவாழ்வுக் குடியிருப்புக்கும் அரசு தரப்பில் 4.5 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது.
மறுவாழ்வுக் குடியிருப்பே கோயில்
முறையான சிகிச்சைக்குப் பிறகு அவர்களை இயல்பான சமூகவெளிக்கு அனுப்பி, அவர்கள் கற்றிருந்த தொழிற்கல்விக்கு ஏற்ப வங்கிகள் மூலம் மிக மிகக் குறைந்த வட்டிக்குக் கடன் வழங்கி தொழில் தொடங்க வழிவகை செய்தார். இவ்வளவு விரிவான திட்டம் 1970-களில் கலைஞர் அவர்களால் செயல்படுத்தப்பட்டது.
‘இந்தத் திட்டத்தில் ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகிறீர்கள்’ என்று கலைஞரிடம் கேட்டபோது, ‘சமூக ஏற்றத்தாழ்வு ஒரு நோய்க்கிருமி. அதை ஒழிக்க வேண்டிய மருத்துவர் நான்தான்’ என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி ‘எல்லோரும் கோயிலுக்குச் செல்கிறார்கள். இந்த மறுவாழ்வுக் குடியிருப்புகளைத்தான், நான் கோயிலுக்குச் செல்லும் பணியாகப் பார்க்கிறேன். இது மன நிறைவைக் கொடுக்கிறது. மறுவாழ்வு பெற்ற அவர்களின் மகிழ்ச்சி தரும் நிறைவு, அளவற்றது’ என்றும் கூறியுள்ளார்.
மறுவாழ்வுக் குடியிருப்பு ஒன்றின் நடுவில் கலைஞர் நிற்பார், அவரைச் சுற்றிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவரது கைகளைப் பற்றியபடி நிற்கும்போது கலைஞர் மகிழ்வோடு சிரித்தபடி இருக்கும் புகைப்படங்கள் இருக்கின்றன. இன்றும் சமூக நலத்துறையிடம் அவை இருக்கின்றன.
நம்முடைய ஆட்சியில் அவற்றை மீட்க வேண்டும். அந்தப் படம் ஒரு குறியீடு. கலைஞர் சமூக நலத்துறை வழியாக, தமிழ்நாட்டிற்குச் செய்தவற்றின் அடையாளம் அந்த படங்கள்.
...சிகிச்சை தொடரும்
- மருத்துவர் எழிலன்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!