Election 2024

”உங்கள் வாக்கு ஜனநாயகத்தை பாதுகாக்கும்” : டெல்லியில் தனது வாக்கை செலுத்திய ராகுல் காந்தி!

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று 6 ஆம் கட்ட மக்களவை தேர்தல் 58 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பீகாரில் - 8, அரியானாவில் - 10, ஜம்மு -காஷ்மீரில் -1, ஜார்கண்டில் - 4 , டெல்லியில் - 7, ஒடிசாவில் - 6 , உத்தரபிரதேசத்தில் - 14 மேற்குவங்கத்தில் - 8 என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடப்பதால், அங்கு 43 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி MP ஆகியோர் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இதையடுத்து உங்கள் வாக்கு ஜனநாயகத்தை பாதுகாக்கும் என ராகுல் காந்தி சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், முதல் 5 கட்ட வாக்குப்பதிவிலும் நீங்கள் பொய்கள், வெறுப்பு மற்றும் தவறான தகவல்களை நிராகரித்து, வாழ்க்கையின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தீர்கள்.

6 ஆம் கட்ட வாக்குப்பதிவு உங்கள் ஒவ்வொரு வாக்கும் இதை உறுதி செய்யும். 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். ஏழை பெண்களின் கணக்கில் மாதம் ரூ.8500 செலுத்தப்படும். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.400 கூலி கிடைக்கும். உங்கள் வாக்கு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: அப்பட்டமாக நடைபெறும் முறைகேடு : வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜ.க குறியீடு!