DMK

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..” : தி.மு.க வரலாற்றில் முக்கியமான நாள் இன்று..!

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா துவங்கி, தமிழக அரசியலில் மிகப்பெரும் புரட்சிகள் செய்து மறைந்தபிறகு, கட்சியைத் தோள்களில் சுமக்கிற பொறுப்பை ஏற்றார் கலைஞர். கலைஞர் தி.மு.க-வின் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் இன்று.

தந்தை பெரியாருக்காக அண்ணா காலியாக வைத்திருந்த தலைவர் பதவியை, தமிழர் நலன் காக்கும் தி.மு.க-வின் நலனுக்காக ஏற்றார் கலைஞர். கலைஞரே தலைவர் பொறுப்புக்குப் பொருத்தமான நபர் எனப் பெரியாரே அறிவிக்க, கழகத்தின் சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மரபுப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரும் மக்கள் இயக்கத்தின் மிகநீண்டகாலத் தலைவராக தி.மு.க-வை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தோளில் ஏந்திய தலைவர் கலைஞர் கடந்த ஆண்டு மறைந்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் நெருப்பாற்றில் நீந்திக் கழகத்தை ஆலமரமாக வளர்த்தெடுத்த பெருமைகொண்டவர் தலைவர் கலைஞர்.

பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், முரசொலி பத்திரிகை நிறுவனராக 75 ஆண்டுகள், கலைத்துறையில் 70 ஆண்டுகள், சட்டமன்றப் பணிகளில் 60 ஆண்டுகள் எனக் கடந்த தலைவர் கலைஞர் தி.மு.க எனும் பேரியக்கத்தின் தலைவராகவும் 50 ஆண்டுகளைத் தொட்டுவிட்டே மறைந்தார்.

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..!” என்றழைக்கும் தன் சிம்மக் குரலால் அத்தனையாண்டு காலம் தொண்டர்களைக் கட்டிவைத்திருந்த தலைவர் கலைஞர், இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற இந்த நாளில் அவரது நினைவைப் போற்றுவோம்.

Also Read: “கலைஞர் தொடங்கியது எதுவும் சோடை போனதாக வரலாறு கிடையாது..” : குருநானக் கல்லூரி விழாவில் முதல்வர் புகழாரம்!