Election 2024

”Exit Polls அனைத்தும் போலியானவை” : பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர் குற்றச்சாட்டு!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1 நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு ஆதரவாகவே வெளியாகியுள்ளது.

குறிப்பாக பாஜக கூட்டணி 350 முதல் 371 இடங்களுக்கும் மேல் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானது. மேலும் நாடு முழுவதும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்றும், பாஜக ஆளாத முக்கிய மாநிலங்களில் கூட பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் NewsX, NDTV, India News ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 371, இந்தியா கூட்டணி 125, பிற 47 என்று ஒரே மாதிரியான முடிவுகள் வெளியானது. இதனால் பாஜகவைக் கொடுத்ததை இந்த நிறுவனங்கள் அப்படியே வெளியிட்டுள்ளது என விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பிரபல பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர் குற்றம்சாட்டி உள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பரகல பிரபாகர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியான தரவுகளின் அடிப்படையில், பா.ஜ.க. கூட்டணிக்குச் சாதகமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளில் சிறிதும் உண்மையில்லை. வாக்கு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லு நடைபெற வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

பா.ஜ.க.வின் தில்லுமுல்லுக்களை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு பா.ஜ.க. கூட்டணியின் தோல்வியை உறுதி செய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.