DMK

சமூக நலத் திட்டங்களுக்கான 'Champions of Change Award 2020’ விருது பெற்றார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

இன்று (16-04-2021), கோவா மாநிலம் தாஜ் ரெசார்ட் & கன்வென்ஷன் செண்டரில் நடைபெற்ற விழாவில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு Interactive Forum on Indian Economy அமைப்பு சார்பாக ‘Champions of Change Award 2020’ விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாண்புமிகு மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தலைமை தாங்கினார்.

இந்த விருதை 2018-ஆம் ஆண்டு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களும், 2019-ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களும் வழங்கினார்கள். இவ்விருதை, மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கடந்த காலங்களில் பெற்றுள்ளனர்.

சமூக நலனுக்கான இந்த விருதை ஏற்றுக் கொண்ட தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றிய வீடியோ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.

அதில், “பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களைத் தேர்வு செய்து - அவர்களுக்கு ஆண்டுதோறும் “சேம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச் அவார்டு” வழங்கி வரும் “இன்டராக்டிவ் ஃபோரம் ஆன் இந்தியன் எகானமி”அமைப்பிற்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து - இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ள மகாராஷ்டிரா ஆளுநர் மாண்புமிகு பகத் சிங் கோஷியாரி அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக நலத் திட்டங்களுக்கான - “சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது-2020”-க்கு என்னை தேர்வு செய்துள்ள உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு கியான் சுதா மிஸ்ரா அவர்களுக்கும் - இந்த அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்வில் இருப்போருக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது மிக முக்கியக் கடமை.

திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த போதெல்லாம், பல்வேறு சமூகநல - சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டில் சாதித்துக் காட்டியிருக்கிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அடிப்படையில் சமூகநீதிக்கான திட்டங்களை - சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள சமூக நலத்திட்டங்களும் - சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கின்றன என்பதை இந்த விருது பெறும் நேரத்தில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது கூட- கொரோனா பேரிடரில் மருந்து, உணவு, அத்தியாவசியத் தேவைகள் போன்றவை ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக - “ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்தை ஒரு இயக்கமாக நடத்தி – மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

அதன் தலைவராகப் பொதுவாழ்வில் இருக்கும் என் போன்றோரின் பணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த விருதிற்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள சமூக, பொருளாதார பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் என்றைக்கும் இந்தியாவின் முன்கள வீரனாகத் தமிழகம் இருக்கும் என்று உறுதியளித்து - என்னை இந்த விருதிற்குத் தேர்வு செய்த இந்த அமைப்புக்கும் மாண்புமிகு நீதியரசர்களுக்கும் மீண்டும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

Also Read: “ஹேக்கிங் முயற்சி? பாதுகாப்பு அறைகளுக்கு அருகே வாகனங்கள் ஏன்?” : தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் புகார்!