Election 2024

”இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்து பொய் பேசும் மோடி” : ப.சிதம்பரம் கண்டனம்!

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 3 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி 94 மக்களவை தொகுதிகளில் நடைபெறுகிறது.

இந்த தொகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மேலும் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தோல்வி பயத்திலேயே மோடி இப்படி பேசி வருவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் குஜராத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய மோடி, பா.ஜ.க இருக்கும் வரை இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும், நரேந்திர மோடி உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற விளையாட்டை விட மாட்டேன். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டேன் என்று காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பின்னர் பிரதமரின் இடஒதுக்கீடு பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பிரதமர் தனது தேர்தல் உரைகளில் தொடர்ந்து பொய்களை பேசி வருகிறார்.

நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டேன் என்று மோடி கூறியுள்ளார். உண்மையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அப்படி எந்த வாக்குறுதியும் இல்லை. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிலும் அப்படி கூறவில்லை. மோடி நீண்ட காலம் வாழட்டும்.

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என்று காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றார். மோடி வரலாற்றை மறந்துவிட்டார். SC மற்றும் ST பிரிவினருக்கான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டது.

1951 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் ஓபிசிக்கான இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மத்திய அரசு வேலைகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கு 27 சதவீத இடஒதுக்கீடு நரசிம்மராவ் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டிலிருந்து பா.ஜ.க கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பணமின்றி திரும்பும் காசோலை போன்றது." என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மோடியின் பொருளாதாரக் கொள்கை அடிமைத்தனத்திற்கான பாதை” : பரகல பிரபாகர் கடும் தாக்கு!