Election 2024
நாட்டுக்கு கேடு பயக்கும் மோடியின் பிரசாரம்: இந்து நாளேடு தலையங்கம்!
மக்களவை தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்கெடுப்புகள் முடிந்திருக்கும் நிலையில் மோடியின் பிரசாரத்தை ஆராய்ந்திருக்கும் இந்து நாளேட்டின் தலையங்கம், வழக்கம்போல வாக்காளனின் தேவையிலிருந்து மோடியின் பிரசாரம் வெகு தூரத்தில் இருப்பதாக அவதானிக்கிறது.
வேலைவாய்ப்பு உருவாக்கம், விலைவாசி, வளர்ச்சி குறித்த கேள்விகள் வாக்காளர்களுக்கு பிரதானமாக இருக்கும் நிலையில் அவற்றுக்கான பதில்கள் ஏதும் பிரதமரின் பேச்சுகள் இருப்பதில்லை. குறிப்பாக தன் பத்தாண்டு கால சாதனைகளை குறித்தும் அவர் பேச மறுக்கிறார். பதிலாக, அவர் எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசுவதையும் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதையும் இஸ்லாமியர் துவேஷத்தையும் மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறார்.
இவை மட்டுமின்றி, இம்முறை பிரசாரத்தை மோடி வேறு பல ஆபத்தான தளங்களுக்கு இட்டுச் சென்றிருப்பதாக கட்டுரை குறிப்பிடுகிறது. சமீபத்திய பேரணி ஒன்றில், உத்தரப்பிரதேசத்தை குறித்தும் வட இந்தியா குறித்தும் தென்னிந்தியர்கள் குறைத்து பேசுவதாக விஷமப் பிரசாரத்தை செய்திருக்கிறார் மோடி. வட இந்தியாவை குறைத்துப் பேசுபவர்களுடன் கூட்டு வைத்திருப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகளை உண்மைக்கு மாறாக குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் முக்கியமான விஷயங்களில் ஒத்த சிந்தனை இருக்கிறது. கூட்டாட்சி தத்துவம், சமூகநீதி போன்ற விஷயங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் உடன்படுகின்றன எனக் குறிப்பிடும் கட்டுரை, பாஜகவுக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருக்கும் வேறுபாடுகளுக்கு மோடி பதில் சொல்ல வேண்டுமென அறிவுறுத்தியிருக்கிறது.
வட இந்தியாவில் வேலைவாய்ப்பு இன்றி தென்னிந்தியாவுக்கு புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் நிலையில், வடக்கையும் தெற்கையும் பிரித்து பேசும் விஷமச் செயலை பிரதமர் செய்யக் கூடாது. தமிழ்நாட்டில் பிகாரிகள் தாக்கப்படுவதாக பொய் பிரசாரம் செய்து கைது செய்யப்பட்ட யூ ட்யூபர் மனிஷ் காஷ்யப் சமீபத்தில் பாஜகவில் இணைந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளை குறித்து பேசாமல், இத்தகைய பிரிவினை அரசியலை மோடி செய்வது, இந்திய நாட்டுக்கு நல்லது கிடையாது எனக் குறிப்பிட்டிருக்கிறது இந்து நாளேட்டின் தலையங்கம்!
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!