Election 2024

”இந்தியா கூட்டணிதான் ஆட்சியமைக்கும்” : முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி!

18 ஆவது மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் ஜூன் 1 ஆம் தேதி 7 ஆம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் இறுதிகட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள புர்ராபஜார் பகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய மம்தா பானர்ஜி, "மோடிக்கு மேற்கு வங்கம் வரவும், தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. ஆனால், அவரது கட்சி பிரசார விளம்பரங்களில் அவரை பிரதமர் என குறிப்பிடுவது தனக்கு ஆச்சரியமாக உள்ளது.

காபந்து அரசின் பிரதமரான மோடியை தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் என்று குறிப்பிடாமல் பா.ஜ.க. தலைவா் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணிதான் ஆட்சியமைக்கும்.

மதமோதல்களை உருவாக்கி அதன்மூலம் குளிர்காய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை மேற்குவங்க மக்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் - 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? : அமித்ஷாவுக்கு முரசொலி கேள்வி!