DMK Government
“தி.மு.க கூட்டணியே வலுவான கூட்டணி; அ.தி.மு.க அணியில் கெமிஸ்ட்ரி இல்லை” : ஆய்வாளர் ராஜன் குறை கிருஷ்ணன்
தமிழகத் சட்டமன்ற தேர்தலில், குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் வழங்கப்பட்டாலும் கூட்டணி கட்சிகள் தி.மு.க தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு உழைப்பதற்கு தயாராக உள்ளன. எனவே, “தி.மு.கழகக் கூட்டணியே வலுவான கூட்டணி” என டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியரும், ஆய்வாளருமான ராஜன் குறை கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் மின்னம்பலம் இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரை பின்வருமாறு:
தி.மு.கழகக் கூட்டணியே வலுவான கூட்டணி
கடந்த வாரம் முழுவதும் கூட்டணிகளைப் பற்றிய, கூட்டணிகள் முடிவு செய்வதைப் பற்றிய விவாதங்களால் ஊடகங்கள் நிரம்பி வழிந்தன. இன்று இந்த கட்டுரை எழுதப்படும்போது பெரும்பாலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து விட்டன. ஒரு கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன என்பதே கூட்டணி பேச்சுவார்த்தையின் மைய அச்சாக இருக்கிறது. கொள்கை சார்ந்த கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூட்டணிகள் வர்ணிக்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் உண்டு. சில கூட்டணிகளில் அரித்மெடிக் என்னும் கணிதம் வேலை செய்வதாகவும், சில கூட்டணிகளில் கெமிஸ்ட்ரி எனப்படும் ரசாயனம் வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது. கூட்டணிகளை எப்படி புரிந்துகொள்வது, எப்படி வகைப்படுத்துவது என்பதற்கான அடிப்படைகளையும், அவற்றின்பேரில் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அமைந்துள்ள கூட்டணிகளையும் விவாதிப்போம்.
பெரிய கட்சி, சிறிய கட்சி வேறுபாடு எதனால்?
இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி அமெரிக்கா போல இரு கட்சி மக்களாட்சி என்பது சாத்தியமில்லை. ஏனெனில் மக்களிடையே பல்வேறு பிரிவினர் தங்கள் கோரிக்கைகள், தங்களுடைய பாதிப்புகளை பேச, தங்கள் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க தனிப்பட்ட கட்சி அமைப்புகள் தேவை என்று நினைப்பது இயல்பு. இவற்றில் சில உண்மையான களமட்ட அமைப்புகளும், தொண்டர் பலமும் கொண்டிருக்கும். சில லெட்டர் பேட் கட்சிகள் என்பதுபோல சிறிய குழுவாக இருக்கும். ஆனால் மக்களாட்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைய, அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய இவை அவசியம். இந்த சிறிய அமைப்புகள் தேர்தலில் அவர்களாகவே பங்கேற்று நிலப்பரப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதால், பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது வழமையாக உள்ளது. இதுவும் முக்கியமான ஒரு மக்களாட்சி நடைமுறைதான்.
பெரிய கட்சிகள் எனப்படுபவை வெகுஜன கட்சிகள். அனைத்து பிரிவினருக்குமான பொது கட்சிகள். இவை பொதுவாக எளியவர்கள், சாமானியர்கள் நலனுக்காக பணம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், ஆதிக்க சக்திகள் ஆகியவற்றிற்கு எதிராக இருக்க உத்திரவாதம் அளிப்பவை. அல்லது குறிப்பிட்ட அடையாளம் சார்ந்து மாற்று அடையாளத்திற்கு எதிராக இருப்பதாக சொல்லுவதும் நிகழலாம். இவ்வாறு ஒரு முரண்பாட்டை சுட்டியபிறகு அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு முழக்கத்தை, கருத்தாக்கத்தை இவை முன்வைக்கும்.
தமிழக வரலாற்றில் தி.மு.க, பார்ப்பனீயம்-சமஸ்கிருதம்/ ஹிந்தி-வடவராதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராக ஆரியர்கள்- திராவிடர்கள் என்ற முரணை மையமாகக் கொண்டது. அதன் ஒன்றுபடுத்தும் கருத்தாக்கமாக தமிழ் அடையாளம், சமூகநீதி போன்றவற்றைக் கொண்டது. இதனால் அனைத்துப் பிரிவினரையும் ஒன்று திரட்டியது. எம்.ஜி.ஆர் அதிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்டபோது தனியாக கருத்தியல் எதையும் உருவாக்கவில்லை. தி.மு.க கருத்தியலையே சற்றே நீர்த்துப்போன வடிவில் தன் தனி நபர் கவர்ச்சியை சேர்த்து உருவாக்கிக்கொண்டார். அதனால் இந்த இரண்டு கட்சிகளும் அனைத்து மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய கட்சிகளாக மாறி, இன்றளவும் பெரிய கட்சிகளாக விளங்குகின்றன.
தேசிய கட்சியான காங்கிரஸ் வெகுஜன கட்சிதான் என்றாலும், அது வடநாட்டிலிருந்து வழிநடத்தப்படுவதால் தமிழகத்தில் அதன் செல்வாக்கு காலப்போக்கில் குறைந்துவிட்டது. பாரதீய ஜனதா கட்சி இந்து, முஸ்லீம் மத அடையாள முரண்பாட்டை மையமாகக் கொண்டது. பார்ப்பனிய-பனியா ஆதரவு கொண்ட இந்த கட்சியின் இஸ்லாமிய வெறுப்பு மதவாத அரசியல் வடநாட்டில் பல மாநிலங்களிலும், குஜராத்திலும் கால் கொண்டாலும் தமிழகத்தில் இதுவரை சிறிதும் வேர்பிடிக்க இயலவில்லை. ஆகவே இந்த இரண்டு தேசிய கட்சிகளும் தமிழகத்தை பொறுத்தவரை சிறிய கட்சிகளாக, மக்களில் சிறு பகுதியினரின் ஆதரவை பெற்றவையாகவே விளங்குகின்றன. காங்கிரஸின் ஆதரவு தளம் , பா.ஜ.க-வை விட பெரியது.
விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியும் வெகுஜன கட்சியாகத்தான் தன்னை உருவாக்கிக்கொள்ள விரும்பியது. இரண்டு பெரிய கட்சிகளுக்கும் மாற்றான கட்சியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. ஆனால் சமூக முரண்களில் தான் எப்படி செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும் என்பது குறித்த சிந்தனையில்லாமல், எம்.ஜி.ஆர் போல தனி நபர் கவர்ச்சியை நம்பியதால், இன்று கிட்டத்தட்ட விஜயகாந்தின் ஜாதி சமூகம் சார்ந்த ஒரு கட்சியாக மாறிவிட்டது.
மற்ற சிறிய கட்சிகள் என்பவை மக்களின் ஒரு பிரிவினரின் கோரிக்கைகள், அவர்களது பாதிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்குபவை என்று பார்த்தோம். பாட்டாளி மக்கள் கட்சி என்பது வன்னியர் சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக மாறியது. வன்னியர் சமூக நலனை முன்னிலைப்படுத்துவது. கம்யூனிஸ்டு கட்சிகள் தொழிலாளர், விவசாயிகள் சங்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை உறுப்பினர் சேர்க்கையையே மிகுந்த கட்டுப்பாட்டுடன் செய்யக் கூடியவை. மிஸ்டு கால் கொடுத்தால் கட்சி உறுப்பினர் என்று சொல்லும் காலத்தில், சரியான கொள்கை புரிதல் உள்ளவரே உறுப்பினராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவை.
அதனால் அவை சிறிய கட்சிகளாக இருந்தாலும் கொள்கை பலம் கொண்டவையாக உள்ளவை. ம.தி.மு.க தி.மு.க-விலிருந்து பிரிந்த தீவிர தமிழ்ப்பற்று கொண்டவர்களின் கட்சி எனலாம். கூட்டணி அரசியலை கையாண்ட விதத்தினால் இது சிறிய கட்சியாகத் தேங்கிவிட்டது. தமிழகத்தில் வேறூன்றிவிட்ட இருபெரும் கட்சிகளின் அமைப்பு பலத்தை தகர்த்து ஒரு புதிய கட்சி வலுப்பெறுவது கடினம் என்பதும் ஒரு காரணம். விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் ஒடுக்குமுறையை சந்திக்கும் தலித் மக்கள் பிரிவினரின் நலனை பாதுகாக்க முன்னிற்கும் கட்சி. பல்வேறு சிறிய கட்சிகள் என்பவை ஒரு பகுதியினரின் நலன்கள், கோரிக்கைகளை முன்னெடுப்பவை. ஒருசில கட்சிகள் பெரிய கட்சிகளிலிருந்து சிதறிய துண்டுகள் எனலாம்.
கூட்டணி செயல்படுவது எப்படி?
கூட்டணி அமைவதில் இரண்டு முக்கிய பரிமாணங்கள் உள்ளன. ஒன்று பொது நோக்கங்களுக்காக ஒன்றுபடுவது (இரசாயனம்). இரண்டு ஒவ்வொரு கட்சியும் பெறக்கூடிய ஓட்டுக்களை தொகுத்துக்கொள்வது (கணிதம்). ஒரு வலுவான பொது நோக்கத்திற்காக ஒன்றுபடும்போது ஒரு இரசாயனம் உருவாகிறது; கட்சித்தொண்டர்களை ஒருமித்து வேலை செய்ய வைக்கிறது என்று கூறப்படுகிறது. மற்றொரு கோணம் ஒரு கட்சி ஈர்க்கக்கூடிய வாக்குகள். அல்லது அது பிரதிநிதித்துவம் செய்யும் தொகுதியின் வாக்குகள் பெரிய கட்சிக்கு வந்து சேரும். அதற்கு பதிலாக பெரிய கட்சி அவர்கள் ஈர்க்கும் வாக்குகளை சில தொகுதிகளில் அந்த கட்சிக்கு வழங்கி வெற்றி பெற வைப்பார்கள் என்பது இதன் அடிப்படை. இதில் உள்ள பெரிய சவால் என்னவென்றால் சிறிய கட்சியின் ஓட்டுக்களை ஈர்க்கும் ஆற்றலை எப்படி அளவிடுவது, அதற்கேற்றார்போல எத்தனை தொகுதிகளை தருவது என்பதுதான். அவை எப்போதாவது தனித்து நின்று பெற்ற வாக்குகள் அடிப்படையில் கணக்கிடலாம். ஆனால் அந்த வாக்குகளை ஈர்க்கும் திறன் குறைந்துள்ளதா, கூடியுள்ளதா என்பது கேள்விக்குரியதாகத்தான் இருக்கும். இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி இருக்கும்.
கூட்டணி வெற்றிகரமாக செயல்பட மூன்று அம்சங்கள் அவசியம். கட்சியின் தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள், உள்ளூர் நிர்வாகிகள் இடையே நல்லிணக்கம் நிலவுவது முதலாவது. இரண்டாவது கட்சியின் வேர்மட்ட தொண்டர்களிடையே நட்பு அல்லது குறைந்த பட்சம் விரோதமின்மை நிலவ வேண்டும். மூன்றாவது அந்த கட்சி ஈர்க்கக்கூடிய வாக்குகளை கூட்டணி கட்சிக்கு மடைமாற்றும் சாத்தியம் இருக்க வேண்டும். இவைதான் பல சமயங்களில் அரித்மெடிக் எண்ணும் கூட்டல் கணக்கைவிட, கெமிஸ்ட்ரி என்னும் இரசாயனத்தை முக்கியமானதாக்குகிறது.
தி.மு.க பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த 1967 தேர்தலில் கொள்கை முரண்பாடுகள் கொண்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸ் ஆட்சி மீதிருந்த அதிருப்தியும் கோபமும் அனைத்துத் தரப்பினரிடமும் இருந்தது. திராவிட உணர்வாளர்களுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டமும், அதை காங்கிரஸ் அரசு போலீஸையும், ராணுவத்தையும் கொண்டு கொடூரமாகக் கையாண்ட விதமும் மிகுந்த கோபத்தை உருவாக்கியிருந்தது. சுதந்திரா, சி.பி.ஐ (எம்) ஆதரவாளர்களுக்கு விலைவாசி ஏற்றம், அரசின் மெத்தனம் போன்றவை கோபத்தை உருவாக்கியிருந்தன. அதனால் தி.மு.க போட்டியிட்ட 174 தொகுதிகளில் 137 இல் வென்றது; சுதந்திரா 27 தொகுதிகளில் 20-இல் வென்றது. சி.பி.ஐ (எம்) 22 தொகுதிகளில் 11-இல் வென்றது. இராசயனம், கணிதம் எல்லாம் கடந்து காங்கிரஸ் மீதான அதிருப்தி அலை முக்கியமாக செயல்பட்டது.
நடைபெறும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கூட்டணி
பாரதீய ஜனதா கட்சிக்கும், அ.தி.மு.க-விற்கும் தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்ற பொது நோக்கம் இருந்தாலும், கட்சி அணியினரிடமும், மக்களிடமும் பத்தாண்டுகால எதிர்கட்சியான தி.மு.க மீது அப்படி ஒரு கோபம் ஏற்படுவது கடினம். ஆளும் கட்சிக்கு எதிராகத்தான் கட்சிகள் அணிதிரளுமே தவிர, எதிர்க்கட்சிக்கு எதிராக அணிதிரள்வது கடினம். தவிரவும் பாரதீய ஜனதா கட்சி கழகங்களில்லா தமிழகம் என்று அ.இ.அ.தி.மு.க-வையும் சேர்த்தே எதிரணியில் வைத்து தொண்டர்களிடம் பிரசாரம் செய்துள்ளது. பா.ஜ.க ஆலோசகரான குருமூர்த்தி அ.தி.மு.க தலைவர்களை ஆண்மையற்றவர்கள் என்றெல்லாம் வர்ணித்துள்ளார். அ.தி.மு.க கட்சிக்காரர்களோ பா.ஜ.க-வை பெரும் சுமையாக நினைக்கிறார்கள். பா.ஜ.க-வின் தமிழ், தமிழ்நாடு விரோத நடவடிக்கைகள் மக்களை கொந்தளிக்க வைப்பதால் அவர்களுடன் சேர்ந்து நாமும் அழிய வேண்டுமா என்ற ஆற்றாமை அ.தி.மு.க தொண்டர்களிடம் இருக்கிறது. பா.ஜ.க-வின் பினாமி அரசு, அடிமை அரசு என்று அ.தி.மு.க வர்ணிக்கப்படுவது கட்சியின் பாரம்பர்ய வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றரை சதவீத வாக்குகளையே சென்ற தேர்தலில் பெற்ற பா.ஜ.க-விற்கு இருபது தொகுதிகள் கொடுத்திருப்பதும் இதை அதிகப்படுத்துவதாகவே இருக்கிறது. மோடியின் பிம்பமா, ஜெயலலிதாவின் பிம்பமா என்ற குழப்பமும் இந்த அணியினரின் இணக்கத்தை கெடுக்கக் கூடியதே. கடந்த 2016 தேர்தலில் ஜெயலலிதா எழுப்பிய “மோடியா? லேடியா?” கேள்வி மறக்கப்படவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு அவர்கள் கட்சியின் நலன் முதன்மையானதே தவிர பிற கட்சிகள் மீது கொள்கை சார்ந்த அக்கறையோ வெறுப்போ கூட கிடையாது. அவர்களுக்கு கள அளவில் எதிரிடையான கட்சி என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். அதனால், முற்றிலும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பேர்போன பா.ம.க கட்சியின் தொண்டர்களும் சரி, வாக்களிப்பவர்களும் சரி கூட்டணி கட்சிக்கு எந்த அளவு உதவியாக இருப்பார்கள் என்று கூறமுடியாது. அவசரகதியாக எடப்பாடி அறிவித்த 10.5% இட ஒதுக்கீட்டால் ஓரளவு அவர்கள் ஈர்க்கும் ஓட்டுகள் அ.தி.மு.க-விற்கு விழலாம். ஆனால் சமீப காலம் வரை, எட்டு வழிச்சாலை போன்ற பிரச்சினைகளில், அ.தி.மு.க-வையும், எடப்பாடி பழனிசாமியையும் பா.ம.க கடுமையாக விமர்சித்து வந்தது மக்கள் மனதிலிருந்து அகலவில்லை.
தே.மு.தி.க அ.தி.மு.க கூட்டணியிலிருந்து கடும் கோபத்துடன் விலகி உள்ளது. அதன் எதிர்மறை பிரசாரம் இந்த கூட்டணியின் ரசாயனத்தை கெடுக்கும் விதமாகவே செயல்படும்.
நடைபெறும் தேர்தலில் தி.மு.க கூட்டணி
தி.மு.க கூட்டணி கட்சிகளெல்லாம் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசின் மீது கடும் அதிருப்தியையும் கோபத்தையும் கொண்டுள்ளன. எல்லா கருத்து மாறுபாடுகளையும் கடந்து கட்சி அணியனரை இணைக்கும் ரசாயனமாக மோடி ஆட்சியின் மீதான தார்மீகக் கோபம் செயல்படுகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்டி, நீட் தேர்வு திணிப்பு, காஷ்மீர் மாநில அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்ட திருத்தம், புதிய கல்விக் கொள்கை, புதிய சுற்றுச்சூழல் கொள்கை, வேளாண் சட்டங்கள் என்று அத்தனை தாக்குதல்களை மோடி-அமித்ஷா அரசு தொடுத்துள்ளது. இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஊழல் செய்வதும், மத்திய அரசுக்கு அடிமை சேவகம் செய்வதுமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் மீதும் கடும் கோபம் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கிறது. ஒரு வகையில் 1967-ஆம் ஆண்டு பக்தவச்சலம் அரசிற்கும், 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசிற்கும் இணையான கோபம் கூட்டணி கட்சிகளின் அணிகளிடையேயும், அவர்கள் வாக்காளர்கள் இடையேயும் இருக்கிறது.
இந்த சூழலில்தான் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் வழங்கப்பட்டாலும் கூட்டணி கட்சிகள் தி.மு.க தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு உழைப்பதற்கு தயாராக உள்ளன. மேலும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு ஒன்பது உறுப்பினர்களும், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) கட்சிகளுக்கு தலா இரண்டு உறுப்பினர்களும், ம.தி.மு.க-விற்கு ஒரு தொகுதியும், வைகோ அவர்களுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும் கிடைக்க தி.மு.க தலைமையிலான கூட்டணி காரணமாக இருந்துள்ளது. அதிலிருந்தே கூட்டணியின் ஒருமித்த உணர்வு சிதையாமல் இருப்பதுடன், பெருமளவு பல்வேறு போராட்டங்கள் மூலமாக வலுப்பெற்றும் வந்துள்ளது. இந்த கூட்டணியுடன் இணைக்கப்பட்டுள்ள பல சிறிய அமைப்புகளும் பெரும்பாலும் இதே உணர்வை அடிப்படையாகக் கொண்டவை.
எனவே கணித ரீதியாகவும், இரசாயன ரீதியாகவும் வலுவான கூட்டணியாக தி.மு.க கூட்டணியே உள்ளது என்பது நிதர்சனம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி : மின்னம்பலம் இணையதளம்
Also Read
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!