DMK Government

“ஊர்வலத்தில் கடை மீது கல் வீசியது சின்ன விஷயம்.. அதையெல்லாம் பெரிசு பண்ணாதீங்க” - வானதி ‘அடடே’ விளக்கம்!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வந்திருந்தார். அதையொட்டி, விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனப் பேரணி நடத்திய பா.ஜ.கவினர், மத வெறுப்பைத் தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பியதோடு, அங்கிருந்த கடைகளை மூடச் சொல்லி கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.

மதக் கலவரங்களுக்குப் பெயர்போன உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையின்போது தமிழகத்தின் கோவையில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவே ஆதித்யநாத் கோவை வந்தார் என்பதால் இச்சம்பவம் குறித்து வானதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதுகுறித்துப் பேசிய பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், “உத்தர பிரதேச முதலமைச்சர் பங்கேற்ற ஊர்வலத்தின்போது செருப்புக்கடையில் கல் வீசப்பட்டது சிறு சம்பவம். அதை ஊதி பெரிதாக்கிவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் மத வெறுப்பால் நிகழ்ந்த அசம்பாவித சம்பவத்தை ஆதரிக்கும் நோக்கில் வானதி சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அரவக்குறிச்சி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு, பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மத வன்முறையைத் தூண்டுவதற்கு பா.ஜ.க எந்த அளவிற்கும் இறங்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “தூக்கிப்போட்டு மிதிச்சேன்னா பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும்” - பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை!