Election 2024

“வாய் தவறி கூறிவிட்டேன்...” - கடவுளே மோடியின் பக்தர் என்ற விவகாரம் : பாஜக வேட்பாளர் புதிய விளக்கம்!

மக்களவைத் தேர்தல் இன்றோடு 5 கட்டங்கள் முடிந்துள்ள நிலையில், மே 25-ம் தேதி ஒடிசா, பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் பூரி தொகுதியில் மோடி இன்று ரோட் ஷோ மேற்கொண்டார்.

இதில் பூரி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் பேட்டியளிக்கும்போது, “பிரதமர் மோடியை காண இங்கு லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளோம். கடவுள் ஜெகநாதனே மோடியின் பக்தர். அவரது வருகைக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். என்னால் எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இது ஒடிசா மக்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இருக்கும்.” என்றார்.

இவரது பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. ஏற்கனவே பாஜக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது கடவுளை விட மோடியே பெரிது என்பது போல் பாஜக வேட்பாளர் பேசியுள்ளது மக்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

தொடர்ந்து இதற்கு அம்மாநில முதல்வர் உள்பட எதிர்க்கட்சிகளும் மக்களும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், இதனை வாய் தவறி கூறிவிட்டதாக சம்பித் பத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கம், “இன்று பூரியில் பிரதமர் மோடியின் ரோட் ஷோவுக்கு பிறகு பல மீடியா சேனல்களுக்கு பேட்டிக் கொடுத்தேன். எல்லா இடங்களிலும் மோடி,ஸ்ரீ ஜெகன்னாத் மஹாபிரபுவின் தீவிர பக்தர் என்று குறிப்பிட்டேன்.. ஆனால் தவறுதலாக ஒரு பேட்டியின்போது நான் எதிர்மாறாக பேசிவிட்டேன். சார் இல்லாத பிரச்சினையை, பிரச்சினையாக்க வேண்டாம் சார். அனைவருக்கும் வாய் தவறி பேசும் நிலைமை ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.