DMK

“ஊரக, உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆற்றிய அரும்பணிகளும் சாதனைகளும்!” : மகுடம் சூடிய தி.மு.க-15

வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 25.10.1996 முதல் 8-9-2001 வரை சென்னை மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயராக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி வகித்தார். அதைப்போல மீண்டும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறை 25-10-2001 முதல் 18-06-2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராக பதவி வகித்தார்.

13-5-2006 முதல் 15-5-2011 வரை தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், 29-5-2009 முதல் 15-5-2011 வரை தமிழக அரசின் துணை முதலமைச்சராகவும், தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி வகித்தார்.

1989 முதல் இன்று வரை 6 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த தலைவர் அவர்கள் ஏழாவது முறையும் சட்டமன்றத் தேர்தலில் வென்று தமிழகத்திற்கு ஏற்றம் சேர்ப்பார்.

25-10-2016 முதல் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், 28-8-2018 முதல் தி.மு.கவின் தலைவராகவும் பதவி வகித்து வரும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் தளபதி அவர்கள் மாண்புமிகு முதல்வராக பதவியேற்கும் நாள் மிக அருகிலேயே உள்ளது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்தபோது அவரது நிர்வாகத்தின்கீழ் பொது நிர்வாகம், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், தொழில்துறை சிறுபான்மையினர் நலன், பாஸ்போர்ட், சமூக சீர்திருத்தம் போன்ற 24 துறைகள் இருந்தன.

தமிழ்நாட்டில் 65 சதவிகித மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். 35 சதவிகித மக்கள் கிராமங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். அம்மக்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைகள் போன்றவற்றை சீர் செய்து தருவது ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறையின் முக்கிய கடமையாகும்.

1-4-2008 முதல் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டது. 2008-2009 இல் ஊரக கட்டமைப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.350 கோடி நிதியில் 73,217 பணிகள் முடிக்கப்பட்டன. 12வது நிதிக்குழுவின் மானியத் தொகை ரூ.3,600 கோடி செலவில் 22,113 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டன. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கான நிறுவனம் மறுசீரமைத்து நன்கு செயல்படுத்தப்பட்டது.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் 9,36,129 ஊரக வளர்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக ஆதிதிராவிடர்களுக்கு 2,96,131 வீடுகள் கட்டித் தரப்பட்டன. ரூ.30 கோடி செலவில் 737 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. அதேபோல் ரூ.133 கோடி செலவில் 5,326 ஆரம்பப்பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. ரூ.106 கோடி செலவில் 6,652 நியாயவிலை கடைகளுக்கு கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டன.

ரூ.18 கோடி செலவில் 1406 மதிய உணவு மையங்களுக்கு கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. ரூ.67 கோடி செலவில் 13,513 ஜீவன்தாரா கிணறுகள் சீர்படுத்தப்பட்டன. 700 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு அரசு கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. சுவர்ண ஜெயந்தி கிராம போஜனா திட்டத்தின் மூலமாக 11,836 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் ரூ.12 கோடி நிதி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

10,328 கிராமங்களில் ரூ.2,047 கோடி செலவிலான 41416 ஊரக வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. 2,517 பஞ்சாயத்துகளில் ரூ.7,170 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊரகப் பகுதிகளில் உள்ள சுடுகாடுகளில் எரிவாயு தகன மேடையில் அமைக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகளில் 113 சிறப்புத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. தூத்துக்குடி மாநகராட்சியின் சிறந்த சேவைக்காக பன்னாட்டு விருது வழங்கப்பட்டது. 518 பஞ்சாயத்துகளில் 12,950 வீடுகள் கட்டித் தரப்பட்டன. வந்தவாசி, தேவகோட்டை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

பூந்தமல்லி, கோயில்பட்டி, ராஜபாளையம், நெல்லிகுப்பம், கொடைக்கானல், ஈரோடு, திருவண்ணாமலை பழனி, நாகர்கோயில் போன்ற நகரங்களில் பேருந்து நிலையங்கள் ரூ.34 கோடி செலவில் நவீனபடுத்தப்பட்டன. தாம்பரம், சாத்தூர், மணலி, திண்டிவனம் ஆரணி, திருச்செங்கோடு, போரூர் நகராட்சிகளில் சாலை போக்குவரத்து வசதிகள், பேருந்து வசதிகள் செய்து தரப்பட்டன.

ரூ.375 கோடி செலவில் கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, நெல்லை, ஆவடி, உதகமண்டலம், கும்பகோணம், திருவாரூர், பெருநகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. சென்னையை சுற்றி ஆவடி, தாம்பரம், மதுரவாயல், திருமழிசை, போரூர், அம்பத்தூர், திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டமும் கழிவுநிர் அகற்றும் திட்டமும் நிறைவேற்றப்பட்டன.

திருச்செங்கோடு, போரூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டன. பெருநகர் வளர்ச்சி திட்டக் குழுவிற்கு உட்பட்ட மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், செம்பாக்கம், பெருங்களத்தூர், திருமழிசை, பெருங்குடி, பீர்க்கங்கரணை போன்ற 19 பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கடலோர ஊராட்சிகளில் 94 கோடி செலவில் சாலைகள் அமைக்கப்பட்டன. 2006-2011 தி.மு.க ஆட்சியில் 510 பேரூராட்சிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. நகர்ப்புற புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் கணினிமயமாக்கப்பட்டது.

மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் அவலநிலை அகற்றிட அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகளிலும் இருந்த 417 உலர் கழிப்பிடங்கள் நீக்கப்பட்டு நவீன கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டன.

ரூ.120 கோடி முதலீட்டில் 4,76,500 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டன. ரூ.17 கோடி செலவில் ஊரக சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 44,737 பேர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

2008-2009 ஆம் ஆண்டு 25,000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது. 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் 25,000 இளைஞர் சுய குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய நிதி உதவியும் வழங்கப்பட்டது.

ஊரக நிர்வாகத்தில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்காலத்தில் 24,793 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து தரப்பட்டன. 33,575 கை பாம்புகள் போட்டு தரப்பட்டன. ஊரக, நகர்புற குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,504 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக 4 லட்சம் குடும்பங்கள் குடிநீர் வசதி பெற்றன.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையிலும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்திலும் பெரிய குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை தவிர வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து, பெருங்குளம் பஞ்சாயத்து, கடம்பூர் பஞ்சாயத்து, விருதுநகர் மாவட்டத்தில் 11 பஞ்சாயத்துகள், பழனி நகராட்சி, மேட்டுப்பாளையம் நகராட்சி, குன்னூர் பஞ்சாயத்து, ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம், நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், சேலம் மாவட்டத்தில் 4 பஞ்சாயத்துக்கள், திருவண்ணாமலையில் ஒரு பஞ்சாயத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவிலிமேடு பஞ்சாயத்து, செம்பாக்கம் பஞ்சாயத்து, திருநின்றவூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பஞ்சாயத்து, கரூர் மாவட்டத்தில் தான்தோன்றி பஞ்சாயத்து, திருச்சி பகுதிகளில் பல பஞ்சாயத்துகள், என 167 பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் ரூ.125 கோடி செலவிடப்பட்டு ஊரக நகர்ப்புற மக்களுக்கு தடையில்லாத குடிநீர் வழங்கப்பட்டது.

ரூ.200 கோடி செலவில் 1,37,125 வளர்ச்சித் திட்டங்கள் 10104 பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டன. மேலும், ரூபாய் 4,564 கோடியில் 52 திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்துகளிலும் பஞ்சாயத்து ஒன்றியங்களும் நகராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டன.

ஊரகப் பகுதிகளில் பல உள்ளாட்சி அமைப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டன. பல நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அவற்றின் எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டன. ஊரக, உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

2006 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் தமிழ்நாட்டில் இருந்த 12,618 கிராம ஊராட்சிகள் 385 ஊராட்சி ஒன்றியங்கள் 29 மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்தலில் மொத்தம் ஒரு லட்சத்து 7,716 ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் (மதுரை மாவட்டம்), கொட்டக் கச்சியேந்தல் (விருதுநகர் மாவட்டம்) ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த ஊர்களுக்கு நடத்தப்பட்ட தேர்தல்களில் வெற்றிபெற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள், கிராம சமுதாயத் தலைவர்கள் ஆகியோரை அழைத்து சென்னையில் முதலமைச்சர் தலைமையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 11 ம் நாள் சமத்துவப் பெருவிழா நடத்தப்பட்டது.

அக் கூட்டத்தில் உரையாற்றிய உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கீரிப்பட்டி, கொட்டகச்சியேந்தல் ஆகிய கிராமப் ஊராட்சிகளுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும் என்றும் பாப்பாபட்டி, நாட்டார் மங்கலம் கிராம ஊராட்சி ஒன்றியத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நிதியிலிருந்து தலா ரூபாய் 20 இலட்சம் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி நிதி வழங்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவை மாநகருக்கு ரூ.65 கோடி செலவில் உள்கட்டமைப்பு, வசதிகள் செய்துதரப்பட்டன. கோயம்புத்தூரில் 165 ஏக்கர் நிலத்தில் செம்மொழிப் பூங்கா அமைத்துத் தரப்பட்டது அதேபோல் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டன. சிறிய நடுத்தர நகரங்களில் ரூ.136 கோடி செலவில் நகரக் கட்டமைப்பு சீர்படுத்தடுத்தும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரூபாய் 120 கோடி செலவில் 8 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மகளிர் சிறு வணிக கடன் திட்டம் தமிழகத்தின் அனைத்து ஊரக நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5,000 வீதம் 1,52,000 மகளிர் பயன்பெற்றனர். இவர்களுக்காக ரூபாய் 19 கோடி கடனாக வழங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றியங்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.

ஊராட்சி ஒன்றியங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் சட்டத்திருத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. சொத்து வரி வருவாய் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதி கூடுதல் ஆக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சி துறை அமைப்புகளுக்கு ஒதுக்கும் நிதி 2006-2007 ஆம் நிதியாண்டில் ரூ.1,225 கோடியிலிருந்து 2007-2008 ஆம் ஆண்டு 1,583 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த நிதி 2008-2009 ஆம் ஆண்டில் 1644 கோடியாக உயர்த்தப்பட்டது. 2009-2010 இந்த நிதியை 1,926 கோடியாக உயர்த்தப் பட்டது. மாநில நிதிக் குழுவின் 30 சதவீத மானியம் ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டுக் கழகம் ஊரக வளர்ச்சித்துறையுடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுக்க 1,25,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன இவற்றின் மூலம் ரூ.4,000 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஊரக, உள்ளாட்சி பகுதிகளைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.

நகர்ப்புற மேம்பாட்டிற்காக 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் 123 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து ரூ.1666 கோடி வழங்கியது. தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி கழகம் மூலம் சென்னையில் ரூ.100 மதிப்பில் அடையாறு பூங்கா அமைக்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டில் பல புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தலைவர் தளபதி அவர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 23-11-2007 அன்று அரியலூர் மாவட்டம் உதயமானது. 22-2-2009 அன்று திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. பல புதிய கோட்டங்கள் அமைக்கப்பட்டன. பேரூராட்சிகளில் வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு மிகப் பெரிய முக்கியத்துவம் வழங்கப் பட்டது. அனைத்து பஞ்சாயத்துகளிலும் நூலகங்களும் விளையாட்டு திடல்களும் அமைக்கப்பட்டன.

கிராமப் பஞ்சாயத்து ஆய்வுக்குழு

தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க அரசு கிராம மக்கள் மற்றும் கிராம பஞ்யாத்துகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று குழுக்களை நியமித்தது. 1996 ஆம் ஆண்டு எல்.சி. ஜெயின் குழுவை நியமித்தது அக்குழுவின் அறிக்கையை 1997 இல் பெற்று அதன் பல பரிந்துரைகளை நடைமுறைபடுத்தியது.

உள்ளாட்சித்துறை பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க 11-11-1997 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி.மணி அவர்கள் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை நியமித்தது. அக்குழு 11-1-1999 அன்று தமது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அக்குழு வழங்கிய 1209 பரிந்துரைகளில் 718 பரிந்துரைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றியது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிராம வளர்ச்சிக் குழு

தமிழக அரசின் கிராம சபை மற்றும் நகர சபைகளின் வளர்ச்சி தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மூன்றாவது உயர்மட்டக் குழு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 22-1-2007 அன்று அமைக்கப்பட்டது. கிராம வளர்ச்சிக்கு இக்குழு 99 பரிந்துரைகளை வழங்கியது. அவற்றில் 61 பரிந்துரைகளை மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நிறைவேற்றி முடித்தார்.

18-3-2007 அன்று சென்னையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு உள்ளாட்சித் தலைவர்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் 27 மாவட்டங்களைச் சார்ந்த 363 பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ளாட்சி மற்றும் கிராம சபைத் தலைவர்களின் மண்டல மாநாடுகள் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 24-7-2007 அன்று ஈரோட்டிலும், 25-7-2007 அன்று திருச்சியிலும், 3-8-2007 அன்று திருவண்ணாமலையிலும், 23-8-2007 அன்று விருதுநகரிலும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் மொத்தம் இருந்த 12,618 கிராம பஞ்சாயத்து தலைவர்களில் 11,984 கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், இம்மண்டல மாநாடுகளில் கலந்து கொண்டனர்.

இம்மண்டல மாநாடுகளின் முடிவில் தமிழக அரசிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 47,108 திட்டங்களை நடைமுறைபடுத்தி கிராமப்புற மற்றும் நகர்புற மக்களுக்கு நன்மைகள் பல செய்தார். சென்னை மாநகராட்சியில் சமூக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. சிங்காரச் சென்னை திட்டம் நிறைவேற்றப்பட்டது. 1997ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்பட்டது.

விருதுகளும் பாராட்டுகளும்

இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும் குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதினை 23-2-2011 அன்று தமிழ்நாடு அரசு பெற்றது.

2006-2007 ஆம் ஆண்டு தமிழக ஊராட்சி துறை இந்தியாவின் முதல் சிறந்த ஐந்து இடங்களில் ஒன்றை பெற்று 86 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசை வென்றது. திறமையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டதற்காக தமிழக ஊராட்சித் துறை மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கிய முதல் பரிசினையும் ஒரு கோடி ரூபாய் ரொக்க பணத்தையும் 2007-2008ம் ஆண்டு பெற்றது

சிறந்த நிர்வாக திறனுக்காக தமிழ்நாடு நகராட்சி துறைக்கு 2008 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு தரச்சான்றிதழ் ISO-9000 வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று உச்சநீதிமன்றம் பாராட்டியதோடு மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் கருத்துக் கூறியது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2007-2008 ஆம் ஆண்டு கடலூர், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களும், 2008-2009-ஆம் ஆண்டு நாகப்பட்டிணம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் 2009-2010 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு புதுடெல்லியில் நடந்த அரசு விழாவில் அம்மாவட்டங்களுக்கு இந்தியாவில் சிறந்த மாவட்டங்களுக்காகன தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த நிர்வாகத்திற்காக தமிழ்நாடு நகராட்சி துறை 2008ஆம் ஆண்டு பன்னாட்டு தரச் சான்றிதழ் ISO 9000-2000 பெற்றது. தூத்துக்குடி நகராட்சி, திண்டுக்கல் நகராட்சி ஆகியன பன்னாட்டு தரச் சான்றிதழ் பெற்றன.

மாண்புமிகு தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் துறை நிர்வாகத்திறனுக்காக இந்தியாவிலேயே இரண்டாவது தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நிர்மல் கிராம் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

2009-2010 ஆம் ஆண்டில் ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தமிழ்நாடு அரசுக்கு இந்தியாவில் சிறந்த இடம் வழங்கப்பட்டு அதற்காக ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.

76% பெண்கள் 56% தாழ்த்தப்பட்டோர் பயன்பெறும் வகையில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்து.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைப் பின்தங்கிய கிராமங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் செயல் படுத்தியதில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த அரசாக தமிழ்நாடு அரசு வழங்குகிறது என்று மத்திய அரசு தமிழக அரசைப் பாராட்டி தமிழக அரசிற்கு 6 விருதுகளை வழங்கி கௌரவித்தது.

- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

Also Read: குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி தமிழகத்தை வளமாக்கிய கலைஞர் : மகுடம் சூடிய திமுக-14