DMK Government
100 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி: G Pay மூலம் சிறிது சிறிதாக பணம் அனுப்பும் அதிமுகவினர் - RK நகர் 2.0?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. முக்கிய இடங்களில் வழக்கம் போல வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் கார், டூ வீலர்களில் செல்லும் சிறு வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதே நேரம் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் பணம், பரிசுப் பொருட்கள், சில்வர் சாமான்கள், மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் தாராளமாக நடந்து வருகிறது. கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும், சில தொகுதிகளில் தங்களுக்குத்தான் சீட்டு என்ற அடிப்படையில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியினர் தரப்பில் 100 வாக்காளருக்கு ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வீடு, வீடாகச் சென்று ரேஷன் கார்டு, ஆதார் நம்பர், செல்போன் எண் ஆகியவைகளை பெற்றுச் செல்கிறார். மேலும், குறிப்பிட்ட தெருவில் உள்ள அ.தி.மு.க. பிரமுகரின் துணையோடு, யார், யார் எந்த கட்சிகளை சேர்ந்தவர் என்ற கணக்கெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளர்களின் கூகுள் பே எண்ணை வாங்கி, சிறிது, சிறிதாக தொகையை அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாகவும், ஒரு ஓட்டுக்கு தலா ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை தர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை, எப்படியும் தங்களுக்கு சீட் உறுதி என்ற நம்பிக்கையில் விநியோகித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி தொகுதியிலும் வீடு, வீடாக சேலை, பரிசுப் பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன் விநியோகிக்கப்பட்டன. திண்டுக்கல்லில் நடந்த விழாவிலும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. கோவையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவில் பரிசுப்பொருட்களை தொங்கவிட்டுச் சென்ற நிகழ்வும் அரங்கேறி உள்ளது.
தென்மாவட்டங்களில் நடக்கும் ஊர் முக்கிய திருவிழாக்களில் விருந்து என்ற பெயரிலும், பணப்பட்டுவாடா செய்யப்படும். தேர்தல் ஆணையத்தின் முழுக் கவனமும் வாகன சோதனை, வாக்குச்சாவடி இயந்திரங்கள், மையங்கள் கண்காணிப்பு என தீவிரமாக உள்ள நிலையில், அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதியில் பணம் புகுந்து விளையாடுகிறது.
இதற்காக ‘ஆர்கே.நகர் தொகுதி பார் முலா’ போல டோக்கனும் வழங்கப்படுகிறது. எந்தெந்த வழிகளில் பணத்தை வாக்காளர்களிடம் சேர்க்க வேண்டுமோ, அதன்படி விநியோகிக்கும் முறைகளை ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர். எனவே, தேர்தல் ஆணையம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில், பணப்புழக்கத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும், வாகன சோதனையில், அப்பாவி வியாபாரிகள், பொது மக்களே தங்களது வியாபாரம், முகூர்த்த தேவைகளுக்காக நகை, பணம் வாங்க செல்லும் போது சிக்கி விடுகின்றனர். இவர்கள் சேமிப்பு பணத்திற்கு முறையாக கணக்கும் காட்ட முடியாத சூழலில், கருவூலத்தில் செலுத்தும் பணத்தை பெறுவது எப்படி என குழப்பத்தில் தவிக்கின்றனர்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, வங்கிகளுக்கு சென்று ஆளுங்கட்சியினர் கோடிக்கணக்கில் பணம் எடுத்து, பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வாகன சோதனை கட்டாயம்தான். மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் பணப்புழக்கம் தொடர்பான புகார்களின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய தொகுதிகளில் தேர்தல் கமிஷன் தங்களது கண்காணிப்பு வேட்டையை தீவிரப்படுத்த வேண்டுமென்பதே வாக்காளர்களின் விருப்பமாகும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!