Election 2024
“மோடிக்கு ஏற்றாற்போல் விதிகளை வளைத்த தேர்தல் ஆணையம்... வெட்கக்கேடானது” - குவியும் கண்டனம்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று (மே 20) 5-ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும், மோடியும் இஸ்லாமியர்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பி வெறுப்பு பேச்சையும் பேசி வருகின்றனர்.
மேலும் தேர்தல் விதிகளை மீறி எதிர்க்கட்சிகள் குறித்தும் மத வெறுப்பை விதைக்கும் வகையிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பாஜக தேர்தல் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் கட்சியை பற்றி மட்டுமில்லாமல் அருவருக்கத்தக்க வகையில் தனி மனித தாக்குதலையும் பாஜக மேற்கொண்டது.
இந்த தேர்தல் விளம்பரத்துக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்ததோடு, தங்களை கொச்சையாக விளம்பரம் படுத்திய பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடமும் திரிணாமுல் காங்கிரஸ் புகார் கொடுத்தது. எனினும் அந்த புகார் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கம்போல் வேடிக்கை பார்த்தது.
இதை கண்டித்தும், பா.ஜ.கவின் அவதூறு விளம்பரத்திற்கு தடை விதிக்க கோரியும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா விசாரணைக்கு வந்தது. அப்போது, பா.ஜ.கவின் விளம்பரங்கள் இழிவானவை. எதிர்க்கட்சி வேட்பாளர்கள், கட்சிகள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தும் நோக்கத்துடன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்திற்கும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் பா.ஜ.கவின் விளம்பரத்திற்கு தடைவிதித்தும் உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று வருகின்றனர்.
அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்த தேர்தல் முழுக்க தேர்தல் ஆணையம் நடந்து கொண்ட விதம் வெட்கக்கேடானது. சாத்தியப்பட்ட எல்லா நேரங்களிலும் தேர்தல் விதிகள், பாஜகவுக்கு ஏதுவாக வளைக்கப்பட்டது. தற்போது கொல்கத்தா நீதிமன்றம் கூட, தேர்தல் ஆணையத்தைக் கண்டித்திருக்கிறது. இந்த தேர்தலில்தான் வெளிப்படையாக பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து மஹுவா மொய்த்ரா, “தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் முகவரி ECISVEEP என்பதிலிருந்து ECISLEEP என மாற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!