Election 2024

நாளை வாக்கு எண்ணிக்கை : சத்தீஸ்கரில் மாற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள்? - காங்கிரஸ் புகாரால் பரபரப்பு !

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த நிலையில், நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதோடு தேர்தல் ஆணையமும் தயார் நிலையில் உள்ளது.

மேலும் வாக்கு முகவர்கள் 17C படிவத்தை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் 17C படிவம் உ.பி., உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தர மறுப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் வைத்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது சத்தீஸ்கரில் வாக்கு இயந்திரங்களே மாற்றப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான பூபேஷ் பாகல் பரபர புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் எண்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. இதில் வாக்குப்பதிவு Unit, கட்டுப்பாட்டு Unit மற்றும் VVPAT ஆகியவை அடங்கும். எனது தொகுதியான ராஜ்நந்த்கானில் வாக்குப்பதிவுக்குப் பிறகு படிவம் 17சியில் கொடுக்கப்பட்ட தகவலின்படி, பல இயந்திரங்களின் எண்கள் மாறப்பட்டுள்ளன. எண்கள் மாற்றப்பட்ட சாவடிகள் ஆயிரக்கணக்கான வாக்குகளைப் பாதிக்கின்றன.

இதேபோன்ற புகார்கள் பல மக்களவைத் தொகுதிகளில் இருந்தும் வந்துள்ளன. மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். எந்தச் சூழ்நிலையில் இயந்திரங்கள் மாற்றப்பட்டன என்பதை தேர்தல் ஆணையம் கூற வேண்டும். இது போன்ற சம்பவங்களால் தேர்தல் முடிவில் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? மாற்றப்பட்ட எண்களின் பட்டியல் மிக நீளமானது, ஆனால் உங்கள் பார்வைக்காக ஒரு சிறிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டு இந்த புகார் தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Also Read: 543 தொகுதிக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை : வெல்வது சர்வாதிகாரமா? அரசியலமைப்பா?