Election 2024

”இந்து - முஸ்லிம் பிரிவினை விளையாட்டு விளையாடும் மோடி” : ப.சிதம்பரம் கடும் தாக்கு!

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ”இந்து - முஸ்லிம் அரசியலை ஒருபோதும் பேச மாட்டேன் என்றும், அப்படி பேசும் நிலை வந்தால் பொதுவாழ்வில் இருப்பதற்கான தகுதியை இழந்துவிடுவேன்” என்றும் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரதமரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்து விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்து - முஸ்லின் பிரிவினை விளையாட்டினை பிரதமர் மோடி விளையாடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பிரதமர் மோடியின் பேச்சு மேலும் மேலும் வினோதமாக உள்ளது. அவருக்கு உரை எழுதி கொடுப்பவர்கள் தங்களது சமநிலையை இழந்துவிட்டதை காட்டுகிறது.

நேற்று ”இந்து - முஸ்லிம் அரசியலை ஒருபோதும் பேச மாட்டேன் என்றும், அப்படி பேசும் நிலை வந்தால் பொதுவாழ்வில் இருப்பதற்கான தகுதியை இழந்துவிடுவேன்” என்று கூறியுள்ளார். இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்து வழக்கமான விளையாட்டை விளையாடுகிறார்.

ஒன்றிய பட்ஜெட்டில் 15% முஸ்லிம்களுக்கு மட்டுமே செலவிட மன்மோன் சிங் திட்டம் தீட்டியுள்ளார் என்ற மோடியின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. காங்கிரஸ் முஸ்லிம் பட்ஜெட், இந்து பட்ஜெட் என்று தாக்கல் செய்யும் என்ற அவரது குற்றச்சாட்டு மிகவும் மூர்க்கத்தனமானது. அது ஒரு மாயத்தோற்றம். ஒன்றிய பட்ஜெட் எப்படி இரண்டு பட்ஜெட்டுகளாக இருக்க முடியும்?." என கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

Also Read: ”பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் பிரதமர் மோடி” : பிரியங்கா காந்தி விமர்சனம்!