Election 2024

”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது” : ராகுல் காந்தி திட்டவட்டம்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகி­றார். அந்த வகையில் பீகாரின் பகல்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.

தனது உரையில் ராகுல் காந்தி கூறியதாவது:-–

இந்தியா கூட்டணி இந்திய அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பா.ஜ.க. அழிக்க சதி செய்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சி­யில் நாட்டின் 70 சதவீத மக்களின் வருமானம் வெறும் ரூ.100 தான். அதேநேரம் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் கார்பரேட் ஜாம்பவான்களான அம்பானி மற்றும் அதானிக்கு முழுப் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் துறைமுகங்கள், சூரிய மின்சக்தி, சுரங்கங்கள், எரிசக்தி துறை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசத்தின் நிதியை 10 முதல் 13 முதலாளிகளின் கைகளில் ஒப்படைப்பதற்காக மக்களின் கவனத்தை புத்திசாலித்தனமாக திசைதிருப்பும் வகையில், சிறு வணிகர்களை மோடி பதற்றத்தில் ஆழ்த்தினார்.

நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 400க்கு அதிகமான இடங்களைப் பிடிக்கும் என அந்த கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் பா.ஜனதா 150 இடங்களை பிடிப்பதே கடினம். அதற்கு மேல் நிச்சயம் அவர்களுக்கு கிடைக்காது.

இந்தியாவை வேலையில்லா திண்டாட்டத்தின் மையமாக மோடி மாற்றி விட்டார். ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். பட்டதாரி மற்றும் டிப்ளமோ பெற்ற இளைஞர்களுக்கு ரூ.8500 மாதாந்திர உதவித்தொகையில் 1 வருடப் பயிற்சிக்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Also Read: இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டும் மோடி : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!