DMK Government
“வந்தாரை வாழவைக்கும் சென்னை எப்போதும் கழகத்தின் கோட்டை” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
"அ.தி.மு.க அரசு செய்துள்ள ஊழல்களை எதிர்க்கட்சியான நாங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளோம்; பத்தாண்டு காலமாக ஆட்சி நடத்தும் நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா?" எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (21-03-2021), தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, அம்பத்தூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
அப்போது தி.மு.க லைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்குப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று கேட்பதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன்.
அம்பத்தூர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் அருமை நண்பர் ஜோசப் சாமுவேல் அவர்கள், பகுதிக் கழகத்தின் செயலாளராக கட்சிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே மாநகராட்சி மன்ற உறுப்பினராக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு மண்டல பொறுப்பாளராக இருந்து இந்த அம்பத்தூர் பகுதிக்கு என்னென்ன பணிகள் ஆற்றி இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே ஒரு எளிய தொண்டரை வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைத்து இருக்கிறோம் அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், வில்லிவாக்கம் தொகுதியின் கழக வேட்பாளராக வெற்றியழகன், பெயரிலேயே வெற்றி இருக்கிறது.
அவர் நம்முடைய இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் அருமைப் பேரன். ஒரு இளைஞராக அவர் உங்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற அந்த உணர்வோடு அவரைத் தேர்ந்தெடுத்து இன்றைக்கு இந்தத் தொகுதியில் ஒப்படைத்திருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் எம்.கே.மோகன் அவர்கள், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றி தொண்டாற்றி மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்றவர். எனவே அவரை மறுபடியும் தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம்.
எனவே அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மதுரவாயல் தொகுதியில் சட்டமன்றத்திற்கு போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி அவர்கள், 2 முறை ஊராட்சித் தலைவராக இருந்து மக்களுடைய உள்ளத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றவர். ஊராட்சித் தலைவர் பணி என்றால் இவ்வாறுதான் பணியாற்ற வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிய செயல் வீரர். இப்போது பகுதிக் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை நீங்கள் எல்லாம் தேடி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன்.
13 வயதில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவனாக, இந்தியை எதிர்த்து, “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே” என்று போர்ப்பரணி பாடிய தலைவர் கலைஞருடைய மகனான ஸ்டாலின் இன்றைக்கு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். எனக்கும் 50 ஆண்டு கால அரசியல் பின்னணி - அரசியல் வரலாறு உண்டு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இப்போது இங்கே நிற்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் நான் வாக்குக் கேட்க வரவில்லை. இங்கு நானும் வேட்பாளர் தான் - முதலமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர்.
சென்னை நகரத்திற்கு உட்பட்டு இருக்கும் இந்த அம்பத்தூர் நகரத்திற்கு வந்திருக்கிறேன். “வந்தாரை வாழவைக்கும் சென்னை” எப்போதும் கழகத்தின் கோட்டை. அந்த சென்னையின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றத்தான் இந்தத் தேர்தல்.
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பாழ்பட்டு போயிருக்கிறது. ஐம்பதாண்டு காலம் பின்னோக்கி சென்றிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள், ஊர் ஊராகச் சென்று நான் சிறப்பாக ஆட்சி நடத்துகிறேன் – சிறப்பாக மக்களுக்காக தொண்டு செய்கிறேன் - எனக்கு பல விருதுகள் வந்து சேர்ந்திருக்கிறது என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.
‘இந்தியா டுடே’விடமிருந்து எனக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அது உண்மைதான். ஆனால் அந்தக் கட்டுரையைத் தெளிவாகப் படித்தால் உண்மை புரியும்.
அதில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் என்று சொல்லி அதற்குக் காரணம், 50 ஆண்டு காலமாக பல்வேறு சமூகப் பணிகளையாற்றியதால் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அதற்கு அடுத்த பக்கத்தில் இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் மட்டும் கணக்கெடுத்து “இந்தியா டுடே’ அளவீடு செய்கிறது. அதில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் என்பதைக் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.
உட்கட்டமைப்பில் 20-வது இடத்தில் இருக்கிறது, 5 ஆண்டுகளின் செயல்பாட்டில் 19-வது இடத்தில் இருக்கிறது, விவசாயத்தில் 19-வது இடத்தில் இருக்கிறது, சுற்றுலாவில் 18-வது இடம், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் 18-வது இடம், தொழில்முனைவோர் முன்னேற்றத்தில் 14-வது இடம், ஆட்சி நிர்வாகத்தில் 12-வது இடம், தூய்மையில் 12-வது இடம், சுகாதாரத்தில் 11-வது இடம், கல்வியில் 8-வது இடம், பொருளாதார வளர்ச்சியில் 8-வது இடம், சுற்றுச்சூழலில் 6-வது இடம், சட்டம் ஒழுங்கில் 5-வது இடம், இதுதான் பழனிசாமி வாங்கியிருக்கும் இடம். பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்திருக்கும் பழனிசாமி. இன்றைக்கு விவசாயி, விவசாயி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்,
மொத்தம் 20 மாநிலங்களில் கணக்கெடுத்ததில் விவசாயத்தில் தமிழ்நாடு 19-வது இடத்தில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் நான் வாங்கிய விருதுகளை தி.மு.க. வாங்கி இருக்கிறதா? என்று ஒரு கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தி.மு.க. வாங்கிய விருதுகளை நான் சொன்னால் ஒரு நாள் போதாது. விருது என்றால் விருது கொடுப்பவர்கள் உயர்வான இடத்தில் இருக்க வேண்டும் அல்லது அனைவருக்கும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் அப்படித்தான் பல விருதுகளை நாம் வாங்கியிருக்கிறோம். உலக வங்கி, வெளிநாடுகள், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், பிரதமர்களால் நாம் பல்வேறு பாராட்டுகளை - விருதுகளை நம்முடைய ஆட்சிக் காலத்தில் வாங்கியிருக்கிறோம். அதில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
உலக சுகாதார நிறுவனம் - குழந்தைகள் நலம் பேணியதற்கான விருதை 1996-ஆம் ஆண்டு நமக்கு வழங்கியிருக்கிறது, ஆசியாவிலேயே குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 1999-ஆம் ஆண்டு உலக வங்கி நம்மை பாராட்டி இருக்கிறது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் 6 விருதுகளை நாம் பெற்றிருக்கிறோம். அதை இந்த அடியேன் ஸ்டாலின்தான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, நேரடியாக சென்று வாங்கி வந்தேன்.
‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தைத் திறம்பட செயல்படுத்தியதற்காக உலகவங்கி மனதார பாராட்டி இருக்கிறது, பொது விநியோகத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக உச்சநீதிமன்றமே பாராட்டி இருக்கிறது, மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தை இந்தியாவிலேயே சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாட்டை அன்றைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டி நமக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறது, கொத்தடிமை முறையை ஒழித்ததற்காக உச்சநீதிமன்றம் பாராட்டி இருக்கிறது, மாற்றுத் திறனாளிகளுக்குக் கூட்டுறவு வங்கி மூலமாக கடன் வழங்கி உயர்த்தியதற்காக குடியரசுத் தலைவர் விருது 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
சிறந்த நிர்வாகத் திறமைக்காக நகராட்சித் துறையானது பன்னாட்டு நற்சான்றிதழை 2008-ஆம் ஆண்டு பெற்றது, கருவுற்ற தாய்மார்கள் நலனைப் பேணும் திட்டங்களுக்காக ஜே.ஆர்.டி டாடா விருது தரப்பட்டது. டெல்லி சென்று இந்த அடியேன்தான் நேரடியாக வாங்கி வந்தேன். தேசிய அளவில் மிகச்சிறந்த கிராமங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சார்ந்த 1,476 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்திய அளவில் ஊரக வளர்ச்சியில் முதலிடம், இந்திய அளவில் உள்ளாட்சித் துறையில் முதலிடம். இந்த விருதுகளை எல்லாம் பெற்றது தான் தி.மு.க. அரசு.
இவை எல்லாம் இப்போது முதலமைச்சராக இருக்கும் பழனிசாமிக்கு தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஊழல், கரப்ஷன் - கமிஷன் – கலெக்ஷன். இதைத்தான் அவர் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு தமிழ்நாடு என்று சொன்னாலே தொழில் நிறுவனங்கள் ஓடிவிடும் நிலையில் தான் இருக்கிறது. தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வந்தால் அதற்கு இங்கிருக்கும் ஆட்சி கமிஷன் கேட்கிறது. அதனால் பக்கத்து மாநிலங்களுக்கு ஓடி விடுகின்றனர். எனவே பழனிசாமி கையாலாகாதவர் என்பதற்கு வேறு சாட்சி அவசியம் இல்லை.
நம்முடைய கழக ஆட்சியில், நான் தொழில்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று இருந்தது உங்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து திருப்பெரும்புதூர் வரை, சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வரை, சென்னையிலிருந்து சோழிங்கநல்லூர் வரை பல்வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. அது ஏன் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. தொழில் நிறுவனங்கள் ஏன் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. இப்போது இந்த ஆட்சியின் மீதும், முதலமைச்சர் மீதும் தொழில் முனைவோருக்கு இம்மியளவு கூட நம்பிக்கை இல்லை. அதனால்தான் இன்றைக்கு இளைஞர்கள் வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் கொடுமை நம் நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.
மக்களை ஏமாற்றும் ஆட்சிதான் இந்த ஆட்சி. மக்களைச் சுரண்டும் ஆட்சி தான் இந்த ஆட்சி. எனவே மக்களை வெறுக்கும் இந்த ஆட்சியை நாம் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் நீங்கள் எல்லாம் உதயசூரியனுக்கு ஆதரவு தரவேண்டும்.
தமிழ்நாட்டில் 5 முறை கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் என்னென்ன திட்டங்களை, சாதனைகளை மக்களுக்குச் செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அதை மனதில் கொண்டு நாம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். சென்னையில் புயல் - வெள்ளக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த, சென்னைப் பெருநகர் வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.
சென்னை உள்ளிட்ட மாநகரங்களிலும் - நகரங்களிலும் சொந்தமாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு முதலீட்டு கழகம் மூலமாக அல்லது வங்கிக் கடன் மூலமாக ஆட்டோ வழங்குவதற்கு அரசுசார்பில் 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும், மதுரவாயலில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை உருவாக்கப்படும், சென்னையில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைத்து எல்லா வகை போட்டிகளுக்கும், உயர்தரப் பயிற்சிகள் வழங்கப்படும், சென்னை போன்ற பெருநகரங்களில் நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள் செய்து தரப்படும்.
அதேபோல பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும், கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும், மகளிருக்கான செலவை குறைக்க உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம், விலைவாசியை குறைக்க, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், மாணவர்கள், இளைஞர்களுடைய வேலைவாய்ப்பை மனதில் வைத்துப் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. மாணவர்கள் வங்கிகளில் வாங்கியிருக்கும் கல்விக் கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும், அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள், நீர் நிலைகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்,
சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களைப் பாதுகாக்கும் பணியில் 75,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள், தமிழகம் முழுவதும் அறநிலையங்கள் பாதுகாப்பில் 25,000 இளைஞர்கள் திருக்கோயில்கள் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள், மக்கள் நலப் பணியாளர்களாக 25,000 பெண்கள் நியமிக்கப்படுவார்கள், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதியாக உருவாக்கப்படும்.
அதேபோல கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணத் தொகையாக கொடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே கொடுத்தார்கள். எனவே மீதமிருக்கும் 4,000 ரூபாய் நாம் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், தலைவர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்,
மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். இப்போது பொதுவாக இருக்கும் உறுதிமொழிகளை வாக்குறுதிகளை நான் சொன்னேன். இந்த 4 தொகுதிகளுக்கான சில உறுதிமொழிகளை சொல்கிறேன், மதுரவாயலில் அரசு கலை - அறிவியல் கல்லூரி தொடங்கப்படும், மதுரவாயல், அண்ணாநகர் மருத்துவமனை நவீனப்படுத்தப்படும், அம்பத்தூர் முகப்பேரில் மின் தகன மேடை அமைக்கப்படும், சிதைந்துபோன குடிசைமாற்று வீடுகள் மீண்டும் கட்டித் தரப்படும், சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும், மதுரவாயலில் 147-வது வட்டத்தில் அரசு மருத்துவமனை தொடங்கப்படும், கங்கை அம்மன் கோயில் குளம் ஆழப்படுத்தப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்படும், செனாய் நகரில் தமிழறிஞர் மு.வரதராசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும்.
தலைவர் கலைஞர் அவர்கள் எப்போதும் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, திருக்குறள் போன்று இரண்டு வரிகளைச் சொல்வார். “சொல்வதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்”. அதே வழியைப் பின்பற்றி கலைஞருடைய மகனான இந்த ஸ்டாலினும் ‘சொன்னதைச் செய்வான், செய்வதைத்தான் சொல்வான்’. இவையெல்லாம் அடுத்த 5 ஆண்டுகளில் நாம் நிறைவேற்றப் போகும் வாக்குறுதிகள்.
ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு போல ஒரு கூட்டத்தை நடத்தி, அந்த கூட்டத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டேன். அதாவது ‘ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் தொலைநோக்குப் பார்வையோடு பத்தாண்டு காலத்திற்கான 7 உறுதிமொழிகளை அப்போது நான் சொல்லியிருந்தேன்.
தமிழ் மண்ணில், இந்தியைத் திணித்து, நீட்டையும் கொண்டுவந்து திணித்து, அதன் மூலமாக மதவெறியைத் தூண்ட நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இது திராவிட மண் - தந்தை பெரியார் பிறந்த மண் – அண்ணா பிறந்த மண் - நம்முடைய கலைஞர் பிறந்த மண் மறந்துவிடாதீர்கள். உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகளெல்லாம் இந்த தமிழ்நாட்டில் பலிக்காது. அதனால் தமிழக மக்கள் வாக்களிப்பதற்கு முன்பு யோசித்து வாக்களிக்க வேண்டும்.
இந்த தேர்தல் என்பது நமது சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல். நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்பதற்காக நடக்கும் தேர்தல். நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அண்ணாவிற்குப் பக்கத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தில் நம்முடைய வெற்றி மாலையைக் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு இடம் கொடுக்க மறுத்தார்கள். அவர் மறைந்த நேரத்தில் அண்ணாவிற்கு பக்கத்தில் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்தார். அவருக்கு இடம் தர மறுத்த ஆட்சி தான் இந்த அயோக்கியர்கள் ஆட்சி. மறந்துவிடாதீர்கள்.
கலைஞர் அவர்கள் ஒரு சாதாரண தலைவர் அல்ல. 5 முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தவர். தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கான தலைவராக இருந்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
இந்த நாட்டிற்கு எத்தனையோ பிரதமர்களை அடையாளம் காட்டிய தலைவர். ஜனாதிபதிகளை உருவாக்கிய தலைவர். அப்படிப்பட்ட தலைவர் கலைஞருக்கு ஆறடி இடம் கொடுக்க மறுத்த பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இனி இடம் கொடுக்கலாமா? எனவே தயாராகுங்கள்.
உதயசூரியனுக்கு ஆதரவு தாருங்கள். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தாருங்கள் என்று அன்போடு, பண்போடு, பாசத்தோடு, பரிவோடு, உரிமையோடு, உறவோடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களில் ஒருவனாக அனைத்திற்கும் மேலாக தலைவர் கலைஞரின் மகனாக இருந்து உங்கள் பாதம் தொட்டுக் கேட்கிறேன். உதயசூரியனுக்கு ஆதரவு தாருங்கள். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
திருநின்றவூரில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில், ஆவடி தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர், 10 ஆண்டுகாலம் ஆவடி நகர மன்றத்தின் தலைவராக திறம்பட பணியாற்றிய ஆற்றல் மிக்கவர் - மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் அவர்கள், அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருவள்ளூர் தொகுதியில் கழக வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் வி.ஜி.இராஜேந்திரன் அவர்கள், ஏற்கனவே திருவள்ளூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த தொகுதி மக்களின் அன்பை ஆதரவைப் பெற்ற சிறந்த வேட்பாளரைத் தான் மீண்டும் உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பூவிருந்தவல்லி தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி அவர்கள், ஏற்கனவே இடைத்தேர்தலில் நின்று வென்று சட்டமன்றத்தில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக தொகுதி மக்களின் பிரச்சினைகளை எடுத்துப் பேசி நன்மதிப்பைப் பெற்றவராக விளங்குபவர். ஏற்கனவே நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டு மக்களுக்காக - தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.
எனவே அவரைத்தான் மீண்டும் பூவிருந்தவல்லி தொகுதிக்கு வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருத்தணி தொகுதிக்கு நம்முடைய கழக வேட்பாளராக அருமை சகோதரர் சந்திரன் அவர்கள், நகர்மன்றத் தலைவராக திருத்தணியில் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய செயல் வீரர். மக்கள் பணியாக இருந்தாலும் கட்சிப் பணியாக இருந்தாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதிப் பணியாற்றும் ஆற்றலாளர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தரவேண்டும் என்று உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளுக்குரிய தொண்டை மண்டலத்திற்கு உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். கலைஞருடைய மகனாக வந்திருக்கிறேன். 50 ஆண்டு கால அரசியல் வாழ்வின் பின்னணியைப் பெற்றிருக்கும் உரிமையோடு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
இந்த ஆவடி தொகுதி மக்களுக்கு ஒரு முக்கிய கடமை இருக்கிறது. மாஃபா பாண்டியராஜனை தோற்கடிக்க வேண்டும். அ.தி.மு.க.வில் இருந்து கொண்டு பா.ஜ.க. கட்சியை நடத்துகிறவர். அவர் முழுமையான சங்கி. அதனால்தான் அவரைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.
கீழடி தமிழர் பண்பாட்டை பாரதப் பண்பாடு என்று சொல்லி மழுங்கடித்த அவர் தமிழ் வளர்ச்சிச் துறை அமைச்சர் அல்ல, சமஸ்கிருத வளர்ச்சித்துறை அமைச்சர். அவர் அ.தி.மு.க.வில் இருப்பதற்கு முன்பு, அவரை ஒரு கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் தலைவர் நீக்கினார் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் நீக்கினார்? அவர் மாஃபா பாண்டியராஜனாக அல்லாமல், மாஃபியா பாண்டியராஜனாக இருந்தார். அதனால் கட்சியை விட்டு நீக்கினார். அதற்குப்பிறகு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இப்போது பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அ.தி.மு.க.வில் இருந்து கொண்டிருக்கிறார். அந்த மாஃபியா பாண்டியராஜனை இந்தத் தொகுதியில் இருக்கும் மக்கள் துரத்தி அடிக்க வேண்டும். அதுதான் உங்கள் கடமை.
இப்போது முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தோல்வி பயத்தின் காரணமாக ஏதேதோ உளற ஆரம்பித்திருக்கிறார். அதாவது தி.மு.க.வைப் பற்றி விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். ஊழலில் ஊறிப்போன கட்சி தி.மு.க. என்று சொல்லுகிறார்.
மிஸ்டர் பழனிசாமி அவர்களே… மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி அவர்களே… நீங்கள் எம்.ஜி.ஆரை பார்த்திருக்கக்கூட மாட்டீர்கள். அந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க.வின் மீது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்லி அதற்காக சர்க்காரியா கமிஷன் போடப்பட்டது. அந்த சர்க்காரியா கமிஷன் விசாரணையில், யார் குற்றம் சொன்னார்கள் என்று எம்.ஜி.ஆர். இடம் கேட்ட போது, அவர் இதை நான் சொல்லவில்லை. சேலம் கண்ணன்தான் சொன்னார். அதனால்தான் நான் அதைச் சொன்னேன். இதைப் பற்றி எனக்கு தெரியாது என்று சொன்னார். எனவே எம்.ஜி.ஆரால் குற்றம் சொல்லப்பட்டு அதற்குப் பிறகு சர்க்காரியா கமிஷன் போடப்பட்டு அதில் எந்தவித குற்றமும் நிரூபிக்கப்படாத தி.மு.க. தான் இன்றைக்கு இருக்கும் தி.மு.க.! மிஸ்டர் பழனிசாமி அவர்களே அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியாது.
அதுமட்டுமல்ல, ஊழல் செய்த காரணத்தினால் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்குச் சென்றவர். இந்தியாவிலேயே எந்த முதலமைச்சரும் ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறைக்குச் செல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் முதலமைச்சர் ஒருவர் ஊழல் செய்து சிறைக்குச் சென்றார்.
பின்னர் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போது ஜெயலலிதா இறந்து விட்ட காரணத்தால் சிறைக்கு செல்லவில்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறீர்களா? அப்படிப்பட்ட நிலையில் தி.மு.க.வைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? என்ற கேள்வியைத் தான் நான் கேட்க விரும்புகிறேன்.
அதுமட்டுமல்ல, 2ஜி-யை பற்றி பேசுகிறார். அந்த 2ஜி பிரச்சினை வந்தபோது, கலைஞர் அவர்கள் உடனே ராஜாவை அழைத்து, “உன்னை நான் நம்புகிறேன். நீ எந்தத் தவறும் செய்திருக்க மாட்டாய். இருந்தாலும் ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை உன் மீது சுமத்தி இருக்கிறார்கள். நீ உடனடியாக அதை இல்லை என்றுநிரூபிக்க வேண்டும். எனவே அமைச்சர் பதவியிலிருந்து நீ விலகி அதை நிரூபித்து விட்டு வா. உன்னைத் தம்பியாக நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அவரைld தட்டிக் கொடுத்து அனுப்பிவைத்தார்.
இது கலைஞர் வரலாறு. சி.பி.ஐ. போட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தவிடுபொடியாக்கி விட்டு வெளியில் வந்தவர் தான் நம்முடைய சிங்கம் ராசா. அவர்கள். எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. அந்த வழக்கில் ராசா, கனிமொழி உட்பட அத்தனை பேரும் விடுதலை ஆனார்கள்.
மிஸ்டர் பழனிசாமி அவர்களே… மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி அவர்களே… உங்கள் மீது நம்முடைய கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி அவர்கள் ஒரு வழக்குப் போட்டாரே.
உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையைப் பயன்படுத்தி உங்கள் சம்பந்திக்கு – சம்பந்தியின் சம்பந்திக்கு விதி முறைகளை மாற்றி கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டிருக்கிறீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் அதில் முகாந்திரம் இருக்கிறது. இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
உண்மையிலேயே உங்களுக்கு ரோஷம், சூடு, சொரணை இருந்திருந்தால் - சி.பி.ஐ. விசாரணையைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கினீர்கள். இதுதான் உங்கள் லட்சணம். நீங்கள் எங்களைப் பார்த்து விமர்சிப்பதா?
10 வருடங்களாக உங்கள் ஆட்சி நடக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரையில் 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை. உங்கள் ஆட்சியில் இருக்கும் குறைபாடுகளை முறைகேடுகளை நீங்கள் செய்கிற ஊழல்களை, கமிஷனை, கலெக்சனை, கரப்சனை நாங்கள் வரிசையாக ஆதாரங்களோடு சொல்கிறோம்.
நீங்கள் ஆதாரத்தோடு சொல்லுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள். 10 வருடங்களாக மக்களுக்கு இதுபோன்ற பணிகளைச் செய்து இருக்கிறோம் என்று ஆதாரத்தோடு சொல்லுங்கள். அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம்
10 வருடங்களாக என்ன செய்தீர்கள் என்று நாங்கள் கேட்கிறோம். அதைச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் செய்து கொண்டிருக்கிறீர்கள். மோடிக்கு சலாம் போட்டு, கையைக் கட்டி, வாயை பொத்தி அடிமையாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். அதுதான் உங்களுடைய 10 வருட கால சாதனை.
4 வருடங்களாக ஆட்சியை நடத்தி விட்டேன் என்கிறீர்கள். 4 ஆண்டுகளாக மந்திரிகளுக்கும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் நீங்கள் கொள்ளை அடிக்கின்ற பணத்தில் சதவிகித அளவில் பங்கு கொடுத்து ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறீர்களே தவிர, ஜனநாயக முறைப்படி நீங்கள் ஆட்சி நடத்தவில்லை.
நான் முன்பு 200 இடங்களில் வெல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது 10 நாட்களுக்கு மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் ஏற்பட்ட உணர்வின் அடிப்படையில் பார்த்தால், 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம்.
பா.ஜ.க. வாஷ் அவுட் அதுவேறு. நாடாளுமன்றத் தேர்தலிலும் வாஷ் அவுட் செய்துவிட்டோம். ஒரே ஒரு அ.தி.மு.க. எம்.பி. வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வில் இருந்தும் ஒரு எம்.எல்.ஏ. கூட சட்டமன்றத்தில் வந்து விடக் கூடாது. அவ்வாறு வந்தால் அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ., தான். அதை முதலில் மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். இப்போது பழனிசாமி அவர்கள் விவசாயி, விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பச்சைத் துண்டை போட்டுக்கொண்ட பச்சைச் துரோகி அவர்.
டெல்லியில் ஏறக்குறைய 120 நாட்களாக குடும்பம் குடும்பமாக மழையிலும் வெயிலிலும் பனியிலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு சர்வாதிகாரத் தன்மையாக, ஓட்டெடுப்பு நடத்தாமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் நிறைவேற்றி இருக்கிறது.
அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாழ்பட்டுப் போயிருக்கிறது. விவசாயம் அழிந்து போகிறது. எனவே அதைக் கண்டித்து நாமெல்லாம் போராட்டம் நடத்தினோம். ஆனால் விவசாயி விவசாயி என்று சொல்லும் இந்த பச்சைத் துரோகி பழனிசாமி, அவர்களையெல்லாம் புரோக்கர்கள் - தரகர்கள் என்று சொல்லுகிறார். ஆனால் அவர் சேலத்தில் வெல்லமண்டி நடத்தி கமிஷன் வாங்கியவர். அவர் இன்றைக்கு விவசாயிகளைப் பார்த்து கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.
குடிமராமத்து என்ற பெயரில் மிகப் பெரிய கொள்ளை நடந்து இருக்கிறது. போலியான பில் போட்டு சவடு மண்ணில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார். இந்த வேஷம் எல்லாம் நிச்சயமாக உறுதியாக வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஒட்டுமொத்தமாக கலையப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
அவருக்கு ஆளத்தெரியாது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை நாம் சொல்ல முடியும். இன்றைக்கு தமிழ்நாட்டின் கடன் சுமை சுமார் 6 லட்சம் கோடி. 2011ஆம் ஆண்டு நாம் ஆட்சியை விட்டு வந்த போது 1 லட்சம் கோடி கடன். சுதந்திரம் வாங்கி 70 வருடங்களாக 1 லட்சம் கோடி தான்.
இந்த 10 வருடங்களில் 5 லட்சம் கோடி உயர்ந்து, 6 லட்சம் கோடியாக இருக்கிறது. இதுதான் ஆளுகின்ற லட்சணமா? சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் எங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கிறது என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்களே… இதுதான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இலட்சணமா? பெண்களுக்கு பாதுகாப்பு தருவதில் நாங்கள் தான் முதலிடம் என்று சொல்லுகிறீர்களே… இந்தப் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி பாலியல் கொடுமை ஒன்றே போதுமே.
கல்வியில் சிறந்து விளங்கி விருதுகள் வாங்கி இருக்கிறோம் என்று பெருமையோடு பேசுகிறாரே… நீட் தேர்வினால் ஏறக்குறைய 14 மாணவர்கள் இறந்திருக்கிறார்கள். இதுதான் கல்வியில் சிறந்து விளங்கும் லட்சணமா? அதே போல குட்கா விவகாரம். ஒரு அமைச்சரின் பெயரையே ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என்று சொல்லி இருக்கிறோமே. இந்த ஆட்சியில் எல்லாம் மந்திரிகளுக்கும் அடைமொழி இருக்கிறது. செல்லூர் ராஜூவிற்கு ‘தெர்மாகோல் செல்லூர் ராஜூ’. அதேபோல விருதுநகர் மாவட்டம் ராஜேந்திரபாலாஜிக்கு ‘பலூன் ராஜேந்திரபாலாஜி’.
எனவே இது ஒரு கிரிமினல் ஆட்சி. கரப்சன் கேபினட். ஒரு அயோக்கியத்தனமான ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் இதையெல்லாம் உங்களிடத்தில் எடுத்துச் சொன்னேனே தவிர, வேறு அல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அவ்வாறு ஆட்சிக்கு வரும் போது என்னென்ன வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றப் போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.
அதில் குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காக, மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல வாக்குறுதிகளை அறிவித்துள்ளோம். விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2500 - கரும்பு டன்னுக்கு 4,000 வழங்கப்படும் என்பது போன்ற பல வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என இளைஞர்களுக்கான பல அறிவிப்புகளையும் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளோம்.
இப்போது இந்த தொகுதிகளுக்கான வாக்குறுதிகளை சொல்கிறேன். ஆவடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் அரசு பொறியியல் கல்லுரி உருவாக்கப்படும். ஆவடி, திருத்தணி, பூந்தமல்லி அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தரப்படும். திருவள்ளூர் பேருந்து நிலையம் நகருக்கு வெளியே நவீன வசதிகளுடன் கட்டப்படும், திருவள்ளூரில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்படும்.
திருவள்ளூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்கப்படும். திருவள்ளூர், திருவேற்காடு, திருநின்றவூர், ஆவடி, பூந்தமல்லி, நசரத்பேட்டை போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். திருவாலங்காட்டில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். பள்ளிப்பட்டில் மகளிர் அரசு கலை - அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். பூந்தமல்லி மற்றும் புட்லூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்படும். கடம்பத்தூரில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். திருத்தணியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். திருத்தணி, பள்ளிப்பட்டில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இது அனைத்தும் 5 வருடத்திற்குள் நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள் குறித்த உறுதிமொழிகள்.
கலைஞர் அவர்கள் எப்போதும் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது சொல்வதைப் போலவே, அவரது மகனான இந்த ஸ்டாலினும் ‘சொன்னதைச் செய்வான் செய்வதைத்தான் சொல்வான்’. எனவே, வேலைவாய்ப்புகளை பெருக்க, மாநில உரிமைகளைப் பாதுகாக்க, திருவள்ளூரை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல, தமிழகத்தை மீட்க தயாராகுங்கள். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?