Election 2024
“கலவரம் செய்யும் பாஜக, திருப்பூரை மணிப்பூர் ஆக்கிடுவிடும்” : திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
இன்று (13-04-2024) திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நீலகிரி தொகுதி வேட்பாளர் - கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.இராசா அவர்களையும், திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு, எழுச்சியுரை ஆற்றினார்.
அதன் விவரம் வருமாறு:
திராவிட இயக்கம் கருவான ஊர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் இட்ட ஊர் இந்தத் திருப்பூர்! வந்தாரை வாழ வைக்கும், திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர்வீழ்ச்சியின் எழுச்சியாகவும், மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் இருக்கும் நீலகிரி தொகுதியை உள்ளடக்கிய கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். இரண்டாம் விடுதலைப் போராட்டத்திற்குத் தயாராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராகப் போட்டியிடும், ஆ.இராசா அவர்கள், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்! திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர் – பேச்சாளர் – சிந்தனையாளர்! தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் “தகத்தகாய சூரியன்” என்றுப் பாராட்டப்பட்டவர்தான், ஆ.இராசா அவர்கள்! பாசிச பா.ஜ.க. ஆட்சியின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் துணிச்சலாக நாடாளுமன்றத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் சிறந்த நாடாளுமன்றவாதி! வாதத்திறமையில் யாராலும் வீழ்த்த முடியாத தலைசிறந்த கொள்கையாளர்! எனது பாசமிகு சகோதரர் ஆ.இராசா அவர்களுக்கு, நீலகிரி நாடாளுமன்ற மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பூர் நாடாளுமன்றத்திற்கு சுப்பராயன் அவர்கள் போட்டியிடுகிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக எந்தப் பொறுப்பு வகித்தாலும், பாட்டாளிகளின் தோழராக இருக்கக்கூடியவர். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் நிறைந்திருக்கும், இந்தப் பகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, சுப்பராயன் அவர்கள்தான் சரியான போராளி! அண்ணன் முத்தரசன் அவர்களின் ஆதரவைப் பெற்ற, தொழிலாளர் தோழர் சுப்பராயன் அவர்களுக்கு, திருப்பூர் மக்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இருவரும் அவர்கள் போட்டியிட்ட தேர்தல்களிலேயே, அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கவேண்டும். தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதி மக்களிடமும் வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? மாபெரும் வெற்றி உறுதி, வேட்பாளர்கள் உட்காருங்கள்!
சுப்பராயன் அவர்கள் தெரிவித்ததைப் போல, இது மிக மிக முக்கியமான தேர்தல்! இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்கவும், சர்வாதிகாரத்தை வீழ்த்தவும் நடக்கும் தேர்தல்! சமத்துவம் நிலைக்க - சகோதரத்துவம் தழைக்க - மதநல்லிணக்கம் செழிக்க - சமூகநீதி கிடைக்க - இந்தியா கூட்டணியின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் அமையவேண்டும்!
நேற்று சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் கோவைக்கு வந்திருந்தார்! டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்? பார்த்தீர்களா? எப்படி இருந்தது? பாகுபலி படம் போன்று, பிரமாண்டமாக இருந்ததே? “ஒரே ஒரு மீட்டிங்! டோட்டல் பி.ஜே.பி.யும் க்ளோஸ்!” சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டும்தான் ஆள முடியும் என்று ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். சகோதரர் ராகுலின் பேச்சை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அவர் தமிழ்நாட்டை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்று அதிலேயே தெரிந்திருக்கும்!
அது மட்டுமா! இந்தியாவைப் புரிந்துகொள்ளத் தனக்கு வழிகாட்டியாக இருப்பதே தமிழ்நாடும் – தமிழ்நாட்டு வரலாறும் – தமிழ்நாட்டு அரசியலும்தான் என்று சொல்லி – தந்தை பெரியார் – பெருந்தலைவர் காமராசர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் என்று நம்முடைய தலைவர்களை மனதாரப் போற்றினார். “நடக்கின்ற தேர்தல் என்பது, சாதாரணத் தேர்தல் அல்ல; இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போர்” என்று நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.
சமூகநீதியை நிலைநாட்டும் நமக்கும் - சமூகப் பாகுபாட்டை விதைக்கும் பா.ஜ.க.வுக்கும் நடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதே கருத்துதான் இப்போது சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் பேச்சிலும் எதிரொலித்திருக்கிறது! திராவிட இயக்கம் தோன்றிய பிறகுதான், ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கடந்த 100 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த நாம், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்!
மறுக்கப்பட்ட கல்வி – வேலைவாய்ப்பு – அதிகாரம் இதையெல்லாம் போராடிப் பெற்ற இயக்கம், திராவிட இயக்கம்! பிற்படுத்தப்பட்ட மக்கள் - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் - ஆதிதிராவிட மக்கள் குறிப்பாக, அருந்ததியின மக்கள்- சிறுபான்மையின மக்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கி, சமூகநீதியின் ஒளிவிளக்காகத் திகழும் ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி!
ஆனால், மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இடஒதுக்கீட்டைத்தான் ரத்து செய்வார். ஏன் என்றால், பா.ஜ.க.வுக்கு சமூகநீதி என்றாலே அலர்ஜி! இந்தியா விடுதலை பெற்றபோது, பல நாடுகள் என்ன சொன்னார்கள்? ”பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு, அமைதியாக இருக்காது - பெற்ற சுதந்திரத்தை இவர்கள் ஒழுங்காக காப்பாற்ற மாட்டார்கள்” என்று பல நாடுகள் கூறினார்கள். ஆனால், அவர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம், ஜனநாயகக் கட்டமைப்புடன் நாடு இயங்க அடிப்படையாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டம்தான்!
மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவார்! அதனால்தான் சொல்கிறோம். மோடி ஆட்சிக்கு வருவது என்பது அரசியல் சட்டத்திற்கு ஆபத்து! ஜனநாயகத்திற்கு ஆபத்து! ஒட்டுமொத்த நாட்டிற்கே பேராபத்து! ஏன் என்றால், பத்தாண்டுகாலமாக பா.ஜ.க. ஆட்சியைப் பார்த்துவிட்டோம்!
நாட்டை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறது! பெட்ரோல் – டீசல், கேஸ் - சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது! எந்த அளவுக்குத் தொழில் வளர்ச்சி வீழ்ந்துடுச்சு! வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது! மோடி மறுபடியும் வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும்! நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்! கலவரம் செய்வது என்பது பா.ஜ.க.வின் D.N.A.-விலேயே ஊறியது.
நேற்றுகூட ஒரு செய்தி வெளியானது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். இதே திருப்பூரைச் சேர்ந்த சகோதரி ஒருவர், வாக்கு கேட்டு வந்த பா.ஜ.க.வினரிடம் ஜி.எஸ்.டி. தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் அந்த சகோதரியைத் தாக்கியிருக்கிறார்கள்! இதுதான் பா.ஜ.க. மக்களை மதிக்கும் இலட்சணம்! இதுதான் பா.ஜ.க பெண்களுக்குக் கொடுக்கும் மதிப்பு! மக்களை மதிக்காமல் அதிகாரத் திமிரில் அராஜகங்களும், கலவரமும் செய்யும் பா.ஜ.கட்சி திருப்பூரை மணிப்பூர் ஆக்கிடுவிடுவார்கள். மொத்தத்தில் மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு!
அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும் நிறுவனங்களை நடத்த முடியும். பா.ஜ.க. போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும்! தொழில் வளர்ச்சி போய்விடும்! நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது! இப்படி நாட்டைப் பாழ்படுத்தி – அதலபாதாளத்தில் தள்ளிய பா.ஜ.க.வையும் – மோடியையும் வீட்டிற்கு அனுப்ப இந்திய மக்களின் ஆதரவுடன் உருவாகி இருப்பதுதான் இந்தியா கூட்டணி!
இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை நாடாளுமன்றத் தேர்தல்கள் மூலமாக நாம் இத்தனை நாளாகக் காப்பாற்றி வந்திருக்கிறோம். இந்தியாவின் பன்முகத்தன்மையை அனைத்துத் தரப்பினருக்கும் உரிமைகள் வழங்குவதன் மூலமாக காப்பாற்றி வந்திருக்கிறோம். வேற்றுமைகள் கொண்ட நாட்டில் ஒற்றுமையை உருவாக்கிக் காப்பாற்றி வந்திருக்கிறோம். மொழியும், மதமும் வேறு வேறாக இருந்தாலும் இந்திய நாடு நமக்கானது என்ற எண்ணத்தை எல்லோரும் பெறுவதற்கு ஒரு நம்பிக்கையான ஆட்சிமுறையை வைத்துக் காப்பாற்றி வந்திருக்கிறோம்.
இப்படி நாம் காப்பாற்றிய இந்தியாவை, சிதைக்கப் பார்க்கிறார் மோடி அவர்கள். ஒற்றுமைச் சிந்தனை குலைந்துவிட்டால், மிக மோசமான ஆபத்துகள் நம்மைச்சூழும். அதனால்தான் இந்தியா முழுமைக்கும், இருக்கும் ஜனநாயக சக்திகள் இந்தியாவைக் காக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம். பாசிசத்தை வீழ்த்த ஒன்று சேர்ந்திருக்கிறோம்.
இந்தியா கூட்டணி அரசு ஒன்றியத்தில் அமைந்ததும் ஒன்றிய அரசை வலியுறுத்தி நாம் செய்யவுள்ள திட்டங்களை வாக்குறுதிகளாகத் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். அது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும், எதிரொலித்திருக்கிறது! நம்முடைய வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொல்ல விரும்புகிறேன்.
மக்காச்சோளம் – சோயா போன்ற முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க ரயில்வேயில் கட்டணச் சலுகை!
சிறு தேயிலை விவசாயிகளின் பச்சைத் தேயிலைக்குக் குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு 35 ரூபாய்!
நீலகிரி மாவட்ட சுற்றுலாத்தலங்கள் மற்றும் அதற்கான வழித்தடங்கள் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக மேம்பாடு!
இதுமட்டுமல்ல, மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!
தொழிலாளர் விரோத சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்!
விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!
உழவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்!
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!
மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்!
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது, விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோர் மற்றும் மாணவர்களுக்கு இரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்!
அதுமட்டுமல்ல, சகோதரர் ராகுல் காந்தி கூறினாரே! ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்! நீட் தேர்வு ரத்து! ஒன்றிய அரசுப்பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு!
நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!
ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு, 50 விழுக்காடு என்பதை உயர்த்த சட்டத்திருத்தம்!
மேற்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம்!
விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது!
- உள்ளிட்ட மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். மாநிலங்களுக்கும் - நாட்டிற்கும் நம்பிக்கையளிக்கும் தேர்தல் அறிக்கையாகக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருக்கிறது!
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, புதிய இந்தியாவை உருவாக்குவேன் என்று கூறினார்! ஆனால், அவரின் பத்தாண்டுகால ஆட்சியில் என்ன மாதிரியான இந்தியாவை உருவாக்கியிருக்கிறார்? ஒரு புள்ளிவிவரம் சொல்கிறேன்! பட்டினியால் தவிக்கும் நாடுகள் பட்டியலில் 125 நாடுகளில், இந்தியா 111-ஆவது இடத்தில் இருக்கிறது என்று உலகளாவிய பட்டினிக்குறியீட்டுப் புள்ளிவிவரம் சொல்கிறது! இது எவ்வளவு பெரிய அவலம்!
அடுத்து, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் கடன் 58 இலட்சம் கோடி ரூபாய்! இப்போது எவ்வளவு தெரியுமா? 155 இலட்சம் கோடி ரூபாய்! இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் நிதி மேலாண்மை லட்சணம்!
மோடி ஆட்சிக்கு வந்தபோது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59 ரூபாய்! இன்று 84 ரூபாயாகி நம்முடைய நாட்டு பணத்தின் மதிப்பு சரிந்திருக்கிறது! இந்த வீழ்ச்சிதான் மோடியின் சாதனை!
மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நிம்மதியாக நடமாட முடிகிறதா? ஊடக நிறுவனங்களால் நிம்மதியாகச் செயல்பட முடிகிறதா? தங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால், ஒட்டுமொத்தமாக அந்த நிறுவனங்களை விலைக்கு வாங்கிப் பத்திரிக்கையாளர்கள் மேல் அடக்குமுறையை ஏவுகிறார்கள். உண்மையை எழுதும் பத்திரிக்கையாளர்களைச் சிறையில் அடைப்பது! அவர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது என்று பத்திரிக்கைச் சுதந்திரமே பறிக்கப்பட்டிருக்கிறது! அதன் விளைவுதான் இன்றைக்கு, ஊடக சுதந்திரத்தில் 180 நாடுகளில் 161-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது! நம்முடைய பழம்பெரும் ஜனநாயகத்திற்கு எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
மோடி சொன்ன புதிய இந்தியா, இவரின் ஆட்சியில் இந்தியாவில் 32 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கிறார்கள். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தவில்லை. 30 விழுக்காடு மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதியே இல்லை. 41 விழுக்காடு மக்களுக்கு வீடுகள் இல்லை. இப்படித்தான் இருக்கிறது! மோடி சொன்ன புதிய இந்தியா!
விலைவாசி எந்த அளவுக்குப் போய் இருக்கிறது? மோடி ஆட்சியில் தானியங்கள் விலை 54 விழுக்காடு அதிகமாகிவிட்டது. பால் பொருட்கள் விலை 53 விழுக்காடு அதிகம். எண்ணெய் விலை 48 விழுக்காடு அதிகம். காய்கறி விலை 48 விழுக்காடு அதிகம். மருத்துவச் செலவுகள் 71 விழுக்காடு அதிகம். கல்விச் செலவுகள் 60 விழுக்காடு அதிகம். இதெல்லாம்தான் மோடி கூறிய வளர்ச்சியா?
பத்து ஆண்டுகளாகப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தும் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை! அதனால்தான் எந்த மேடையிலும் அவரால் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல முடியவில்லை! ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியைப் பொருத்தவரைக்கும் ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் கஜானாவைத் தூர்வாரிய அ.தி.மு.க.வால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமை, நாங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே திருப்பித் தந்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு தரும் நிதி நெருக்கடி என்று எல்லாவற்றையும் மீறி, ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம்.
நேற்று நம்முடைய கூட்டணிச் சின்னத்தைக் காட்டி, ஒரு தாய்மாரிடம் நம்முடைய கழகத் தோழர்கள் வாக்கு கேட்கிறார்கள். அதற்கு அவர்கள், “சின்னம் எல்லாம் முக்கியம் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் முகத்திற்காகவே நாங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டு போடுவோம். அவர்தானே, நாங்கள் செல்லும் பஸ் எல்லாம் இப்போது Free ஆக்கியிருக்கிறார்” என்று நன்றிப்பெருக்குடன் அவர்கள் சொல்கிறார்கள்.
அதே போல், ஒரு தொலைக்காட்சி நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தோட்டத்தொழிலாளர்களான பெண்களிடம் நம்முடைய அரசின் திட்டங்களைப் பற்றி கேட்கிறார்கள். அந்தச் சகோதரிகள் “நாங்கள் தேயிலைப் பறிக்க அதிகாலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பிவிடுவோம்! அதனால், எங்கள் குழந்தைங்கள் சரியாக சாப்பிட்டார்களா! இல்லையா! என்று கவனிக்க முடியாது. ஆனால், இப்போது முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தில் பள்ளிக்கூடத்திலேயே சாப்பாடு கொடுக்கிறார்கள். காலையும், மதியமும் எங்கள் குழந்தைங்கள் ஸ்கூல்லயே சாப்பிட்டுக்கொள்கிறார்கள். அதனால், எங்களுக்கு கவலை இல்லாமல் இருக்கிறது. அதேபோல், உரிமைத்தொகையும் ஒவ்வொரு மாதமும் சரியாக 15-ஆம் தேதி வந்துவிடுகிறது. அவசரத் தேவைக்கு நாங்கள் மருந்து, மாத்திரை வாங்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது!” – என்று மனநிறைவுடன் சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, “எங்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தி.மு.க. அரசு தான் எங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்து 16 ஆயிரம் ரூபாய் போனஸ் கொடுத்திருக்கிறது”- என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள்.
நம்முடைய ஆட்சி மக்களுக்கு எந்த அளவுக்கு உதவி இருக்கிறது? உதாரணத்திற்கு ஒரு ஏழைக் குடும்பத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் குடும்பத்தில் முதியோர் இருந்தால், அவர்களுக்கு மாதம் 1200 ரூபாய் உதவித்தொகை கொடுக்கிறோம். அந்த வீட்டின் குடும்பத் தலைவிக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை. அவர்கள் வீட்டில் கல்லூரிக்கு செல்லும் ஒரு மகள் இருந்தால், புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய். அதே வீட்டில் ஒரு இளைஞர் இருந்தால், அவருக்கு நான் முதல்வன் திட்டத்தில், இலவசமாக ‘திறன் பயிற்சி; கொடுத்து நல்ல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வாங்கித்தருகிறோம். அந்த வீட்டில் இருக்கும் மூன்று பெண்களும் விடியல் பயணம் திட்டத்தில் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்வதால், மாதம் எப்படியும் 2000 ரூபாய் மிச்சம் ஆகிறது.
அதாவது, நம்முடைய திட்டங்களால் நேரடியாவே ஒரு குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய் சென்று சேருகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் என்று ஒரு முன்னோடித் திட்டம்! இதில் ஒரு கோடிப் பேருக்கு நேரடியாக அவர்கள் வீட்டிற்கே சென்று, மருத்துவம் பார்த்து, டெஸ்ட் எடுத்து, மருந்துகளைக் கொடுத்திருக்கிறோம். பல இலட்சம் பேருக்கு நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, தீர்வு கண்டிருக்கிறோம்.
தமிழ்ப்புதல்வன் என்று ஒரு திட்டத்தை அடுத்து அறிவித்திருக்கிறோம். அதாவது, மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் விரைவில் தரப்போகிறோம். இப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகப் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறோம். அதனால்தான், தமிழ்நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் எல்லாம், அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினைப் பார்க்கிறார்கள்.
இப்போது நான் பட்டியலிட்டது சிறு துளிதான். இதே போன்று ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மூன்று ஆண்டுக்குள் நாங்கள் செய்திருக்கிறோம். முழுவதுமாக சொன்னால், இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டம், சாதனை விளக்கப் பொதுக்கூட்டமாக மாறிவிடும்.
இந்த திருப்பூரும், கோவையும் எப்படிப்பட்ட ஊராக இருந்தது? தமிழ்நாட்டின் எந்த மாவட்ட மக்களும், எப்படிப்பட்ட கஷ்டத்தில் இருந்தாலும் - திருப்பூருக்கும் கோவைக்கும் வந்தால் - ஏதாவது வேலை கிடைத்துவிடும் என்று பலருக்கும் நம்பிக்கை தருகிற நகரங்களாக இந்த இரண்டு ஊர்களும் இருந்தது!
அப்படிப்பட்ட இந்த மேற்கு மண்டலத்தின்மேல் மோடி நடத்திய இரட்டைத்தாக்குதல்தான், பண மதிப்பிழப்பு! ஜி.எஸ்.டி! தொழில் நிறுவனங்களில் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்று நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்த காலம் போய் – மோடி ஆட்சியில் ”ஏல அறிவிப்பு” நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருக்கும் நிலைமைக்கு நிறுவனங்கள் வந்துவிட்டது!
மோடியை நம்பி ஏமாந்துவிட்டதாக, பல தொழிலதிபர்கள் வேதனையோடு புலம்புகிறார்கள்! இந்தப் பகுதியில் இருக்கிற சிறு குறுதொழில்களை நடத்தக்கூடியவர்கள் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்தேன். அதில் பேசியவர்கள், "5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் என்று மேற்கு மண்டலம் வளர மன்மோகன்சிங் ஆட்சிதான் காரணம். ஆனால், பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு – GST -என்று கோவை, திருப்பூர் தொழில்கள் தங்களுடைய அடையாளத்தையே இழந்துவிட்டது என்று தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
அதுமட்டுமா, பஞ்சு, நூல் விலையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எத்தனை முறை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தார்கள்? வங்கதேசத்தோடு மோடி செய்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூருக்கும் மேற்கு மண்டலத்துக்கும் பேரிடியாக அமைந்துவிட்டது! தவணை தவறிய கடனைச் செலுத்த 6 மாதம் வரை இருந்த அவகாசத்தை, சர்பாஸி (SARFAESI) சட்டத்தில் 3 மாதமாகக் குறைத்துத் தொழிலதிபர்களின் சொத்துக்களை ஏலம் விட்டதுதான் அவர் தந்த பரிசு.
டெக்ஸ்டைல் மட்டுமல்ல, வாகன உற்பத்தி, வெட்கிரைண்டர் உற்பத்தி, சிறு, குறு பவுண்டரிகள், இன்ஜினியரிங் மோட்டார் பம்புகள் உற்பத்தி, விசைத்தறிகள் என்று இந்தப் பகுதியுடைய எல்லாத் துறைகளிலும் மிகப்பெரிய மந்தமான சூழலை மோடியின் பாஜக ஆட்சி உருவாக்கியிருக்கிறது.
நேற்று கோவையில் சொன்ன பகிரங்கமான குற்றச்சாட்டை திருப்பூரிலும் மக்கள் மன்றத்தில் வைக்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்த நிறுவனத்தை மிரட்டி, குஜராத்தில் தொழில் தொடங்கச் செய்திருக்கிறார்கள் என்று நேற்று சொன்னேன். அதில் கூடுதலாக இன்னொரு செய்தியை இன்று சொல்கிறேன். பி.எல்.ஐ. திட்டம் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களிடம் வரியை வசூலித்துவிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் குஜராத்தில் தொழில் தொடங்கிட வேண்டும் என்று சலுகை தருகிறார்கள். இவர்கள்தான் இப்போது கோவைக்கும் திருப்பூருக்கும் வாக்கு கேட்டு வருகிறார்கள். நம்மைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு அரசு சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் எப்படியெல்லாம் வளர்த்து வருகிறது என்று உங்களுக்குத் தெரியும். இந்த நிறுவனங்களுக்கு என இந்தியாவுலேயே முதன்முதலில் தனியாகக் கொள்கையை கொண்டுவந்ததே தலைவர் கலைஞர் அவர்கள்தான். 1970-ஆம் ஆண்டிலேயே சிட்கோ
எனக் கூறப்படும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி, இன்றைக்குத் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 127 தொழிற்பேட்டைகள் இருக்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிற வகையில், “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' என்ற மகத்தான திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடங்கி இருக்கிறது. 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் கடன் வாங்கிட வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-ஆவது இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில், சுமார் 50 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது நாட்டிலுள்ள மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 7.8 விழுக்காடு!
தமிழ்நாட்டில் இருக்கிற MSME நிறுவனங்களில் குறு நிறுவனங்கள் 99 விழுக்காடு! வளர்ந்து வரும் துறைகளுக்கான மையமாவும் தமிழ்நாடு உருவாகி வருகிறது. இதன் மூலமாகத்தான் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்காக அனைத்துத் திட்டங்களையும் தீட்டிக் கொடுத்து வருகிறோம்.
நாட்டில் எளிமையாக தொழில் புரிய உகந்த பட்டியலில் தமிழ்நாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 14-ஆவது இடத்தில் இருந்தது. பெருமையாகச் சொல்கிறேன். இப்போது 3-ஆவது இடத்திற்கு வந்திருக்கிறோம். அடுத்து முதல் இடத்தைப் பிடிப்பதுதான் நம்முடைய இலக்கு.
தமிழ்நாடு அரசால் இதுவரை 6 புதிய தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 6 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்குகிற பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் வட்டாரத் தொழில் மையங்கள் நிறுவப்பட இருக்கிறது. சேலம், ஓசூர், கடலூர், தஞ்சாவூர் நகரங்களிலும் - வட்டாரப் புத்தொழில் மையங்கள நிறுவுகிற பணிகள் நடைபெற்று வருகிறது.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக மட்டும் இந்த ஆண்டு 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நம்முடைய எண்ணமானது சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ந்தால்தான் தமிழ்நாடு வளரும்! தொழில் முதலீட்டாளர்கள் பயன் பெறுவார்கள்! ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்!
அதனால்தான், இன்றைக்குக் கூட பல்வேறு சிறு, குறு, நடுத்தரத் தொழில் கூட்டமைப்புகளைச் சந்தித்தபோது, ”நீங்கள் நிறைய எங்களுக்குச் செய்து கொடுக்கிறீர்கள்” என்று சொன்னார்கள். இன்னும் ஒருசில பிரச்சினைகளைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்! அந்த பிரச்சினைகளும் தேர்தல் முடிந்தவுடன், உறுதியாகச் சொல்கிறேன், உங்களை அழைத்துப்பேசி தீர்த்து வைக்க வழிவகை காணப்படும்” என்று உறுதி கொடுத்திருக்கிறேன். சொன்னதைச் செய்வான் இந்த ஸ்டாலின். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் மகன்.
இப்படி நாம் தொடர்ந்து உழைத்து கொண்டு இருக்கிறோம்! ஆனால், இன்னொரு பக்கம் நாட்டையே பாழ்படுத்திய பா.ஜ.க.-வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு பழனிசாமி வருகிறார். பழனிசாமிக்கும் ’தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கும்தான்’ பிரச்சினையே தவிர - அவருக்கும் மோடி - அமித் ஷாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. யார் விசுவாசமான அடிமை என்பதில் வேண்டும் என்றால் இவர்களுக்குள்ளே சண்டையாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும், பிரதமரை எதிர்த்து, ஒன்றிய பா.ஜ.க.வை எதிர்த்து, பழனிசாமியால் கட்சி நடத்தவும் முடியாது; அரசியல் நடத்தவும் முடியாது!
ஏன் என்றால், சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தைப் பிரித்து தர்மயுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பா.ஜ.க.தான். சசிகலா சிறைக்குப் போன பிறகு, முதலமைச்சர் ஆன பழனிசாமியை – தங்கள் பக்கம் கொண்டு வந்ததும் பா.ஜ.க.தான். இரு துருவங்களாக இருந்த பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒன்றுசேர்த்ததும் பா.ஜ.க.தான். தினகரனைக் கைது செய்து சிறையில் அடைத்து – அவரையும் தங்களுடைய அடிமையாக மாற்றியதும் பா.ஜ.க.தான். இன்று பன்னீர்செல்வத்தையும் தினகரனையும் மிரட்டித் தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பா.ஜ.க.தான். சசிகலாவை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்ததும் பா.ஜ.க.தான். பழனிசாமியைத் தனியாக நிற்கவைத்ததும் பா.ஜ.க.தான்.
இப்படி டிவி சீரியலில் தீடீர்தீடீர் என்று ஆட்களையும் காட்சிகளையும் மாற்றுகிற மாதிரி - சதிநாடகங்களை அரங்கேற்றி இருக்கிறது பா.ஜ.க. தலைமை! உறுதியோடு சொல்கிறேன்! இந்தத் தேர்தலில் நேரடி பா.ஜ.க.வும் மண்ணைக் கவ்வும்! பா.ஜ.க.வின் தொங்குசதைகளும் படுதோல்வி அடைவார்கள்!
தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும்- தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்துங்கள். அதற்கு நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் – கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் – எனது பாசமிகு சகோதரர் ஆ.இராசா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சுப்பராயன் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கொடி காத்த குமரன் பிறந்த ஊர் மக்களாகிய உங்களை நாடு காக்க அழைக்கிறேன்! உங்கள் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும். உங்கள் வாக்கு தமிழ்நாட்டைக் காக்கட்டும். உங்கள் வாக்கு இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். ” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
-
“7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்!” : ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!