DMK Government
"பாஜகவுடன் கூட்டணி அமைத்தும் அவர்களின் லட்சியம் நிறைவேறவிடாமல் கட்டுப்படுத்தியது தி.மு.க”- ஆ.ராசா பேச்சு!
“பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தும், பா.ஜ.கவின் லட்சியங்களை நிறைவேறவிடாமல் கட்டுப்படுத்தியது தி.மு.க” என தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசினார்.
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தி.மு.கழக முன்னணியினர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., பேசுகையில், “தி.மு.க பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தை முன்வைத்தது. அதன்படி, பா.ஜ.கவுடன் திமுக கூட்டணியில் இருக்கும் வரை, பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டக் கூடாது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து பிரிவு 370- ஐ நீக்கக்கூடாது. பொது சிவில் சட்டம் கொண்டுவரக் கூடாது. இந்த மூன்றுதான் பா.ஜ.கவின் ஜீவாதாரக் கொள்கைகள். இந்த மூன்றையும் தி.மு.க தடுத்து நிறுத்தி வைத்தது.
ஆனால், பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி அமைந்த பின்னர், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. பொது சிவில் சட்டம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் உள்ளது.
நாங்கள் பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்தபோது பா.ஜ.கவின் லட்சியம் நிறைவேறாமல், மதவாதம் வளராமல் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். ஆனால் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைந்தவுடன் நிலைமை மாறிவிட்டது.
பா.ஜ.க ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் கட்சிகளின் கட்டுமானத்தை அடித்து சிதைக்கிறது. இந்த வேலையை மோடி தொடர்ந்து செய்து வருகிறார். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் தி.மு.க மீது அவர்களால் கை வைக்க முடியவில்லை.
தமிழ்நாட்டு அரசியலில் எதிர்வரும் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னர், தி.மு.க மற்றும் பிற மாநில கட்சிகள் மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து பா.ஜ.கவை ஆட்சியில் இருந்து நீக்கவேண்டும். அதற்காக இந்தத் தேர்தல் முக்கியமானது.” எனப் பேசினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!