Election 2024

“நாங்கள் ஒரு நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்பி வைக்கிறோம்” - தமிழ் குறித்து பேசிய மோடிக்கு கனிமொழி பதிலடி!

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகி ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா கூட்டணியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் இதில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், மாவட்ட பொருளாளர் ததேயு பிரேம்குமார், ஒன்றிய செயலாளரகள் மாஸ்டர் மோகன், அருளானந்தம் ஜார்ஜ், மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது கனிமொழி பேசியதாவது, “இந்த தேர்தல் என்பது உண்மைக்கும் பொய்க்கும் இடையே நடைபெறும் தேர்தல். பாஜகவின் ஒரே ஆயுதம் பொய் தான். நாம் ஒரு ரூபாய் வரியாக செலுத்தினால், நமக்கு திரும்ப அளிக்க கூடிய வரி பகிர்வு 29 பைசா. ஆனால் உத்தர பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் என்றால் இரட்டிப்பாக இரண்டு ரூபாய் வரியை பகிர்வாக அளிக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

நாம் தூத்துக்குடி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் நிதி அளியுங்கள் என்று கோரிக்கை வைத்தால், நிதி இல்லை என்று சொல்லிவிட்டு, அம்பானியின் குடும்ப திருமணத்திற்காக பாதுகாப்பு படை விமான நிலையத்தை, 10 நாட்களில் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றினார் மோடி. நம் பிள்ளைகளின் கல்வி கடனை ரத்து செய்ய நிதி இல்லை, விவசாயிகளின் விவசாய கடனை ரத்து செய்வதற்கு நிதி இல்லை என்று கூறிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 64 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் தள்ளுபடி செய்துள்ளது பாஜக.

இப்போது கேஸ் சிலிண்டரின் விலையை பல மடங்கு ஏற்றியுள்ளது பாஜக அரசு. ஆனால் நமது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்துவுடன் கேஸ் சிலிண்டரின் விலை 500 ஆகவும், பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும். இப்பகுதியில் உள்ள மீனவ மக்களின் நலனுக்காக கடல் அரிப்பை தடுக்கும் வகையில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

எனக்கு தமிழ் தெரியாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று மோடி நாடகமாடுகிறார். தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் வருத்தப்பட வேண்டும். எங்களை எல்லாம் இந்தி கற்க சொல்றீங்க, நீங்க தமிழ் கத்துக்கோங்க! நாங்கள் ஒரு நல்ல ஆசிரியர் பார்த்து அனுப்பி வைக்கிறோம், இதற்கு ஏன் வருத்தம்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன படித்துள்ளார் என்று தெரியவில்லை, கால்டுவெல் எவ்வளவு பெரிய அறிஞர் என்று கூட தெரியாமல் பேசி வருகிறார். ஒன்றியத்தில் நமக்கான ஆட்சி அமையும் பொழுது, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்று நாம் மட்டுமல்ல, காங்கிரஸ் பேரியக்கமும் கூறியுள்ளது. அவர்களின் ஒரு நாள் ஊதியம் 400 ஆக உயற்றப்பட உள்ளது” என்றார்.

Also Read: செம்மர கடத்தல் விவகாரம் : பாஜக நிர்வாகிக்கு பாதுகாப்பு மறுப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !