Election 2024

பிராமணர்கள் குறித்த பேச்சு : தொடர்ந்து வந்த மிரட்டலுக்கு பின் மன்னிப்பு கோரிய பா.ஜ.க வேட்பாளர் !

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலானது, ஜூன் 1-ல் நிறைவடைகிறது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் பாஜகவும் தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி அரியானா மாநிலத்திலும் பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அரியானா மாநிலம் ஹிஸார் தொகுதியில் பாஜக சார்பில் ரஞ்சித் சிங் (Ranjit Singh Chautala) போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இவர் நேற்றைய முன்தினம் அவர், "சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதிய கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு" என்று பேசியிருந்தார். பிரமணர்கள் குறித்து இவர் பேசியதற்கு பிராமண சபா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.

தொடர்ந்து அவருக்கு அழுத்தங்களும், மிரட்டல்களும் எழுந்த நிலையில், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங்.

மேலும், "பிராமணர்கள் மதிப்பு மிக்கவர்கள். எந்த வேலையையும் அவர்கள் அனுமதியோடுதான் தொடங்குகிறோம். சமூகத்தில் முன்னணி சமூகமாக இருக்கும் பிராமண சமூகத்தின் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. என் வார்த்தைகளால் அவர்களது மனது புண்பட்டிருந்தால், நான் அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன்." என்று பல்டி அடித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கனடாவிலும் ‘காலை உணவுத் திட்டம்’ - முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி !