DMK

41வது ஆண்டில் தி.மு.க இளைஞரணி... இளைஞரணியின் வளர்ச்சியில் இதயசூரியனும், இளையசூரியனும்!

நாற்பது ஆண்டுகளைக் கடந்த பிறகும் சீரிளமைக் குறையாமல் சிறப்புடனும் வலிவுடனும் திகழ்கிறது தி.மு.கழகத்தின் இளைஞரணி. பேரறிஞர் அண்ணாவால் தி.மு.க தொடங்கப்பட்டபோது, மொத்த கழகமுமே இளைஞரணிதான். முத்தமிழறிஞர் கலைஞர், நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர், இனமான பேராசிரியர் என அத்தனை பேருமே பெரியாரிடம் பயிற்சி பெற்ற துடிப்புமிக்க இளைஞர்கள். அந்த இளைஞர்களால் தமிழ்நாட்டின் பெரும்பாலான இளைஞர்கள் திராவிடக் கொள்கை வீரர்களாயினர். மொழிப் போர்க் களத்தில் போராளிகளாகி, இனம் காத்த தியாக மறவர்களாகத் திகழ்ந்தனர்.

தி.மு.கழகம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் மணிவிழா நாயகர்களான நிலையில், கழகத்திற்கு புதிய-இளைய ரத்தம் பாய்ச்சும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதுதான் தி.மு.க.வின் இளைஞரணி. 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள், தமிழ்மணக்கும் மதுரையின் ஜான்சிராணி பூங்காவில் சங்கத் தமிழ் தந்த நம் தங்கத்தலைவர்-ஓய்வறியா சூரியன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இளைஞரணியைத் தொடங்கி வைத்தார். கழக வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

தொடங்கி வைப்பதைத் தொடர்ந்து நடத்துவதில்தான் ஓர் இயக்கத்தின் வலிமையும் வெற்றியும் அடங்கியிருக்கிறது. தனது 13ஆம் வயதிலேயே 1966ஆம் ஆண்டில் ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க என்ற அமைப்பைத் தொடங்கி, கழகத்தில் படிப்படியாக வளர்ந்தவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர்-தலைவர் தளபதி அவர்கள். கழக முன்னோடிகளான தங்கப்பாண்டியன், எஸ்.எஸ்.தென்னரசு உள்ளிட்டவர்கள் அவரையே இளைஞரணி பொறுப்பில் நியமிக்கவேண்டும் என தலைவர் கலைஞரிடம் வலியுறுத்தினார்கள். தயங்கினார் தலைவர். நீண்ட விவாதத்திற்குப் பிறகும் -ஆலோசனைகளுக்குப் பிறகும் இளைஞரணி பொறுப்பு நம் தலைவர் தளபதி அவர்களிடம் வழங்கப்பட்டது. தலைவர் கலைஞரின் மகன் என்றாலும் கழகத்தில் எந்தப் பதவியையும் எளிதாகவோ உடனடியாகவோ தலைவர் தளபதி அவர்கள் பெற்றுவிடவில்லை.

1982ல் மாநில இளைஞரணிச் செயலாளரானார் தலைவர் தளபதி. எதிர்க்கட்சியாக இருந்த கழகத்தில் புது ரத்தம் பாய்ந்தது. அந்தக் குருதியோட்டம் சீராக அமைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைவர் தளபதி பயணித்தார். சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளில் சென்றார். காரில்-ரயிலில் பயணித்தார். இளைஞரணியை வலிமைப்படுத்தினார். தலைவர் கலைஞர் அறிவித்தப் போராட்டக்களங்கள் அனைத்திலும் முன்னணியில் நின்றது இளைஞரணி. இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று தலைவர் தளபதி உள்ளிட்ட இளைஞரணியினர் சிறை சென்றனர். முத்தமிழறிஞரின் இலக்கு நோக்கிப் பாயும் கணைகளாக இளைஞரணியினரை உருவாக்கியிருந்தார் தலைவர் தளபதி.

தி.மு.கழகத்தின் மாநாடுகளில் நடைபெறும் ஊர்வலங்கள் தனிச்சிறப்பு பெற்றவை. அந்த ஊர்வலங்களை பேரணி எனப்பெருமையுடன் அழைக்கும் சிறப்பைத் தந்தது தலைவர் தளபதி தலைமையிலான இளைஞரணிதான். ராணுவ அணி வகுப்புக்கு இணையாக வெள்ளை உடுப்பில் தலைவர் தளபதி தலைமையில் வரும் இளைஞரணியின் மிடுக்கான அணிவகுப்பை இந்தியாவின் பிரதமராக இருந்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர். 2007ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணிவெள்ளிவிழா மாநாடு அதன் வலிமையைக் காட்டியது. இயக்கத்திற்கு வலிவூட்டியது.

இளைஞரணியின் செயலாளர் என்பதால் தன்னை உடலாலும் உள்ளத்தாலும் எந்நாளும் இளைஞராகவே வைத்துக் கொண்ட தலைவர் தளபதி அவர்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் இந்தியாவின் மிகப்பெரும் இளைஞர் அமைப்பைத் தலைமையேற்று வழிநடத்தினார். தி.மு.கழகம் என்றென்றும் இளைஞர்களின் இயக்கமாக இருக்கும் -தலைவர் கலைஞர் அவர்களுக்குத் துணையாக இருக்கும் என்பதை தன் செயலாற்றலால் நிரூபித்தார் தலைவர் தளபதி.

ஓய்வறியா சூரியன் கலைஞரிடம் அவர் பெற்ற பயிற்சிகள், முத்தமிழறிஞர் கலைஞரின் மறைவுக்குப் பிறகும் இயக்கத்தை சிறிதும் சேதாரமின்றி - முன்னிலும் வலிமையாக வழிநடத்தும் ஆற்றல் மிக்கத் தலைவராக நம் தலைவர் தளபதியை உருவாக்கியது.தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராக-தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தை வழிநடத்தி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள முதல்வர் தளபதியை இந்திய அரசியல் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கிறது.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தான் செயின்’

- எனும் வள்ளுவரின் குறளுக்கேற்ப- காலம் கனியும் வரை பொறுமை காத்து-ஓயாது உழைத்து-மக்களின் மனங்களில் இதய சூரியனாய் இடம்பிடித்து-தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பேற்று-அனைத்து மக்களுக்குமான நல்லாட்சி வழங்கும் அரசாங்கத்தை நடத்தி வருகிறார் தலைவர் தளபதி அவர்கள்.

ஆற்றல்மிக்க தலைவர் தளபதி அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இளைஞரணியை அதேவேகத்துடனும், காலமாற்றத்திற்கேற்ற வியூகத்துடனும் வழிநடத்தும் பொறுப்பை தன் தோளில் சுமந்து மேற்கொண்டு வருகிறார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

என்றும் இளமையாக இளைஞரணி தனது பயணத்தைத் தொடரும் வகையில், தனது தாத்தாவைப் போலவும் தந்தையைப் போலவும் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சளைக்காமல் பணியாற்றுகிறார் இளைஞரணிச் செயலாளர். அப்பாவைப் போலவே தோற்றத்திலும் இளமை-செயலிலும் இளமை. பழகுவதில் இனிமை எனப் பண்பு நிறைந்தவராக அன்பு பொழிபவராக இருப்பது அவருக்குப் பலம். அது இளைஞரணிக்கும் இயக்கத்திற்கும் வலிமை சேர்க்கிறது.

வாரிசு அரசியல் என்று வக்கனைப் பேசியவர்களின் வாயை அடைக்கும் வகையில் தேர்தல் களம் கண்டு, பொதுமக்களின் பேராதரவுடன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பெருவெற்றி பெற்றுள்ளார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி. அவருடைய தாத்தாவுக்கு மகத்தான வெற்றியை மூன்று முறை அளித்த சேப்பாக்கம் வாக்காளர்கள் பேரனையும் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.

வாக்களித்த மக்களுக்கான நன்றியை வார்த்தைகளில் சொல்லாமல், கொரோனா பேரிடர்கால நிவாரண உதவி எனும் செயல்பாட்டால் ஒவ்வொரு வீட்டுவாசல் கதவைத் தட்டி நன்றியை வழங்கினார். உண்மையிலேயே சேப்பாக்கம் தொகுதிவாசிகளின் செல்லப்பிள்ளையாக அவர் இருக்கிறார். நாள்தோறும் தொகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களைச் சந்திக்கிறார். குடிசைப் பகுதிகளுக்குள் நுழைந்து குறைகளைக் கேட்கிறார். பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட இடங்களைத் தேடித்தேடிச் சென்று ஆவன செய்கிறார். சேப்பாக்கம் எம்.எல்.ஏ.போல எங்கள் தொகுதிக்கும் ஓர் எம்.எல்.ஏ. வேண்டும் என்பதே மற்ற தொகுதிவாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொளத்தூர் தொகுதியில் தலைவர் தளபதி ஒவ்வொரு இடமாகச் சென்று மக்களைச் சந்தித்தார். பேசலாம் வாங்க என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை வார்டு வார்டாக நடத்தினார். தொகுதி மேம்பாட்டுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். மக்களின் துயரங்களில் துணை நின்றார். உதவிக்கரம் நீட்டினார். அதனால்தான் ஹாட்ரிக் வெற்றியை அவருக்குத் தந்திருக்கிறார்கள் கொளத்தூர்வாசிகள். தந்தை வழியில் நடைபோடுகிறார் தனயன்.

செயல்வேகம்-புதுவியூகம் என இளைஞரணி அவர் தலைமையில் வீறுநடைபோடுகிறது. போராட்டக்களத்தில் அவரே முன்னின்றார். தண்டவாளத்தில் தலைவைத்த தலைவரின் வம்சமல்லவா! மிசா சிறைவாசத்தை எதிர்கொண்ட தலைவரின் பிள்ளையல்லவா! அந்தத் துடிப்புமிக்க உணர்வும்-எதையும் தாங்கும் இதயமும் இயல்பாக வாய்த்திருப்பதால் இளைஞரணியின் ஆற்றல் அதிகமாகியுள்ளது. புதிய உறுப்பினர்களின் வருகை பெருகியுள்ளது. தமிழகத்தில் உள்ள பலதரப்பு இளைஞர்களும் இளைஞரணிச் செயலாளரின் பின்னே அணிவகுப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொருவர் இதயத்திலும் தன் செயலாற்றலால் இடம்பிடித்திருக்கிறார் இளைஞரணிச் செயலாளர்.

தி.மு.கழகத்தின் குருதியோட்டமாக இருப்பவர்கள் உடன்பிறப்புகள். அந்தக் குருதியோட்டத்தைப் புத்துயிர்ப்புப் பெறச்செய்வது இளைஞரணி. தலைமுறைகள் கடந்தும் கழகத்தின் குருதியோட்டம் புதுவேகத்துடன் இருப்பதற்கு காரணமான இளைஞரணியை வலுவாகக் கட்டமைத்திருக்கிறார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி.

தமிழ்நாட்டு மக்களின் இதயசூரியனாகத் திகழும் தலைவர் தளபதி வளர்த்த இளைஞரணியை, காலத்திற்கேற்ற வகையில் வலிமைப்படுத்தி முன்னெடுக்கிறார் இளையசூரியனான இளைஞரணிச் செயலாளர். கழகம் எந்நாளும் மக்களுக்கான இயக்கம். இளைஞரணி எந்நாளும் அதற்குப் பக்கபலமாக இருக்கும்.

- அத்திக்கடையான்

நன்றி: முரசொலி

Also Read: “முதல் காரணமே இப்படியிருக்க, என்னதான் பேசுவார் அண்ணாமலை?” : முரசொலி தலையங்கம்