Election 2024

திருநெல்வேலி மக்களவை, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்: விவரம் என்ன ?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இந்த கூட்டணி இந்தியா முழுவதும் தேர்தல் களத்தில் இறங்கவுள்ள நிலையில், இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் டெல்லி, ஹரியானா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்து உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.

அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அந்தந்த கட்சிகள் தங்கள் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தனர். காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 8 தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன் முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்ததால் காலியான அந்த தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் அறிவித்த மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு :

1. திருவள்ளூர் - சசிகாந்த் செந்தில்

2. கடலூர் - விஷ்ணு பிரசாத்

3. கரூர் - ஜோதிமணி

4. சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்

5. விருதுநகர் - மாணிக்கம் தாகூர்

6. கிருஷ்ணகிரி - கோபிநாத்

7. கன்னியாகுமரி - விஜய் வசந்த்

8. புதுச்சேரி - வைத்திலிங்கம்

9. திருநெல்வேலி - ராபர்ட் புரூஸ்

10. மயிலாடுதுறை - -இன்னும் அறிவிக்கப்படவில்லை -

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Also Read: தோல்வியை தழுவிய பாஜகவின் ABVP அமைப்பு: “இது வரும் தேர்தலுக்கான டிரெய்லர்தான்” - அமைச்சர் மனோ தங்கராஜ்!