Election 2024

தொடர்ந்து விதிகளை மீறும் மோடி... தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைள் என்ன? - RTI மூலம் கேள்வி!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தேர்தல் தேதி அறிவிக்கும்போதே, தேர்தல் நடத்தை விதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட எதையும் வழங்கக்கூடாது என்றும், பிரசாரத்தின்போது சாதி, மதம் சார்ந்த விஷயங்களை பற்றி பிரசாரம் செய்ய கூடாது என்றும் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளின்படி நாடு முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதையும் மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகிறது பாஜக. மேலும் வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் பாஜகவினர். இதில் முக்கிய பங்கு வகிப்பது பிரதமர் மோடி.

ஒரு நாட்டின் பிரதமர் நாட்டின் பன்முகத்தன்மையை நிலைநாட்டுவதற்கு பதிலாக குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரசாரம் மேற்கொள்ளும் மோடி, இராமர் கோயில் குறித்து பேசுகிறார். மேலும் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராகவும் பேசி வருகிறார். மதம் சார்ந்து பேசி வாக்களர்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

இதனை மோடி மட்டுமல்ல, பாஜக வேட்பாளர்கள் பலரும் செய்து வருகின்றனர். அண்மையில் தெலங்கானா பாஜக வேட்பாளர் லதா மாதவி, ராம நவமியின்போது, மசூதியை நோக்கி வில் அம்பு எய்வது போல் செய்கை காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அரசன் எவ்வழியோ.. என்ற பழமொழிக்கு ஏற்ப, மோடி போலவே அவரது தொண்டர்களும் உள்ளனர்.

மேலும் சீக்கிய, இந்து மதம் உள்ளிட்ட மதங்களை வைத்து பிரசாரம் மேற்கொண்டதாக மோடி மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. எனினும் மோடி தனது பேச்சை நிறுத்தியதாக தெரியவில்லை. நேற்று இஸ்லாமிய சமூக மக்கள் மீது எல்லை மீறி வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சை பேசியுள்ளார்.

ராஜஸ்தானில் மோடி பரப்புரை மேற்கொண்டபோது, "இஸ்லாமிய மக்கள் நமது இந்திய சொத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் நமது சொத்தை கொடுக்க முயற்சிக்கிறீர்களா?" என்று வன்மமாக பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு தற்போது நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. மேலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதம் சார்ந்த பிரசாரத்தை மேற்கொள்ளும் மோடி மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் சமூக ஆர்வலர் அஜய் ஜோஸ் கேள்வி கேட்டுள்ளார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிராக தற்போது நாடு முழுவதும் #ModiDisasterForIndia என்ற ஹேஷ்டாக் மூலம் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Also Read: ரூ.4 கோடி விவகாரம்... சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நயினார் : ED-க்கு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு !