DMK Government
உள்ளாட்சி துறையில் ஆண்டுக்கு ரூ.4000 கோடி ஊழல்: பணி நியமனத்துக்கு மட்டும் ரூ.200 கோடி வசூலிப்பது அம்பலம்!
தமிழகத்தில் மிகப்பெரிய நிர்வாகத் துறையான உள்ளாட்சித் துறை 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,618 கிராம ஊராட்சிகள் என விரிந்து பரந்த அமைப்பினை கொண்டது. உள்ளாட்சி கட்டமைப்பு தொடர்பான அனைத்து பணிகளுக்கும் ஆண்டு தோறும் பட்ஜெட்டில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. கல்விக்கு அடுத்து அதிக நிதி ஒதுக்கீடு உள்ளாட்சித் துறைக்கே ஒதுக்கப்படுகிறது.
உள்ளாட்சி துறையின் அமைச்சர் வேலுமணி கடந்த 10 ஆண்டுகளாக ஒரே துறையின் அமைச்சராக இருந்து வருகிறார். இவரது உறவினர்கள் துறையின் அனைத்து பணிகளையும் தங்களுக்கானதாக மாற்றிவிட்டனர். 50 ஆயிரம் ஊழியர்களை உடைய உள்ளாட்சி துறையில் ஆண்டுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் புதிய நியமனங்கள் நடைபெறுகிறது. ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலைக்கு கீழான பில் கலெக்டர், ஓஏ, வாட்ச்மேன், டிரைவர், ஓஹெச்டி ஆப்ரேட்டர், டேங்க் ஆப்ரேட்டர், துப்புரவு பணியாளர்கள் வரையிலான நியமனங்கள் தன்னிச்சையாக பண அளவுகோல் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது.
நியமனத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் வழங்கும் நபருக்கு மட்டும் பணி நியமனம் செய்து வருகின்றனர். பணி நியமனம் வகையில் ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை வசூலிக்கப்படுகிறது. கமிஷனர், பொறியாளர், உயர் அதிகாரிகள் நியமன இடமாறுதல் வகையில் ஆண்டு தோறும் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு கமிஷனர், பொறியாளர் ஆண்டிற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நகராட்சி, மாநகராட்சி வரவு செலவு அடிப்படையில் கமிஷன் துறை மேலிடத்திற்கு வழங்க வேண்டுமென்ற நடைமுறையும் தொடர்கிறது.
ஊராட்சிகளில் வாறுகால், சாலைப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், மேம்பாலங்கள், ஸ்மார்ட் சிட்டி என அனைத்து பணிகளுக்கும் 10 சதவீதம் வரை கோட்டையில் கோலோச்சுபவருக்கு லஞ்சம் போகிறது. இந்த வகையில் ஆண்டிற்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் கைமாறுகிறது.* தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் எல்.டி.இ. பல்பு கொள்முதலில் ரூ.600 விலையிலான பல்பை ரூ.4 ஆயிரத்து 500க்கு அரசாணை போட்டு, இத்தொகைக்கு கொள்முதல் செய்துகொள்ளை தொடர்கிறது.
எல்.இ.டி. பல்பு கொள்ளை ஆயிரம் கோடியை தாண்டும். * இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஊராட்சிகளில் உள்ள பல லட்சம் மின்கம்பங்களில் பொறுத்தப்பட்ட எல்.இ.டி. பல்புகளுக்கு எர்த் கொடுப்பதாக கூறி பல்பில் இருந்து 4 மீட்டர் வயரை, அரையடி இரும்பு கம்பியில் பொருத்தி தரையில் அடித்ததற்கு ஒரு மின்கம்பத்திற்கு ரூ.800 பணத்தை உள்ளாட்சிகளில் கணக்கு எழுதி மெகா கொள்ளை அடித்த சம்பவம் உலக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
ரூ.800 செலவில் போடப்பட்ட எர்த் எந்த மின் கம்பத்திலும் 10 நாட்களுக்கு பிறகு இல்லை. மாயமாகி விட்டது. இந்த வகையில் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் கொள்ளை நடந்துள்ளது. * கொரோனா காலத்தில் 30 ரூபாய் விலையிலான விளக்குமாற்றை ரூ.300 விலைக்கும், கிலோ ரூ.27 மதிப்பிலான ப்ளீச்சிங் பவுடரை ரூ.300க்கும், லிட்டர் ரூ.50 விலையிலான பினாயிலை ரூ.250க்கு கொள்முதல் செய்து கோடிகளை கல்லா கட்டி உள்ளனர். அத்துடன் ப்ளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்புத்தூளை வாங்கியும், ஒரு டன் பவுடர் வாங்கி 10 டன் பவுடர் வங்கியதாக போலி பில்களை வைத்து பணம் எடுத்த நிகழ்வுகள் நடந்துள்ளன.
கொரோனா கால கொள்முதலில் மட்டும் ஆயிரம் கோடி கொள்ளை நடந்துள்ளது. * ஊராட்சிகளுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு குப்பைத் தொட்டியை ரூ.25 ஆயிரத்திற்கு அரசாணை போட்டு கொள்முதல் செய்தனர். ஜி.எஸ்.டி. நடைமுறை வந்த பிறகு, அதே குப்பைத் தொட்டியை ரூ.29 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்து வருகின்றனர். * மாநகராட்சி, நகராட்சிகளுக்கு குப்பை அள்ளுவதற்கான பேட்டரி வண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை சி.எஸ்.ஆர். என்ற மத்திய அரசு நிதியில் இதனை ரூ. ஒன்றரை லட்சம் மதிப்பிலான வண்டியை ரூ. இரண்டரை லட்சத்திற்கு கொள்முதல் செய்கின்றனர்.
* நூறு நாள் வேலை திட்டத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்போருக்கான கொட்டகை அமைத்துத் தர டெண்டர் நடைமுறை கூடாது. பயனாளிகள் மூலமே செய்ய வேண்டும். ஆனால் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கொட்டகையை ரூ.1 லட்சத்திற்கு போட்டதாக ரூ.40 ஆயிரம் கொள்ளை நடக்கிறது. * பசுமை வீடுகள், பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் இரும்புக் கம்பி, சிமென்ட்களை உள்ளாட்சித்துறை மூலமே பெற வேண்டும். கிலோ ரூ.40 உள்ள கம்பியை, ரூ.50க்கு பயனாளிகளுக்கு தருகின்றனர்.
குமரி மாவட்டம்:
‘‘பொதுப்பணம் சூறையாடப்படுவதற்கு கிருஷ்ணகுமாரே சாட்சி’’
குமரி மாவட்ட அ.தி.மு.க.வின் தோவாளை ஒன்றியச் செயலாளராக இருந்தவர் கிருஷ்ணகுமார். கூடவே தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் உதவிக்கரமாக வலம் வந்தவர். திடீரென்று அவர் தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 2021 சட்டமன்ற பொது தேர்தலில் திறம்பட தேர்தல் பணியாற்றுவதற்கு எனது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் தோவாளை ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்திட வேண்டும் என கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினார். அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
கூடவே கிருஷ்ணகுமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கட்சியினர் மத்தியில் வலம் வந்த நிலையில் அவர் தன்னிலை விளக்கம் ஒன்றை வாட்ஸ் ஆப் ஆடியோவாக பதிவிட்டுள்ளார். அதில், தோவாளை யூனியன் சேர்மன் திட்டபணிகளுக்கு ஒப்பந்தகாரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்வதாக கூறுகிறார்கள். நான் யாரிடமும் இருந்து பணம் பெற்றுக்கொள்ளவில்லை. டென்டர்களில் தலையிடுவது இல்லை. எந்த திட்டம் எத்தனை கோடியில் நடக்கிறது என்று புட்டு புட்டு வைத்தோடு, ‘‘நான் உங்களை சேர்மன் ஆக்கினேன், தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றது எப்படி? என ஆண்டவனுக்கும், எனக்கும்தான் தெரியும்’’ என்று டென்டர்களில் நடைபெறும் முறைகேடு முதல் உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேடுகள் வரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக நாகர் கோவிலில் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘‘சமீபத்தில் அ.தி.மு.க. தோவாளை ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார் ஒரு செய்தியை வாட்ஸ் ஆப்பில் உலாவவிட்டார்.
உள்ளாட்சித் திட்டங்களில் அ.தி.மு.க. டென்டர் கமிஷன் முறைகேடு அம்பலம் என்று செய்தி வந்துள்ளது. தோவாளையில் திட்ட பணிகள் முறைகேடு குறித்தும் பணம் பங்கிடுதல் குறித்தும் வெளிப்படையாக சொல்லி அது வந்துள்ளது. பொதுப்பணம் சூறையாடப்படுவதற்கு கிருஷ்ணகுமாரே சாட்சியாக விளங்கிக்கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட ஆட்சியை மாற்ற உங்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.
திருச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளது. மேலும் இலுப்பூர், அறந்தாங்கி, ஆலங்குடி, அரிமளம், கீரனூர், கீரமங்கலம், அன்னவாசல், பொன்னமராவதி உள்ளிட்ட 8 பேரூராட்சிகள் உள்ளது. தேர்தல் நடைபெறாத காரணத்தால் நகராட்சியில் செய்யப்படும் பணிகளுக்கு அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ரூபாய் பொய் கணக்கு எழுதி கொள்ளையடித்து வருகின்றனர். கொரோனா நேரத்தில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி வாங்கியதில் லட்சக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பதால் சாலை அமைப்பது, பொருட்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பொய் கணக்கு எழுதி லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளயைடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்ற ஓராண்டு காலம் ஆகியும் தற்போது வரை போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கடந்த காலங்களில் ஊராட்சிக்கு தேவையான தெருவிளக்கு, குப்பை வண்டிகள் உள்ளிட்ட பொருட்களை ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சி நிதியில் பொருட்கள் வாங்கப்படும்.
ஆனால் தற்போதைய அ.தி.மு.க. அரசில் ஊராட்சிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அரசே விநியோகம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தரமற்ற பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டு இது தொடர்பாக மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாநகராட்சியில் கடந்த 2005ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மாநகரில் பாதாள சாக்கடை பிரச்னை பிரதான பிரச்சினையாக உள்ளது. பல இடங்களில் கழிவுநீர் ஆறுபோல் நகரில் ஓடுகிறது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்வதில்லை. இதை சரிசெய்கிறேன் என்ற பெயரில் பல லட்சம் வீணாகிறது. இதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை என்றும் எல்லா பணிகளிலும் கமிஷன் தலைவிரித்து ஆடியதால் தரமற்ற நிலையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். பூங்காக்களில் அமைக்கப்பட்டதில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது..
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!