Election 2024

ஆந்திராவில் இரு கட்சிகளுக்கு இடையே வெடித்த மோதல்... வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதிர்ச்சி !

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் 4-ம் கட்டமாக நேற்று (மே 13) நடைபெற்றது. இந்த சூழலில் வாக்கு இயந்திரங்கள் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று திருப்பதியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பத்மாவதி மகிளா பல்கலைக்கழக வளாகத்தை தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சந்திரகிரி எம்.எல்.ஏ. வேட்பாளராக போட்டியிடும் புலிவர்த்தி நானி (Pulivarthi Nani) பார்வையிட சென்றார். பார்வையிட்ட பின் தனது காரில் வெளியே வரும்போது அவரது காரை YSR காங்கிரஸ் கட்சியினர் தாக்கினர்.

கற்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவைகளால் இரு கட்சியினரும் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து படுகாயமடைந்த புலிவர்த்தி நானி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த தாக்குதலில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை விரட்டுவதற்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

வாக்கு இயந்திரங்கள் இருக்கும் வளாகத்தை பார்வையிட வந்த எம்.எல்.ஏ வேட்பாளர் மீது மாற்றுக்கட்சியினர் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.