Election 2024
நாடாளுமன்ற தேர்தல் 2024 : சென்னை உட்பட 11 வட மாவட்டங்களுக்கான திமுக-வின் அசத்தலான வாக்குறுதிகள் என்னென்ன?
தமிழ்நாட்டில் ஏப்ரல்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவுக்கான பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது.
அதில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது. அந்த பட்டியலில் சென்னை உட்பட 11 வட மாவட்டங்களுக்கான அறிவிப்பு பின்வருமாறு :
=> சென்னை :
1. பொதுமக்களின் வசதிக்காகச் சென்னையில் மூன்றாவது இரயில் முனையம் உருவாக்கப்படும்.
2. பல ஆண்டுகளாகத் தாமதப்படுத்தப்பட்டுள்ள வேளச்சேரிக்கும், புனித தோமையார்மலை ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள இரயில்வே பணி விரைந்து முடிக்கப்படும்.
3. கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ராஜாஜி நகர் மக்கள் பயன் பெறும் வகையில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து தெற்குப் பக்கமாகச் செல்வதற்குச் சுரங்க நடைபாதை அமைக்கப்படும்.
4. சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை மெட்ரோ ரயில் பாதைத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும்.
5. விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து எண்ணூர் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டித்து அமைக்கப்படும்.
6. திருவொற்றியூர் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தை ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் தரம் உயர்த்தி, வடக்கிலிருந்து வரும் அனைத்து ரயில்களும் விம்கோ நகரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
7. மணலி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தொழிற்சாலை மாசுகளால் ஏற்படக்கூடிய நோய்களுக்கு இப்பகுதி பொதுமக்கள் ஆளாக்கப்படுகின்றனர். இப்பகுதியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைப்பதற்கு ஆவன செய்யப்படும்.
=> திருவள்ளூர் :
1. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள புள்ளையன் ஊராட்சி, செங்குன்றம் பேரூராட்சியை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை NH5 இல் அமைந்துள்ளது. அங்கு சாலையைக் கடக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
2. பழவேற்காடு முதல் கடப்பாக்கம் இடையே மேம்பாலம் அமைத்துப் புதிய சாலை அமைக்கப்படும்.
=> காஞ்சிபுரம்
1. பூந்தமல்லி நெடுஞ்சாலை- தா.பி.சத்திரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சிரமத்தைப் போக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கப்படும்.
2. திருப்பெரும்புதூர் முதல் கரைப்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை (NH 48 கி. மீ. 37.000 முதல் கி. மீ . 71.015 வரை ) ஆறு வழிச் சாலைகளாக மாற்றும் திட்டப்பணி விரைந்து முடிக்கப்படும்.
3. சென்னை சென்ட்ரல் ரயில்வே முனையம் மற்றும் சென்னை எழும்பூர் ரயில்வே முனையத்தில் நிலவும் நடைமேடை பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், மாற்று வழித்தடமாக அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டிற்குக் காஞ்சிபுரம் வழியாகச் செல்லும் ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும்.
4. காஞ்சிபுரம் கிழக்கு ரயில்வே நிலையத்தில் செயல்படும் பலதரப்பட்ட சரக்குப் போக்குவரத்தும், ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சரக்கு முனையமாகச் செயல்படும் போக்குவரத்தும் மேலும் மேம்படுத்தப்படும்.
5. காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் பன்மடங்காகப் பெருகிவரும் பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் மின்சார ரயில் சேவை வழங்க வலியுறுத்தப்படும்.
=> செங்கல்பட்டு
செங்கல்பட்டிலுள்ள ஒருங்கிணைந்த நோய்த் தடுப்புமருந்து உற்பத்தி வளாகத்தை மேம்படுத்தி, உற்பத்தியைத் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
=> வேலூர் :
1. பரதராமி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளையும் மாம்பழங்களைப் பயன்படுத்தி அப்பகுதியில் மாம்பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
2. வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
=> ராணிப்பேட்டை :
1. ஆற்காடு பகுதியில் அரசு கலைக் கல்லூரி அல்லது அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்.
2. விளாப்பாக்கம் பேரூரில் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்.
3.சேந்தமங்கலத்தில் இரயில் நிலையம் அமைக்கப்படும்.
4. நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
5. நகரி முதல் திண்டிவனம் வரையிலான இரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
=> திருப்பத்தூர்
1. திருப்பதி-கோவை சென்னை இண்டர்சிடி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் இரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்யப்படும்.
2. வாணியம்பாடி நியூ டவுன் LC-81 ரயில்வே கேட்டிற்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
3. ஈரோட்டில் இருந்து சேலம் சந்திப்பு வழியாக ஜோலார்பேட்டைக்கு இரண்டு பயணிகள் ரயில் இருவேறு நேரங்களில் புறப்படுகிறது. ஜோலார்பேட்டையில் நின்று விட்டு மீண்டும் ஈரோடு திரும்பி செல்லாமல் இந்த இரண்டு ரயில்களில் ஒன்றை ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பதிக்கும், மற்றொரு ரயிலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் நீட்டித்து இயக்க ஆவன செய்யப்படும்.
=> திருவண்ணாமலை
1. ஆரணி பகுதியில் ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்கப்படும்.
2. ஆரணியில் நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம் முதல் ஆரணி வழியிலான நகரி ரயில் பாதைத் திட்டம் விரைந்து முடிக்கப்படும்.
3. நெல், அரிசி வியாபாரிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.
4. பத்தாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள திருவண்ணாமலை- திருக்கோவிலூர்- மாம்பழப்பட்டு-விழுப்புரம் வழியாகச் சென்னை வரை சென்று கொண்டிருந்த தினசரி ரயில் பொது மக்களின் வசதி கருதி மீண்டும் இயக்கப்படும்.
5. திருவண்ணாமலை நகரம் ஆன்மீகம் மற்றும் விவசாயத்தைச் சார்ந்து அமைந்துள்ளதால் நகர வளர்ச்சிக்குத் தடையாக அமையவிருக்கும் புதிய டோல்கேட் ரத்து செய்யப்படும்.
=> விழுப்புரம்
1. திண்டிவனம் முதல் நகரி வரையான புதிய ரயில் பாதைத் திட்டத்தில் ஆரணி நிலையத்தில் இருந்து ஒண்ணுபுரம் இணைப்புப் பாதையையும் காஞ்சிபுரம் முதல் செய்யாறு இணைப்புப் பாதையையும் சேர்க்க வழிவகை செய்யப்படும்.
2. விழுப்புரத்தில் இருந்து காட்பாடி இடையே இரு வழி ரயில் பாதை அமைக்கப்படும்.
3. உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் NH45 சாலையிலிருந்து பாதூர் கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ரயில் சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
4. உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நகர் பகுதி ரயில் நிலையத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைபடி ஒரு விரைவு ரயிலாவது நின்று செல்ல ஆவன செய்யப்படும்.
5. சென்னை - பாண்டிச்சேரி பேசஞ்சர் ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வகை செய்யப்படும்.
6. தேஜஸ் விரைவு ரயில் விழுப்புரத்தில் நின்று செல்ல ஆவன செய்யப்படும்.
7. வண்டி எண் 22671/22672, வண்டி எண் 56703/56704 விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில் மறு மார்க்கத்தில் விருதாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது இதனை விழுப்புரம் வரை இயக்க ஆவன செய்யப்படும்.
=> கள்ளக்குறிச்சி
திருவெண்ணெய்நல்லூர் ரோடு ஆலங்குப்பம் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க ரயில்வே சுரங்கப்பாதை, மேம்பாலமாக மாற்றி அமைக்கப்படும்.
=> கடலூர்
1. முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு, ஒன்றிய ஏற்றுமதி ஊக்கத்தொகை (RoTDEP) 5% மீண்டும் வழங்கிட ஏற்பாடு செய்யப்படும்.
2. பழைய முந்திரி மரங்களை அகற்றி, அதிக மகசூல் தரும் புதிய வகை முந்திரிக் கன்றுகளை மானியத்துடன் வழங்கிட ஆவன செய்யப்படும்.
3. பெண்ணாடம் ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்தி தென்பகுதி மற்றும் சென்னைக்குச் செல்லும் அனைத்து வகை ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!