DMK

“இனப்பகைவர்களுக்கு இங்கே இடமில்லை” : கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடல் !

‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்பதற்கேற்ப அரசியல் - சமுதாய - பண்பாட்டுப் பகைவரை வென்றிடவும், நம் தாய்மொழியாம் தமிழையும், தாய்நிலமாம் தமிழ்நாட்டையும், இந்திய ஒன்றியம் முழுவதற்குமான ஜனநாயகத்தையும் காத்திடக் களம் காண வேண்டிய கடமை வீரர்களாக கழக அணியினர் திகழ வேண்டும் எனக் குறிப்பிட்டு தி.மு.க உடன்பிறப்புகளுக்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள மகத்தான பொறுப்பினைச் சுமந்துகொண்டு மாநிலத்தின் நிலை உயர்த்திடவும், உரிமை மீட்டிடவும், தொடர்ந்து ஓய்வின்றி உழைத்திட வேண்டியிருப்பதால், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுடன் கடிதம் வாயிலாக அடிக்கடி உரையாட முடியவில்லை. எனினும், வாய்ப்பு வரும்போதெல்லாம் கண்ணான கழகத்தினரையும் கனிவான பொதுமக்களையும் நேரில் சந்தித்துக் களிப்புமிகக் கொள்கிறேன்.

யாரும் விடுபடாமல், அனைத்துத்தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையும் உறுதியாக உயர்ந்திட வேண்டுமென்றால் அதற்குத் தமிழ்நட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஏற்றத்தாழ்வின்றி சமச்சீரான வளர்ச்சியைப் பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் முனைப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.

பெரம்பலூர் மாவட்டத்திலும், அரியலூர் மாவட்டத்திலும் தொழிற்பூங்காக்களை உருவாக்கிடவும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்திடவும், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நேரில் சென்றபோது, மக்கள் நம் மீது வைத்திருக்கும் மகத்தான நம்பிக்கையையும், கழகத் தொண்டர்கள் காட்டுகின்ற பாசத்தையும் கண்டு, அதில் மூழ்கித் திக்குமுக்காடிப் போனேன்.

நவம்பர் 28-ஆம் நாளன்று திருச்சி சென்றவுடன் விமான நிலைய வளாகத்தில் ஏர்போர்ட், கே.கே.நகர் பகுதி மக்களின் குறைகளை கேட்டேன். அப்போது தாய்மார்கள், கே.கே.நகர்- ஒலையூருக்கு கூடுதல் பேருந்து சேவை கேட்டார்கள். உடனே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் கூறி- அன்றே பேருந்து சேவை -அதுவும் கட்டணமில்லா பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து இறங்கியவுடன் முதலில் நிறைவேற்றி வைத்த மக்கள் கோரிக்கை!

பிறகு திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், “வானவில் மன்றம்" என்ற வண்ணமயமான திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். இளம் வயதிலேயே பள்ளி மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையையும் ஆர்வத்தையும் வளர்த்தெடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 25 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.

கல்வித் துறையில் மற்ற பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழும் தமிழ்நாட்டின் முன்னேற்றப் பாதையில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்தான் இந்த வானவில் மன்றம் திட்டம். அமைச்சர்கள் கே.என்.நேரு., அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.திருநாவுக்கரசர், திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.இனிகோ இருதயராஜ், எஸ்.கதிரவன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திருச்சி நிகழ்ச்சிக்குப் பின் அரியலூர் செல்லும் வழியெங்கும் மக்கள் தொடர்ச்சியாகத் திரண்டு நின்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்தனர். கழகத்தினர் இருவண்ணக் கொடியசைத்து இன்முகத்துடன் வரவேற்பளித்தனர். சாலையின் ஓரமாக நின்றிருந்தவர்களை நேரில் நெருங்கிச் சென்று சந்தித்தபோது, அவர்கள் அன்புடன் என் கைகளைப் பற்றிக்கொண்டும், முகம் முழுவதும் மலர்ச்சியை வெளிப்படுத்தியும், பாசம் பொங்கும் இதயத்தால் வாழ்த்தினர்.

சிலர் கோரிக்கை மனுக்களையும் நம்பிக்கையுடன் அளித்தனர். அங்கு வரவேற்பளித்த தொண்டர்களில் ஒருவர் - நான் சென்ற முறை சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கொடுத்தார். அந்தப் புகைப்படத்தின் பின்பக்கத்தில் “தங்களின் பொற்கால ஆட்சி சிறப்பாக இருக்கிறது. மக்கள் பாராட்டுகின்றனர். என் மனம் மட்டற்ற மகிழ்ச்சி” என்று எழுதியிருந்தார். மக்களுக்கான் இந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பது அந்த கடைக்கோடி தொண்டர் கோவிந்தராசுவின் எழுத்தில் பிரதிபலித்தது கண்டு மகிழ்வுற்றேன்.

அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் ஆட்சியாக இருப்பதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி. ஒவ்வொரு தமிழரும் நிம்மதியுடன் வாழ்ந்திட கழக அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்திடும் என்கிற உறுதியுடன்தான் நான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

பெரம்பலூர் எறையூரில் “சிப்காட் தொழிற்பூங்காவைத்” திறந்து வைத்து, 5000 கோடி ரூபாய் முதலீட்டில், 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினேன். இதுதான் அந்த மாவட்டத்திற்கான முதல் தொழில் பூங்காவாகும். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சா.சி.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.இராசா, தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரம்பலூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அரியலூர் செல்லும் வழியெங்கும் கழகத்தினரும் பொதுமக்களும் அன்பும் ஆரவாரமுமாக வரவேற்பளித்து மகிழ்ந்தனர்; மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

வழியில் கங்கைகொண்டசோழபுரம் - மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளையும், அதில் கிடைக்கப் பெற்ற பழந்தமிழர்களின் பண்பட்ட வாழ்க்கை முறையைக் காட்டும் பொருட்களையும் கண்டு மகிழ்ந்தேன்.

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்குகிறது என்பதைத் திரும்பத் திரும்ப நாம் வலியுறுத்தி வருவதற்கு வலுசேர்க்கும் வகையில் அகழாய்வுப் பணிகளின் அரிய முடிவுகள் அமைந்து வருகின்றன. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரும் இந்திய ஹாக்கி அணியின் வீரருமான எஸ்.கார்த்திக் தனது குடும்பத்தாருடன் சிறு குடிசையில் வசித்து வருவதை அறிந்து, அங்கே நேரில் சென்று, அவரது குடும்பத்தினர் இனி குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பதற்கேற்றவாறு, வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினேன்.

நவம்பர் 29 அன்று அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 30.26 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 51 திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 1.56 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். 78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்படும் என்ற உளப்பூர்வமான உறுதியினை அளித்தேன். கல்லக்குடிப் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த தலைவர் கலைஞரின் தளராத நெஞ்சுரத்தை வெளிப்படுத்திய மாவட்டம் அரியலூர் என்பதால், அதே உறுதியை உங்களில் ஒருவனான நானும், உடன்பிறப்புகளாகிய நீங்களும் அவரிடமிருந்து பெற்றிருக்கிறோம். அதுதான் இயக்கத்தை இரவும் பகலும் எப்போதும் கட்டிக் காத்து, ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்கிறது.

மக்கள் நலனைக் காக்கும் அரசாக, மக்களுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குகிற அரசாக, ஓர் அரசு எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற அரசாகத் திகழ்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் அரசுக்கு எதிராக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு சங்கடங்களையும் குழப்பங்களையும் உருவாக்கிட, அரசியல் எதிரிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சதித்திட்டம் தீட்டி, பொருளில்லாப் புதுப்புது வதந்திகளைப் பரப்பிட நினைக்கிறார்கள். நல்லரசைக் கெடுக்க நினைக்கிற அத்தகையவர்களின் நயவஞ்சக எண்ணத்தை நசுக்கி, முனை மழுங்கச் செய்ய வேண்டிய பெரும்பணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் உண்டு.

எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொல்லாங்குகளையும், பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள். உண்மைகள் நம் பக்கமே இருப்பதால், அந்தப் பொய்களை நாம் பொடிப்பொடியாக்கித் தூக்கி எறிய வேண்டும். எதிரிகள் நமக்கெதிராக வெற்று வதந்திகளைக் கிளப்புவார்கள்; அவற்றைப் புள்ளிவிவரங்கள் மூலம் அறுத்தெறிய வேண்டும்.

எதிரிகள் நமக்கெதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுவார்கள்; அவற்றை அடித்து நொறுக்குகின்ற வகையில் நம்மிடம் குவிந்துள்ள சாதனைத் திட்டங்களை முன் வைக்கவேண்டும். ஊடகங்களையும், சமுக வலைத்தளங்களையும் நமக்கெதிராகத் திருப்பிட முனைவார்கள். ஒவ்வொரு உடன்பிறப்பும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், தேநீர்க்கடை - திண்ணைப் பிரச்சாரம் மூலமாகவும் கழகக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட வேண்டும்.

உடன்பிறப்புகளின் உயர்ந்த உணர்வாலும் உடலில் ஓடும் உதிரத்தாலும் உருவான இலட்சிய இயக்கம் இது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையை மிக வலுவாகக் கட்டமைத்தவர் பேரறிஞர் அண்ணா. அதனை மேலும் வலிவும் பொலிவுமாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். தலைமைக் கழகம் முதல் கிளைக் கழகம் வரையிலான வலுவான அமைப்புக்குத் துணை நின்று பணியாற்றுவதற்காக சார்பு அமைப்புகளான பல்வேறு அணிகளை உருவாக்கித் தந்தார் தலைவர் கலைஞர்.

அத்தகைய சார்பு அமைப்புகளில் ஒன்றான கழக இளைஞரணியில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய உங்களில் ஒருவனான நான், இன்று தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களுக்காக முதலமைச்சர் பொறுப்பில் இருக்கிறேன். பல்வேறு அணிகளைச் சேர்ந்த கழகத்தினர் அமைச்சர்களாக, நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுதான் கழக அணிகளின் செயல்பாடுகளுக்குக் கிடைத்த அருமை - பெருமை.

கழக சட்ட விதிகளையொட்டி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி உள்பட 23 அணிகள் உள்ளன. அனைத்து அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, முழுமையான அறிவிப்புகள் முரசொலியில் வெளியாகியுள்ளன.

உழைப்புக்கேற்ற வாய்ப்பு, உருவாகும் வாய்ப்புக்கேற்ற பொறுப்பு என ஒவ்வொரு நிர்வாகியின் தகுதியையும் கவனத்திலும் கருத்திலும் கொண்டே இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளன.

இயன்ற அளவு கழகத்தின் மூத்தவர்கள் - இளையவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வேறுபாடு சிறிதுமின்றிப் பங்கேற்கும் வகையில் பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சிலருக்கு வாய்ப்பின்றிப் போயிருக்கலாம். கிடைத்திருக்கும் வாய்ப்பு போதவில்லை என ஒரு சிலர் நினைக்கலாம். கழகத்தை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார். உண்மையாக உழைப்பவர்களை உங்களில் ஒருவனான நான் என் கவனத்தில் குறித்து வைத்திருக்கிறேன். அடுத்தடுத்த வாய்ப்புகளில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும். நான் இருக்கிறேன் உங்களுக்காக!

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் இடம்பெற்ற சில வீரர்கள் அடுத்த ஆட்டத்தில் இடம்பெறாமல் போகலாம். அதற்கடுத்த ஆட்டத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கின்ற சூழல் உருவாகும். சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும் அணியின் இலக்கு வெற்றிக் கோப்பையை வெல்வதுதான். கழக அணிகளின் நோக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும். நாம் வெல்ல வேண்டிய களம், விளையாட்டுக் களம் அல்ல. கருத்தியல் போர்க்களம்!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைபெறுகிற ஆரிய - திராவிட பண்பாட்டுப் போரில், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஜனநாயக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இனத்தின் மீதும், மொழியின் மீதும், மாநிலத்தின் உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள போரை நேர்மையாக எதிர்கொண்டு வருகிறோம். அதில் மகத்தான வெற்றியையும் பெற்றிருக்கிறோம். அந்த வெற்றி தொடர்ந்திட, கழக அணிகள் அனைத்தும் அணிவகுத்து ஆயத்தமாக நின்றிட வேண்டும்.

‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்பதற்கேற்ப அரசியல் - சமுதாய - பண்பாட்டுப் பகைவரை வென்றிடவும், நம் தாய்மொழியாம் தமிழையும், தாய்நிலமாம் தமிழ்நாட்டையும், இந்திய ஒன்றியம் முழுவதற்குமான ஜனநாயகத்தையும் காத்திடக் களம் காண வேண்டிய கடமை வீரர்களாக கழக அணியினர் திகழ வேண்டும்.

கொள்கைகளும் சாதனைகளும்தான் நமக்கு வாளும் கேடயமுமாகும். அதனைத் தமிழ்நாட்டின் குக்கிராமங்கள்வரை வீடு வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும். இனப் பகைவர்கள் இங்குள்ள அரசியல் எதிரிகளைப் பயன்படுத்திக் கொண்டு, வஞ்சகச் சூழ்ச்சிகளால் வலை விரித்து தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது ஊடுருவி விடலாம் என ஏங்கினாலும், அவர்களுக்குக் கிஞ்சித்தும் இங்கே இடமே இல்லை என்பதை நிரூபிக்கக் கூடிய ஆற்றல்மிக்க படையாக கழக அணிகள் செயல்பட வாழ்த்துகிறேன்!

ஜனநாயகப் படையென முன்னோக்கி விரைந்திடுவீர்! கொள்கை முரசு கொட்டி, சாதனை முழக்கமிட்டு, வெற்றிகளைத் தொடர்ந்து குவித்திடுவீர்!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: சந்தேகத்துக்குரியதாக பேசும் ஆளுநர் RN.ரவி.. ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா பாஜக? : முரசொலி!