Election 2024
“அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நீங்கள் யார்?” - மோடி & பாஜகவினருக்கு லாலு பிரசாத் ஆவேச கேள்வி !
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 1-ம் தேதி தேர்தல் நிறைவடைந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, மக்களும் விமர்சித்து வரும் நிலையில், பாஜக எம்.பி-க்கள், வேட்பாளர்கள் அரசியல் சாசனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
"அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக மாற்ற வேண்டுமென்றால், பாஜக 400 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்" என்று பாஜக தலைவர்கள், எம்.பி-க்கள், வேட்பாளர்கள் என பலரும் பேசி வருகின்றனர். பாஜகவினரின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது பீகார் முன்னாள் லாலு பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக மோடியும், பாஜக உயர்மட்டத் தலைவர்களும் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு வெகுமதியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகின்றனர். அரசியலமைப்புச் சட்டம், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஏழைகள் உள்ளிட்டவர்களுடன் பாஜகவுக்கு என்ன பிரச்னை?
அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை இந்த நாட்டிலிருந்து ஒழிக்க நினைக்கிறது பாஜக. மக்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் முதலாளித்துவ அடிமைகளாக்க நினைக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை நோக்கி பாஜக கண்களை உயர்த்தினால், இந்நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவின் கண்களைப் பிடுங்கி எடுப்பார்கள்.
அரசியலமைப்பை மாற்றுவது பற்றி பேசி பாஜக எதை நிரூபிக்க விரும்புகிறது? நமது அரசியல் சாசனம் சாதாரண பாபாவால் எழுதப்பட்டது அல்ல, பாபா சாகேப் அம்பேத்கரால் எழுதப்பட்டது. அரசியலமைப்பை மாற்ற நீங்கள் யார்? ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து சமூக மக்களும் இதனை உங்களுக்கு புரிய வைப்பார்கள்.” என்றார்.
Also Read
-
கேரளாவில் ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பலி!
-
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
-
“கருப்பி.. என் கருப்பி...” : பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நாய்க்கு தீபாவளியன்று நேர்ந்த சோகம்!
-
“தனித்துவத்தை நிலைநாட்டும் தமிழ் மொழி!” : கேரளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?