Election 2024
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி முதற்கட்டமாக நடைபெற்ற நிலையில், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் கடந்த 26-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் JDS கட்சியின் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna) மீண்டும் போட்டியிட்டார்.
முன்னாள் பிரதமர் HD தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS) எம்.பியாக இருந்து வருகிறார். தற்போது நடைபெறும் தேர்தலில் JDS கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், மீண்டும் அதே தொகுதியில் பிரஜ்வல் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் பிரஜ்வல் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான பென் டிரைவில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருக்கமாக இருப்பது தொடர்பான வீடியோ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு அந்த வீடியோக்களில் கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரிகளும் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அவர் மீது பாலியல் புகாரும் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டார்.
பாலியல் குற்றத்தில் தொடர்புடைய பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றுள்ளார். பிரஜ்வலுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பிரஜ்வலை தொடர்ந்து அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை தான் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானதாக குறிப்பிட்டுள்ளார்.
அதோடு இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பெண்கள் பாதுகாப்பு குறித்து மோடியின் உத்தரவாதத்திற்கு பிரஜ்வலின் வீடியோக்களே சாட்சி என CPI தேசிய செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
"பிரதமருக்கு நெருக்கமான ஒருவர் சம்பந்தப்பட்ட (பிரஜ்வல் ரேவண்ணா) ஆயிரக்கணக்கான கொடூரமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து மோடியின் உத்தரவாதத்திற்கு இந்த வீடியோக்களே சாட்சி. இதுதான் மோடியின் ‘நாரி சக்தி’யின் (பெண்கள் சக்தி) உண்மையான நிலை!
பெண்களுக்கு எதிரான பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றங்கள் பற்றி மோடி & அமித் ஷா தங்கள் வாயை மூடியே உள்ளனர். இந்த வீடியோக்கள் வெளியானதையடுத்து ரேவண்ணாவும் நாட்டை விட்டு ஓடிவிட்டார். இங்கிருந்து தப்பிக்க அவருக்கு உதவியவர் யார்? இதற்கான விடை நம் அனைவருக்குமே தெரியும்.
பெண் மல்யுத்த வீரங்கனைகள் பாலியல் துன்புறுத்தலின் போதும், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட போதும் மௌனம் காத்தார் மோடி. தற்போது ஆயிரக்கணக்கான பெண்களை சீரழிவுக்கு ஆளாக்கிய இந்த கூட்டாளி குறித்தும் மோடி மௌனம் காப்பார். ஆனால் மக்கள் வாக்குப்பதிவு மூலம் இதற்கு பதிலளிப்பர்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!