DMK Government
“அ.தி.மு.க ஆட்சியால் ஐம்பதாண்டுகள் பின்னால் போன தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்” - மு.க.ஸ்டாலின் சூளுரை!
“அ.தி.மு.க. ஆட்சியால் ஐம்பதாண்டுகள் பின்னால் போன தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் வாருங்கள்; பத்தாண்டுகள் தண்டனை அனுபவித்தது போதும்"
"தொழில் வளம் செழிக்க, மாநில உரிமைகளை பாதுகாக்க, இழந்த உரிமையை மீட்க தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (19-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, திருப்பூர் மாநகரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நீங்கள் எல்லாம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று கேட்பதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் நம்முடைய கழகத்தின் சார்பில் போட்டியிடும் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் - மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர் – க.செல்வராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், அவிநாசி தொகுதியில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அதியமான் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருப்பூர் வடக்கு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் ரவி (எ) சுப்பிரமணி அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், பல்லடம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் முத்து ரத்தினம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளமாக அமைந்திருக்கும் - தியாகத்தின் திருவுருவமான திருப்பூர் குமரன் பிறந்த மண்ணுக்கு - இந்த மாவட்டத்தை உருவாக்கித் தந்த நம்முடைய தலைவர் கலைஞருடைய மகனாக - இந்த திருப்பூர் மாநகரத்தை மாநகராட்சியாக ஆக்கிய அடியேன் இந்த ஸ்டாலின் உங்களிடத்தில் ஓட்டுக் கேட்க வந்திருக்கிறேன்.
கடந்த பத்தாண்டு காலமாக தமிழகம் பாழ்பட்டு போயிருக்கிறது. தமிழகத்தையே நாசம் செய்திருக்கிறது அ.தி.மு.க. ஆட்சி. 2011-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த வரையில் கடன் தொகை 1 லட்சம் கோடி. இப்போது 5 லட்சம் கோடிக்கு மேல் ஆக்கிய பெருமை அ.தி.மு.க.விற்கே. இதனால் தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொருவர் தலையிலும் 62,000 ரூபாய்க்கும் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது.
கழக ஆட்சி நடக்கிற போது உபரி வருவாயாக நாம் விட்டுச் சென்றோம். ஆனால், மக்களுடைய பணத்தைக் கோடி கோடியாகக் கொள்ளையடிக்கும் இன்றைய அதிமுக ஆட்சியினர், மக்களுடைய வரிப் பணத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தின் கடன் சுமை 2011 வரை 70 ஆண்டு காலமாக ஒரு லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 10 வருடங்களில் 6 லட்சத்தை நெருங்கி இருக்கிறது. இதைத்தான் ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கோடிகோடியாக விளம்பரம் பண்ணுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இது யார் வீட்டு பணமா? இது அரசினுடைய பணம் - மக்கள் தரும் வரிப்பணம். அந்த பணத்தை வீணடிக்கும் வகையில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொழில் வளர்ச்சி - கழக ஆட்சி இருந்தபோது 10.9 சதவிகிதமாக இருந்தது. இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் 4.6 சதவிகிதமாக இருக்கிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் - அமைச்சர்கள் அனைவரும் கோட் போட்டுக்கொண்டு வெளிநாடு சென்று வந்தார்கள். ஆனால் முதலீடும் வரவில்லை. வேலைவாய்ப்பும் வரவில்லை.
தமிழ்நாட்டை இப்போது 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறார்கள். இது வெற்றிநடை அல்ல, வெற்று நடைபோடும் தமிழகம்.
தேர்தல் வருகிறது என்பதால் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக, 40,000 கோடி ரூபாய் வரை விதிகளைத் தளர்த்தி டெண்டர் விட்டு கடைசி நேரத்தில் காரியம் எதுவும் ஆகாத கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்தப் பணியும் முடியவில்லை.
அதனால்தான் நம்முடைய தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வீழ்ந்து கிடக்கும் தமிழகத்தில் நிதிநிலையைச் சரிசெய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நாம் உறுதிமொழியாகத் தந்திருக்கிறோம்.
இப்போது ஆளுங்கட்சி சார்பில் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி ஊர் ஊராகச் சென்று தான் ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து பிதற்றிக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருந்த போது மத்திய அரசின் மூலமாக என்ன திட்டங்களைக் கொண்டு வந்தது என்று ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் இருந்த போது மத்திய அரசைப் பயன்படுத்திச் செய்திருக்கும் திட்டங்களை - சாதனைகளை நான் இங்கு பட்டியல் போட்டால் நேரம் போதாது. இருந்தாலும் நான் தலைப்புச் செய்தியாகச் சிலவற்றை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
‘சென்வாட்’ வரியை ரத்து செய்தது கலைஞர்தான் தமிழ்மொழிக்கு செம்மொழி என்கிற அங்கீகாரத்தை பெற்றோம். செல்போனில் புரட்சி செய்தோம், கட்டணமில்லா சேவையை உருவாக்கி தந்தோம். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தோம். மத்திய அரசின் மூலமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 72,000 கோடி ரூபாய் ஒட்டுமொத்த இந்தியர்களின் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தோம். 14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டு திட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தோம். பல்லாயிரம் கோடியில் தமிழகம் முழுவதும் நான்கு வழிச் சாலைகளை உருவாக்கித் தந்தோம், இன்னும் ஏராளமாக இருக்கிறது. நான் கேட்கிறேன் எங்களை கேள்வி கேட்கிற முதலமைச்சர் பழனிசாமி அவர்களே, நீங்கள் இப்போது 4 வருடங்களாக கூட்டணியிலிருந்து கொண்டிருக்கிறீர்கள்.
அந்த கூட்டணி சார்பாக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள். என்ன திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?
மதுரையில் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தீர்கள். அதை அறிவித்தது 2014ஆம் ஆண்டு. அதற்கு அடிக்கல் நாட்டியது 2019ஆம் ஆண்டு. இப்போது 2021. ஒரு செங்கல் கூட இதுவரையில் வைக்கவில்லை. முதலமைச்சர் பழனிசாமி அவர்களே இதற்கு பதில் சொல்லுங்கள்.
11 மருத்துவக் கல்லூரிகளை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் ஒன்று கூட தொடங்கப்படவில்லை. நான் இப்போது சொல்கிறேன். அந்த பணிகள் முடிவதற்கு இன்னும் 3 வருடங்கள் ஆகும். அதனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தான் அவை செயல்படும் சூழ்நிலை உருவாகும் என்ற உறுதிமொழியை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கஜா புயல் - ஒக்கி புயல் இவ்வாறு பல பேரிடர்களை நாம் சந்தித்தோம். அப்போதெல்லாம் மத்திய அரசு தர வேண்டிய நிதியைத் தரும் வாய்ப்பை இங்கிருக்கும் மாநில அரசு உருவாக்கவில்லை. அதை கேட்கும் அளவிற்கு உங்களுக்கு தெம்பில்லை. கையைக் கட்டிக் கொண்டு - வாயைப் பொத்திக்கொண்டு அடிமையாக நிற்கிறீர்கள். அதைக் கேட்டுப் பெறுவதற்கு உங்களுக்கு வக்கில்லை, வகையில்லை.
நீட் தேர்வு - நீங்கள் வந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் நுழைந்திருக்கிறது. நீட் தேர்வைத் தடுக்கின்ற முயற்சியில் ஈடுபட வக்கற்ற வகையற்ற பழனிசாமி அவர்களே, நீங்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதற்கு எந்த அருகதையும் கிடையாது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருக்கும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறதா?
சி.ஏ.ஏ.வுக்காக, நாம் ஆர்ப்பாட்டம் - போராட்டம் நடத்தினோம். குரல் கொடுத்தோம். நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசினோம். இன்றைக்கு நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் எம்.பி ஒருவர் இருக்கிறார். அவர் அதை ஆதரித்தார். அவர்கள் அதை எதிர்த்து குரல் கொடுப்பார்களா?
ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஏதாவது போராட்டம் நடத்தினீர்களா? மத்திய அரசை பார்த்து கேள்வி கேட்டீர்களா? அந்த ஜி.எஸ்.டி. வரியால் என்னென்ன கொடுமைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இதே திருப்பூர் இறக்குமதி – ஏற்றுமதியை ஊக்குவிக்க திடமான நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த இந்த மாநில அரசுக்கு ஆற்றல் இருக்கிறதா?
அப்புறம் ஏன் முதலமைச்சராக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். உதவாக்கரை போல உட்கார்ந்து இருப்பவர்தான் முதலமைச்சரா? அப்படிப்பட்ட உங்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்த்து என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது.
இன்றைக்கு விலைவாசி விண்ணை முட்டும் வகையில் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கும் முயற்சியில் மாநில அரசும் ஈடுபடவில்லை; மத்திய அரசும் ஈடுபடவில்லை. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கிறது. டீசல் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு ஏறும் நேரத்தில் மோடி வரியைக் குறைத்தாரா அல்லது பழனிசாமி வரியைக் குறைத்தாரா இல்லை.
காய்கறி விலை - மளிகைப் பொருட்கள் விலை உயர்கிறது. மக்களுடைய அன்றாடத் தேவைகள் விலை உயர்வதால் மக்களுக்கு சேமிப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
விஷம் போல ஏறியிருக்கும் இந்த விலைவாசியால் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எல்லாம் இந்த ஆட்சி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் கொள்ளை அடிப்பது தான். கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் இதுதான். இதற்கெல்லாம் முடிவு கட்டும் தேதிதான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி. மறந்துவிடாதீர்கள்.
உங்கள் அன்போடு ஆதரவோடு ஆட்சிக்கு வருகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பத்து வருடங்களாக அனுபவித்தது போதும். இந்த கொடுமை போதும். தமிழகம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஐம்பதாண்டு காலம் பின்னால் சென்று விட்டது தமிழகம். எனவே நாம் வந்தால் தான் இந்த ஆட்சியை சிறப்பாக நடத்த முடியும் - நாட்டை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள்.
அவ்வாறு ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் நாம் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அதில் சிலவற்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் நான் நாடு முழுவதும் சுற்றி வந்தேன். அப்போது இந்த திருப்பூருக்கு வந்தபோது, தொழில் வளர்ச்சிக்கும் – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மீட்சிக்கும் கழக அரசில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். அதற்குரிய செயல் திட்டமும் உங்கள் பங்கேற்புடன் வழங்கப்படும் என்று உத்தரவாதம் தந்திருந்தேன். அதற்கான வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதேபோல கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்கவும், அங்கே பணியாற்றிய தொழிலாளர்கள் மீண்டும் வேலை பெறவும், இந்த நிறுவனங்களுக்கு எளிய தவணைகளில் திரும்ப செலுத்தும் வகையில் கடன் உதவி செய்வதற்கு 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
டிட்கோ – சிட்கோ போன்ற முன்னோடி அமைப்புகள் போல, வங்கிகள் நிதி நிறுவனங்களோடு இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும். தொழில் நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்க அரசு துறைகள் - நிதி நிறுவனங்கள் - தொழில் துறையினர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டாக உயர்த்தப்படும், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்த்தப்படும், தொழிலாளர் நல வாரியம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.
அது மட்டுமல்ல பெண்களுடைய முன்னேற்றத்திற்காக நம்முடைய தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுயஉதவி குழுக் கடன் தள்ளுபடி செய்யப்படும். விலைவாசியை குறைக்க பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்; டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும்; சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்படும்; பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர் நலனை அடிப்படையாக வைத்து அவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகை கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். ஆனால் வெறும் 1,000 ரூபாய் கொடுத்தார்கள். அதனால் தான் நம்முடைய தேர்தல் அறிக்கையில், மீதமிருக்கும் 4,000 ரூபாயை கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக வழங்குவோம் என்று உறுதிமொழி தந்திருக்கிறோம். இப்படி பொதுமக்களுடைய நலனைக் கருதி பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
திருப்பூர் மாநகரத்தைப் பொறுத்தவரையில் நம்முடைய தேர்தல் அறிக்கையில், திருப்பூர் - அன்னூரில் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள் உருவாக்கப்படும். திருப்பூரில் பின்னலாடை ஆய்வு மையம் தொடங்கப்படும், ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும், திருப்பூரில் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி தொடங்கப்படும், அவிநாசியில் கண் மருத்துவமனை தொடங்கப்படும், திருப்பூர் வடக்கில் அரசு மருத்துவமனை கட்டப்படும், அன்னூரில் அரசு நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகளெல்லாம் வெளியிடப்பட்டிருக்கிறது.
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கிய திட்டம் அத்திக்கடவு - அவினாசி திட்டம். அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அதை கிடப்பில் போட்டு விட்டது. இப்போது தேர்தல் வருகின்ற காரணத்தினால் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதை ஒரு காலமும் அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை. நாம் தான் நிறைவேற்றப் போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இப்போது நான் சொன்னது நாம் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றியது. ஆனால் ஏற்கனவே நாம் திருச்சியில் கடந்த 7ஆம் தேதி அன்று ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தினோம். அந்த கூட்டத்தில் பத்தாண்டு காலத்திற்கான ஒரு தொலைநோக்குத் திட்டத்தில் 7 உறுதிமொழிகளை நான் வழங்கியிருக்கிறேன். அதை நிறைவேற்றுவேன். அதற்கு நான் பொறுப்பு என்று கூறினேன்.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை திணித்து மதவெறியை தூண்டும் அவர்களுக்கு நான் சொல்வது இது பெரியார் - அண்ணா - கலைஞர் பிறந்த மண். அண்ணாவும் - பெரியாரும் - கலைஞரும் பண்படுத்திய மண். இங்கே உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகள் நிச்சயமாக எடுபடாது.
ஏதோ பொறுப்புக்கு வருவதற்காக - ஆட்சிக்கு வருவதற்காக நடக்கும் தேர்தல் அல்ல. இது நம்முடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள்.
தொழில் வளம் செழிக்க, மாநில உரிமைகளை பாதுகாக்க, திருப்பூர் நகரை - டாலர் சிட்டியாக மாற்ற, இழந்த உரிமையை மீட்க வா உடன்பிறப்பே!
உடன்பிறப்பு என்றால் கழகத் தோழர்கள் மட்டுமல்ல. நீங்கள் அனைவரும் கலைஞருடைய உடன்பிறப்புகள் தான். அதனால்தான். உரிமை மீட்க வா என்று உங்களை எல்லாம் நான் அழைக்கிறேன். இந்த வெற்றியைத் தலைவர் கலைஞர் நினைவிடத்தில் ஒப்படைக்க வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்திலும் - நம்முடைய கூட்டணி கட்சிகளின் சின்னத்திலும் உங்கள் வாக்குகளை எல்லாம் சிந்தாமல், சிதறாமல் அளித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடி தர வேண்டும் என்று உங்கள் பாதமலர்களை எல்லாம் அன்போடு தொட்டுக் கேட்டு விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.”
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
கிணத்துக்கடவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறுகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்களெல்லாம் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.
கிணத்துக்கடவுத் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், தொண்டாமுத்தூர் தொகுதியில் ஊழல் மணியை வீழ்த்துவதற்காகக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் காங்கேயம் காளை கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் டாக்டர் கே.வரதராஜன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், சூலுர் தொகுதியில் நம்மோடு கூட்டணியில் இணைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் - கொங்குநாடு மக்கள் கட்சியின் வேட்பாளர் பிரிமியர் செல்வம் என்ற காளிச்சாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன், ஊழலாட்சித் துறை - உள்ளாட்சித்துறை என்று இப்போது சொல்ல முடியாது. நானும் அந்தப் பொறுப்பில் இருந்தவன்தான். நான் அந்தப் பொறுப்பில் இருந்தபோது, “உள்ளாட்சியில் நல்லாட்சி கண்ட அமைச்சர்” என்று என்னைப் பாராட்டிப் பேசுவார்கள். இப்போது யாராவது பேச முடியுமா?
உள்ளாட்சியில் ஊழலாட்சி கண்ட அமைச்சர்தான் வேலுமணி. ஊழல் செய்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு அமைச்சர் வேலுமணியாகத்தான் இருக்க முடியும். அவரை அரசியலில் நீடிக்க விடலாமா? இந்த வேலுமணி அமைச்சர் ஆவதற்கு முன்பு எப்படி இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். இப்போது எப்படி இருக்கிறார் என்பதும் உங்களுக்கு தெரியும்.
சுண்ணாம்பு பவுடர் வாங்குவதிலிருந்து பினாயில் வாங்குவது வரை ஊழல் செய்த அமைச்சர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது வேலுமணியாகத்தான் இருக்க முடியும். அவர் ஊழல் செய்து இருப்பதில் ஒரு சிலவற்றை ஆதாரங்களோடு உங்களுக்கு சொல்லப் போகிறேன், சுண்ணாம்பு ஒரு பை கடையில் 170 ரூபாய், ஆனால் வேலுமணி பில் போட்டு வாங்கி இருப்பது 842 ரூபாய், பினாயில் ஒரு பாட்டில் கடையில் 20 ரூபாய், அதை அவர் பில் போட்டு வாங்கியிருப்பது 130 ரூபாய், டிச்சு கொத்து ஒன்று 130 ரூபாய் கடையில், அதை 1010 ரூபாய்க்கு பில் போட்டு வாங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் 12,500 ஊராட்சிகள் இருக்கிறது. கொரோனா காலத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 1 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்கள். எனவே 12,500 கோடிக்கும் மேல் கொள்ளை அடித்த ஆட்சியைத்தான் வேலுமணி நடத்திக் கொண்டிருக்கிறார்.
மேலும் சாலையில் இருக்கும் தெருவிளக்கில் எல்.இ.டி. பல்ப் ஒன்று 1500 ரூபாய், ஆனால் வேலுமணி வாங்கியது 14,919 ரூபாய். இது சம்பந்தமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராதாபுரம் அப்பாவு அவர்கள் கழகத்தின் சார்பில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாங்கள் இதை லோக் ஆயுக்தா என்ற அமைப்பிடம் கொடுத்து விட்டோம். அவர்கள் அதை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். எனவே அரசு வழக்கறிஞரே ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.
நேற்று வரையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாத்தூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்த ராஜவர்மன் பத்திரிகையில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். “அமைச்சர் வேலுமணி 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார்.
இன்றைக்கு அந்த அளவிற்குக் கோடி கோடியாகக் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கக் கூடியவர்கள் தான் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அவர்கள். அதுமட்டுமல்ல, வேலுமணி அவர்கள் கோவையில் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அவருடைய சகோதரர்கள் - பினாமிகளை வைத்து அவர், அக்கிரமங்கள், அநியாயங்கள், ஊழல்கள், கொள்ளைகள், கொலைகள் செய்து கொண்டிருக்கிறார். காவல்துறையையும் கையில் வைத்துக் கொண்டு இந்தக் கொடுமையை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
காவல்துறையில் இருக்கும் சில அதிகாரிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன், கலைஞர் ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகரானது எனப் பாராட்டப்பட்டது தமிழ்நாடு காவல்துறை. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேலுமணி காவல்துறையைக் கையில் வைத்துக் கொண்டு பணம் கொடுத்து வருவதாகக் கேள்வி. அவருக்குத் துணைநிற்கும் காவல்துறை அதிகாரிகளின் பட்டியல் எனக்கு வந்துவிட்டது. சில அதிகாரிகள்தான். எல்லோரையும் சொல்லவில்லை. அந்த அதிகாரிகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கா விட்டாலும் ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் நடவடிக்கை எடுத்தே தீருவோம். எனவே அத்தகைய காவல்துறை அதிகாரிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு, பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல ஸ்மார்ட் சிட்டி என்று சில மாநகராட்சிகளில் இந்த ஆட்சி அறிவித்தது. அதற்கு மத்திய அரசு பல்லாயிரம் கோடி நிதியை ஒதுக்கிக் கொடுத்தது. அதில் பல கோடி ஊழல் செய்திருக்கும் அமைச்சர் தான் இங்கு இருக்கும் வேலுமணி. அதைப்பற்றி பத்திரிகையில் எழுதுவதற்கு சில பத்திரிக்கையாளர்கள் பயப்படுகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதற்காகப் போராட்டம் நடத்துகிறோம். உடனே அவர்களைக் கைது செய்து பொய் வழக்குப் போடுகிறார்கள். அதைப்பற்றி தி.மு.க. என்றும் கவலைப்படாது.
தி.மு.க. எதைக்கண்டும் அஞ்சி - நடுங்கி – பயந்து இருக்கும் கட்சி அல்ல. ஆனால் மிரட்டி அச்சுறுத்தி இன்றைக்கு ஊழல் செய்து கொண்டிருக்கும் ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால் அது ஊழல் வேலுமணியாகத்தான் இருக்க முடியும்.
இப்போது தேர்தல் வந்துவிட்ட காரணத்தால் ஏதேதோ வாக்குறுதிகளை அவர்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.
சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என்ற ஒரு பொய்யான வாக்குறுதியைச் சொல்லியிருக்கிறார்கள். வேலுமணி அவர்கள் மசூதி கட்டி தருவதாக சொல்லி இருக்கிறார்.
சி.ஏ.ஏ. சட்டத்தை கொண்டு வந்தது யார்? பா.ஜ.க., அந்த பா.ஜ.க.விற்கு கைக்கூலியாக இருப்பது யார்? அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் அதை எதிர்த்து நாம் குரல் கொடுத்தோம். ஆனால் அதை ஆதரித்து ஓட்டுப் போட்டவர் அ.தி.மு.க.வைச் சார்ந்த எம்.பி. - பன்னீர்செல்வத்தின் மகன்.
இப்போது தேர்தல் வந்துவிட்ட காரணத்தினால் தேர்தல் அறிக்கையில் நாங்கள் சிஏஏ சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். எனவே சிறுபான்மை மக்கள் இதை நிச்சயமாக நம்பமாட்டார்கள். உண்மையை உணர்வார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்றைக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு - இஸ்லாமிய பெருமக்களுக்கு என்றும் துணை நிற்கும். தொப்புள் கொடி உறவு அது. அதை யாரும் மறுக்கவும் மறக்கவும் முடியாது.
வேலுமணி அவர்கள் 8 பினாமி கம்பெனி வைத்து இருக்கிறார். அதன்மூலமாக இன்றைக்கு கோவை மாநகராட்சி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எல்லாம் மாநகராட்சிகளிலும் - நகராட்சிகளிலும் - பேரூராட்சிகளிலும் ஊராட்சிகளிலும் டெண்டர் விட்டு கொள்ளை அடித்த ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால் அது வேலுமணி தான்.
இன்றைக்கு முதலமைச்சர் பழனிசாமியிலிருந்து கடைசியில் இருக்கும் அமைச்சர்கள் வரை கணக்கெடுத்து பார்த்தீர்கள் என்றால் அதிகமாக கொள்ளை அடித்தது யார் என்றால் வேலுமணியாகத்தான் இருக்க முடியும். இதில் வேடிக்கை என்ன என்றால் முதலமைச்சரையே முந்திவிட்டார்.
எனவே வேலுமணியை வீழ்த்த உதயசூரியன் சின்னத்திற்கு மட்டுமே நீங்கள் ஓட்டு போட வேண்டும். வேறு யாருக்காவது ஓட்டு போட்டீர்கள் என்றால் அது ஊழல்மணியான வேலுமணிக்கு போட்டதாக ஆகிவிடும். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
உங்களுக்குத் தெரியும் பக்கத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கடத்தப்பட்டு, எஸ்டேட்டில் வைத்து, பலாத்காரம் செய்து, வீடியோவில் பதிவு செய்து மிரட்டி அச்சுறுத்தி பணம் பறித்த கொடுமைகள் எல்லாம் நடந்து இருக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத்திலேயே எங்கும் நடந்திருக்க முடியாது. இது காவல் துறைக்குத் தெரியாதா?
அதில் சமீபத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அருளானந்தம் என்கின்ற ஒரு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட அருளானந்தம் வேலுமணியுடன் எடுத்த புகைப்படம் வெளிவந்திருக்கிறது. அதேபோல பொள்ளாச்சி ஜெயராமனுடன் கைகுலுக்கிக் கொண்டு இருக்கும் புகைப்படமும் வந்திருக்கிறது. உண்மைகள் வெளிவந்தே தீரும். அவ்வாறு வரவில்லை என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அது கண்டுபிடிக்கப்பட்டு முறையான தண்டனை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது அ.தி.மு.க.வின் சார்பில் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அது அப்படியே தி.மு.க.வின் நகல். நாம் என்ன சொன்னமோ அதை அப்படியே கொஞ்சம் உயர்த்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
நான் கேட்கின்ற கேள்வி? இதே போல 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா?
நான் சில உதாரணங்களை மட்டும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் செல்போன் கொடுப்பேன் என்று சொன்னார்கள். யாருக்காவது கொடுத்தார்களா? கேபிள் கட்டணத்தை 70 ரூபாய்க்கு குறைப்போம் என்று சொன்னார்கள். அவ்வாறு குறைத்தார்களா? பொது இடங்களில் வை-ஃபை வசதி செய்து தருவோம் என்று சொன்னார்கள். அவ்வாறு செய்தார்களா? இப்போது தேர்தல் அறிக்கையில் அதை மறுபடியும் சொல்லி இருக்கிறார்கள். 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார்கள். அவ்வாறு செய்தார்களா? திருச்சி - மதுரை - கோவை போன்ற மாநகரங்களில் மோனோ ரயில் விடப் போகிறோம் என்று சொன்னார்கள். அவ்வாறு விட்டிருக்கிறார்களா? விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் போடப்படாது என்று சொன்னார்கள். அவ்வாறு செய்தார்களா? ஆவின் பால் லிட்டருக்கு 25 ரூபாய்க்கு தரப்படும் என்று சொன்னார்கள். அவ்வாறு கொடுத்தார்களா? நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் விடமாட்டோம் என்று சொன்னார்கள். அதை செய்தார்களா? இதுதான் அவர்கள் வாக்குறுதிகள் தரும் லட்சணம்.
நாங்கள் சொன்னதைச் செய்வோம். ஆனால் அவர்கள் சொல்வதைச் செய்ய மாட்டோம் என்று வேண்டுமானால் தேர்தல் அறிக்கைக்குத் தலைப்பு போடலாமே தவிர, வேறு வழியில்லை.
இப்போது நம்முடைய தேர்தல் அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் சிலவற்றை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தது. அதிமுக அரசு அதைக் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறது. கழக அரசு பொறுப்பேற்றவுடன் முனைப்போடு செயல்படுத்தி அந்தத் திட்டம் விரைவாக நிறைவேற்றப்படும், இந்திய வார்ப்பட நிறுவனம் கோவையில் தொடங்குவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும், கோவையில் மாநில அரசின் நிதியிலிருந்து புதிய உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு 3 ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும், நவீன வசதிகள் கொண்ட புதிய புறநகரை உருவாக்கி அங்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும், கோவை மாநகரில் போக்குவரத்து நெருக்கடி இருக்கின்ற காரணத்தால் அந்தப் பகுதியில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக தலைவர் கலைஞர் வழிநின்று நம்முடைய தேர்தல் அறிக்கையில் சில அறிவிப்புகளை நாம் செய்திருக்கிறோம். குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய், நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச அனுமதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம்.
இந்த மாவட்டத்திற்கு உட்பட்டு இருக்கும் - இந்த தொகுதிகளுக்கான சில வாக்குறுதிகளைச் சொல்கிறேன்.
கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூரில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். பாலக்காடு இரயில்வே மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி இரயில்வே நிலையத்தை சேலம் இரயில்வே மண்டலத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டாமுத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உருவாக்கப்படும். சூலூரில் அரசு கலை - அறிவியல் கல்லூரி மற்றும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். பொள்ளாச்சியில் கயிறு திரிப்பு தொழிற்பயிற்சி மையம் உருவாக்கப்படும். பொள்ளாச்சியில் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி உருவாக்கப்படும் என இதுபோன்ற பல்வேறு உறுதிகளை அளித்திருக்கிறோம்.
பத்தாண்டுகள் இந்தத் தமிழகம் பாழுங் கிணற்றில் தள்ளப்பட்டிருக்கிறது. பாழாய்ப் போயிருக்கிறது. சீரழிந்து போயிருக்கிறது. ஐம்பதாண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கிறது. அந்தத் தமிழகத்தை மீட்க வேண்டும்.
தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை திணித்து, மதவெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு நான் சொல்வது, கனவு காணாதீர்கள். இது திராவிட மண். யாரும் நெருங்க முடியாது.
தமிழக மக்களுக்கு டெல்லியிலிருந்து வருபவர்கள் ஆணை இடலாம், உத்தரவிடலாம், கட்டளையிடலாம். மோடி அவர்களே உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கே பலிக்காது.
இது தமிழினத்தின் சுயமரியாதைக்காக நடக்கும் தேர்தல். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் மட்டுமல்ல. நம்முடைய சுயமரியாதையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
எனவே நம்முடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்காக நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திற்கும் நம்முடைய கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பிற கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
தொழில் வளம் செழிக்க, மாநில உரிமைகளை பாதுகாக்க, இந்த கோவையை ஊழல்மணியிடம் இருந்து மீட்க, நாம் இழந்த உரிமையை மீட்க, உதயசூரியன் சின்னத்திலும், நமது கூட்டணிக் கட்சிகளின் சின்னத்திலும் வாக்களிக்குமாறு உடன்பிறப்புகளே என்று ஒட்டுமொத்த தமிழகர்களையும் தலைவர் கலைருடைய உடன்பிறப்புகள் என்று கருதி அழைத்துக் கேட்டுக் கொள்கிறேன்.
இவர்கள் மட்டும் வேட்பாளர்கள் அல்ல. நானும் வேட்பாளர் தான் - முதலமைச்சர் வேட்பாளர். எனவே இவர்கள் எல்லாம் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர்.
எனவே, அவர்களுக்கு ஆதரவு தந்து சிறப்பானதொரு வெற்றியை தேடித் தாருங்கள் என்று உங்களை அன்போடு - பாசத்தோடு - பணிவோடு - உரிமையோடு கேட்கிறேன். உங்களில் ஒருவனாக - உங்கள் வீட்டுப் பிள்ளையாக - அனைத்திற்கும் மேலாக தலைவர் கலைஞர் அவர்களின் மகனாக நின்று உங்கள் பாதங்களைத் தொட்டுக் கேட்கிறேன். உதயசூரியனுக்கு ஆதரவு தாருங்கள். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!