DMK
“அனைவருக்கும் IITM” - திராவிட மாடலின் மற்றொரு தொலைநோக்கு பார்வை.. பயனடையும் அரசுப் பள்ளி மாணாக்கர்கள் !
ஐ.ஐ.டி.க்கும் ஆசைப்படு!
இந்தியத் தொழில்நுட்பக் கழகம். ஆங்கிலத்தில் ஐ.ஐ.டி. இந்தியாவில் சென்னை உட்பட மொத்தம் 23 ஐ.ஐ.டி.க்கள் உள்ளன. இவற்றுக்குப் பெரும் பாரம்பரியமும், தனித்த வரலாறும் உண்டு. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான இந்தியாவை, தொழில்நுட்பத்தில் மேம்பாடடைந்த நாடாக மாற்றுவதற்கு திறமையான மனிதவளம் தேவைப்பட்டது. அதை உருவாக்கத் தொடங்கப்பட்டவைதான் இந்த ஐ.ஐ.டி.க்கள்.
முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களுக்கு `தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்' என்ற அங்கீகாரம் கிடைக்கும். அத்தகைய ஒரு நிறுவனமான ஐ.ஐ.டி. தமிழ்நாட்டில் இருப்பது நமக்குப் பெருமை. மிகச்சிறந்த தொழில்நுட்பக் கல்வி, வளாக நேர்காணல்களில் தேர்வாகும் மாணவர்களுக்கு லட்சங்களில் சம்பளம்… என ஐ.ஐ.டி.க்களில் சேர்ந்து படிக்க விரும்புவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.
எனினும், இந்தக் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலும் மேல்தட்டு வர்க்க மாணவர்களே படித்து வரும் சூழல் இருக்கிறது. பல தனியார் பள்ளிகள் 9 ஆம் வகுப்பு முதலே ஐ.ஐ.டி-க்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கிவிடுகின்றன. கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.யும், அதில் சேர்வதற்கான பயிற்சிகளும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன.
இந்தச் சூழலில்தான் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களும் ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான சூழலை அமைத்துத் தரவேண்டும் என்ற நோக்கில் `அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்.' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
`எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் 'திராவிட மாடல்'. "கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால், அடுத்தடுத்து அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சமமாகப் பெற்றிட முடியும்" என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்காக தொடர்ந்து திட்டங்களை தீட்டி வருகிறார் நம் முதலமைச்சர். அப்படியான ஒரு முயற்சிதான் `அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். என்ற இத்திட்டம்.
தரவு எனும் தங்கம்
ஆங்கிலத்தில் `டேட்டா இஸ் நியூ கோல்ட்' என்பார்கள். அதாவது, தரவுகள் என்று சொல்லப்படக் கூடிய `டேட்டா', தங்கத்துக்கு இணையான மதிப்பைக் கொண்டது என்று பொருள். அப்படி என்னதான் இருக்கிறது அந்த டேட்டாவில்?
நீங்கள் நினைக்கும், பேசும், கேட்கும், பார்க்கும், தேடும், படிக்கும் விஷயங்கள் எல்லாம் உங்கள் கைப்பேசி, கணினி, சமூக ஊடக வலைதளங்கள் வழியே தகவல்களாகச் சேமிக்கப்பட்டு, உள்நாடு, வெளிநாடு என்ற பாரபட்சமில்லாமல் பல பன்னாட்டு வணிக நிறுவனங்களின் கைகளில் தகவல்களாக கிடைத்து, அதன் மூலம் தங்களின் சந்தையை விஸ்தரிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்பவைதான் இந்த டேட்டா.
நம் உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்ட பிறகு, இந்தத் தகவல்கள்தான் ஒவ்வொரு வணிக நிறுவனத்துக்கும் மூலதனம். இன்று ஒருவர் முதல் இல்லாமல் கூட ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துவிட முடியும். ஆனால், டேட்டா எனும் மூலாதாரம் இல்லாமல் அந்த நிறுவனத்தை நடத்திவிட முடியாது. வணிக நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்த டேட்டா எனும் விஷயம் தேவைப்படும் என்ப தில்லை. அறிவியல், மருத்துவம், கல்வி, ஊடகம், விளையாட்டு என டேட்டா தேவைப்படும் துறைகள் எண்ணிலடங்காதவை.
எண்களாக இருக்கும் அந்த டேட்டாவை எப்படிப் புரிந்துகொள்வது? அதிலிருந்து நாம் கண்டறியும் விஷயம் என்ன? அதை இன்னொருவருக்குப் புரியும் மொழியில் எப்படிச் சொல்வது? நாம் அறிந்துகொண்டவற்றிலிருந்து நாம் என்ன வகையான முடிவுகளை எடுத்தால், என்ன வகையான பயன்கள் இருக்கும்? இது பற்றி எல்லாம் கற்றுத் தருவதுதான் `டேட்டா சயின்ஸ்' எனப்படும் தரவு அறிவியல். அந்த அறிவியலைப் படித்து, டேட்டாவைக் கையாளுபவர்கள் `டேட்டா சயின்டிஸ்ட்' என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கான தேவையும், வேலை வாய்ப்புகளும் உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. இது ஏதோ ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிற படிப்பு அல்ல. உலகில் டேட்டா என்ற விஷயம் இருக்கிறவரை, அதைக் கையாளுபவர்களுக்கான தேவை இருந்துகொண்டேயிருக்கும்.
தொலைநோக்குப் படிப்பு
இத்தகைய ஒரு படிப்பை, ஐ.ஐ.டி. போன்ற ஒரு கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டுமென்றால், லட்சங்களில் செலவாகும். ஆனால் நம் `திராவிட மாடல் அரசு' கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வையால், அந்தப் படிப்பு தொடர்பான அடிப்படைப் பயிற்சியை, எந்தக் கட்டணமுமின்றி அரசுப் பள்ளிகளிலேயே `அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்' எனும் திட்டத்தின் கீழ் வழங்குகிறது.
தமிழ்நாடு அரசால் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, பிப்ரவரி-8 ஆம் தேதி வரை ஆறு கட்டங்களாக 250 பள்ளிகளைச் சேர்ந்த 500 ஆசிரியர்களுக்குத் தரவுப் பயன்பாட்டு அறிவியல் தொடர்பாக அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஆசிரியர்கள் மூலம் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தரவு அறிவியல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான செய்முறைப் பெட்டகங்களைக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஏப்ரல் 5 -ஆம் தேதி வழங்கினார். மேலும் இப்பயிற்சியின்போது ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, சென்னை ஐ.ஐ.டி.-க்கும் பள்ளிக்கல்வித் துறைக்கும் இடையே முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தரமான உயர்கல்வியை, அதுவும் காலத்துக்கேற்ற கல்வியை ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து கட்டணமின்றி வழங்குவது என்பது மிகப்பெரிய சாதனை. மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாடு ஏன் பல துறைகளில் முன்னணியில் நிற்கிறது என்பது இப்போதாவது புரிகிறதா?
சாதனை தொடரும்..
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!