DMK Government
“தி.மு.க வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன்; தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன்” : மு.க.ஸ்டாலின் பேச்சு!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படம், மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்திவிட்டு, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது:
“தமிழக பத்திரிகைத் துறை, ஊடகத் துறை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஊடகங்களின் வாயிலாக இதனைப் பார்த்துக் கொண்டு இருக்கும் தமிழக மக்கள் அனைவரும் வணக்கம்!
தமிழகத்தின் 16-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களத்தில் நிற்கும் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை நேற்றைய தினம் வெளியிட்டேன். இதன் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை உங்கள் முன்னால் வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். பொதுவாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை 'தேர்தல் கதாநாயகன்' என்று சொல்வார்கள். நேற்றைய தினம் நாங்கள் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலையே சிலர் கதாநாயகன் என்றுதான் சொன்னார்கள்! இன்றைய தினம் இரண்டாவது கதாநாயகனான தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலத்தில் இருந்து, தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. 1952-ஆம் ஆண்டுத் தேர்தலில் கழகம் போட்டியிடவில்லை. என்றாலும், தேர்தல் அறிக்கையை பேரறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட்டார்கள்.
'இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் குரல் கொடுப்போம் என்று வாக்குறுதி தருபவர்களுக்குக் கழகத்தின் ஆதரவு உண்டு' என பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். 1957-ஆம் ஆண்டு முதல், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் - நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், அதற்கென தனியாகத் தேர்தல் அறிக்கைகளைக் கழகம் வெளியிடும்.
தேர்தல் அறிக்கை என்றால் அது தனிப்பட்ட கழகத்தின் விருப்பமாக மட்டும் இல்லாமல் - தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகவே அமையும். கழகம் பங்கெடுத்த முதல் தேர்தலின் போது, நாவலர் அவர்கள் தலைமையிலான ஒரு குழு, நாடு முழுவதும் சுற்றி தமிழக மக்களைச் சந்தித்து, அவர்களது கருத்துகளைப் பெற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதேபோல் இப்போதும் நம்முடைய கழகப் பொருளாளர், நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், தமிழகம் முழுவதும் சென்று இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளார்கள். இக்குழுவில் இடம்பெற்ற சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகிய அனைவருக்கும் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாபெரும் வரலாற்றுக் கடமையை நீங்கள் செய்துள்ளீர்கள். பல்வேறு தலைமுறைகள் தாண்டியும் இவை பேசப்படும்.
இவற்றில் மிக முக்கியமான வாக்குறுதிகளை மட்டும் தலைப்புச் செய்திகளாக உங்கள் முன்னால் வாசிக்கிறேன்.
- குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம் கொண்டு வரப்படும்.
- அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட் ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
- அதேப்போல், ஜூன் 3 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
- அதுமட்டுமல்லாது, விவசாயிகள் பயன்பெரும் வகையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ 4000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- ஜூன் 3 ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் முதல் ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும்.
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது.
அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் ஆக்கப்படும்.
- பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.
- 32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும்.
- மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.
- சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடி தேடி மருத்துவ வசதி வரும்.
-. கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கைம் பெண்களில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
- 35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத, ஆதரவற்ற மகளிருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
- மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
பின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
பத்திரிகையாளர்: உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில், முழுமையாக நடத்தப்படுமா?
தி.மு.க தலைவர்: நான் ஏற்கனவே பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகளில் தி.மு.க. பிரச்சாரத்திற்காக செல்லும்போது, பேசியிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அதனை அரைகுறையாக நடத்தி வைத்திருக்கிறார்கள். எந்தக் காரணம் கொண்டும் நடந்த தேர்தலை கலைக்க மாட்டோம். அ.தி.மு.க.வாக இருந்தால் அதை கலைப்பார்கள். நடைமுறையில் நாம் பார்த்திருக்கிறோம். தி.மு.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக அதை கலைக்கும் முயற்சியில் ஈடுபட மாட்டோம். மிச்சமிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களை வேகமாக விரைவாக நடத்துவோம்.
இவ்வாறு தெரிவித்தார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !