DMK
“உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளை உலகத் தரத்திற்கு உயர்த்திய கலைஞர்” : மகுடம் சூடிய தி.மு.க-7
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 25-10-1996 முதல் 8-9-2001 வரை முதல்முறை சென்னை மாநகராட்சி மேயராகவும், 25-10-2001 முதல் 18-06-2002 இரண்டாவது முறை சென்னை மாநகராட்சியின் மேயராகவும், 13-05-2006 முதல் 15-05-2011 வரை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், 29-05.2009 முதல் 15-05-2011 வரை துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 25-10-2016 முதல் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவராகவும் 28-08-2018 முதல் தி.மு.க-வின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
மேயராகவும், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சாரகவும் அவர் ஆற்றிய அரும்பணிகளால் அரசாங்கத்திற்கு பல விருதுகளும், பாராட்டுகளும் கிடைத்தன. அவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் 12,618 கிராம ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 32 மாவட்ட ஊராட்சிகளும் இருந்தன.
1966 ஆம் ஆண்டுக்கு முன்பு அமைந்தகரை வரை மட்டுமே சென்னையின் எல்லை இருந்தது. பின்பு தி.மு.க ஆட்சியில் அண்ணாநகர் ஏற்படுத்தப்பட்டு சென்னையுடன் சேர்க்கப்பட்டது. அதற்கு பிறகு தி.மு.க ஆட்சியில் மேலும் பல பகுதிகள் சென்னையுடன் சேர்க்கப்பட்டன. சென்னை விரிவாக்கம் பெற்றது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமான சென்னை மாநகரை நிர்வகிக்கும் சென்னை மாநகராட்சியில் 31-10-1968 வரை 99 கவுன்சிலர்களும் 5 தேர்வு கவுன்சிலர்களும் இருந்தனர்.
சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்த்தப்பட்டது. தேர்வு உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை தி.மு.க அரசால் உருவாக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் தொடக்கப் பள்ளிகளும் மாவட்டக் கழகங்களின் கட்டுப்பாட்டில் உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டன. தி.மு.க ஆட்சியில் 1970 ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றியங்களால் நடத்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 18,531. அடுத்து 1973-74ல் 20,118 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் செயல்பட்டன.
1970ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 12,350 மகளிர் மன்றங்களும் 22,000 வானொலி மன்றங்களும் கிராமங்களில் செயல்பட்டன. 1970ம் ஆண்டு 23,088 வானொலிப் பெட்டிகளும், 1971-72ஆம் ஆண்டு 32,500 வானொலிப் பெட்டிகளும் 1975ல் 45,000 வானொலிப் பெட்டிகளும் கிராமங்களுக்கு வழங்கப்பட்டன.
1967 ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகில் உள்ள சேக்காடு எனும் ஊரில் பொது உணவு தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு மேலும் 97 இடங்களில் உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டன. 1970-71 ஆம் ஆண்டு 1,34,000 ஆயிரம் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நகர்ப்புற திட்டங்கள் சட்டம் 1971ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 1974 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சிக்கென ஓராண்டுத் திட்டம் ஒன்றினை கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு அறிவித்து செயல்படுத்தியது.
24 ஆயிரத்து 500 பாசனக் குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் உயர்த்தி சீராக்கப்பட்டு ஊராட்சி ஒன்றியங்களின் பொறுப்பின் கீழ் பராமரிக்கப் பட்டன. ரூ.18 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குடிநீர் பிரச்சனையை போக்க 34,265 கிணறுகள் ஆழப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டன. ஊரகத் தொழில் வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டு 1,096 சிறு தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கப்பட்டது.
மதுரை நகராட்சி 1-5-1971 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆவடி, அம்பத்தூர், கத்திவாக்கம், மாதவரம் ஆகியவை நகராட்சிகளாக 1-7-1971 ஆம் ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்டன. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு நகர் மற்றும் இணைப்புத் திட்டம் 1971 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
1974-75 ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் 1557 புதிய சிறு பாலங்கள் கட்டப்பட்டன 219 பழைய சிறு பாலங்கள் சீரமைக்கப்பட்டன,
உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகமான பொறுப்புகள், அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக ஊராட்சி சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் 2-11-1989 அன்று தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்டது. கிராம ஊராட்சிகள் உள்ளாட்சி ஒன்றியங்களில் பிரதிநிதிகளின் பதவி காலம் மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. மாநகராட்சிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவர் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மாநகராட்சி சட்ட திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 1989-91 தி.மு.க ஆட்சியில் 89,000 தொகுப்பு வீடுகள் ஆதிதிராவிட மக்களுக்கு கட்டித் தரப்பட்டன. தி.மு.க ஆட்சியில் ஓட்டு வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் கூரை வீடுகள் கட்டித் தரப்பட்டன. ஒவ்வொரு ஊராட்சியிலும் சமூகக் காடுகள் திட்டம் நிறைவேற்றப்பட்டன. 1990ஆம் ஆண்டு 352 சமூக காடுகள் ஊராட்சிகளால் பராமரிக்கப்பட்டன.
சொந்த அலுவலகக் கட்டிடம் இல்லாத 1912 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டில் சொந்த அலுவலகக் கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டதன. சொந்தமாக கட்டிடம் இல்லாத ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு தலா ஒரு ரூ.1,25,000 மதிப்பீட்டில் 689 புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன.
1989-90ஆம் ஆண்டில் ஜவகர் வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. 2,692 ஆதிதிராவிடர்களுக்கு ஜீவன்தாரா பாசன கிணறுகள் ஏற்படுத்தப்பட்டன. ரூ.6 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்துகளில் 100 சிறு பாலங்கள் கட்டித் தரப்பட்டன.
500 முதல் 1000 பேர் வரை மக்கள் வாழும் கிராம குடியிருப்புகளை இணைக்கும் சாலைகள் 1,500 கிலோ மீட்டர் நீளத்தில் தார் சாலைகளாகவும் 2,345 கிலோமீட்டர் நீள சாலைகள் கல்சாலைகளாகவும் ரூ.44 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டன.
1989-91 தி.மு.க ஆட்சி காலத்தில் 136 தொடர் சுகாதார துணை நிலையக் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஊரக குடிநீர் மேம்பாட்டிற்காக ரூ.2 கோடியே 80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தமிழ் நாடு முழுவதும் 17,456 கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டன.
கிராம ஊராட்சிப் பகுதிகளில் வாழும் ஆண்டு வருமானம் ரூபாய் மூவாயிரத்துக்கும் குறைவாக உள்ள ஆதிதிராவிடர் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் இறந்தால் அவரது இறுதிச்சடங்கு செலவிற்கு ஊராட்சிகள் மூலம் உதவித் தொகையாக வழங்கப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நெடுங்காலமாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 மற்றும் 12 தேதிகளில் இரண்டு கட்டங்களாக 6 மாநகராட்சிகள் 104 நகராட்சிகள், 635 பேரூராட்சி ஒன்றியங்கள், 12,584 பஞ்சாயத்துகளுக்கு நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 747 மக்கள் பிரதிநிதிகள், 25-10-1996 அன்று பதவி ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பினை கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசு உருவாக்கிக் கொடுத்தது.
பெண்ணுரிமைக்காக முழக்கமிட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில் அதே இலட்சியத்திற்கு பெரும்பங்கு ஆற்றிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு.க அரசு உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. மொத்தம் இருந்த ரூ.1,16,747 நிர்வாகப் பொறுப்புகளுக்கு 44,143 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களாகவும் துணைத் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் பதவி வகித்தனர்.
1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த 474 மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளில் 161 பதவிகள் பெண்களுக்கும், தலித்களுக்கு 35 பதவிகளும் ஒதுக்கப்பட்டன. மொத்தம் இருந்த 28 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளில் 10 பதவிகளில் பெண்களுக்கும் அதில் 4 பதவிகள் தலித்களுக்கும் வழக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்த 649 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களின் 242 பதவிகள் பெண்களுக்கும் 97 பதவிகள் தலித்களுக்கும் ஒதுக்கப்பட்டன. மொத்தம் 106 பேரூராட்சி தலைவர் பதவிகளில் 36 பதவிகள் பெண்களுக்கும் 6 பதவிகள் தலித்களுக்கும் வழங்கப்பட்டன.
ஏற்கனவே முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் ஆரம்பித்து பணி முடியாமல் இருந்த 14,414 பணிகளும் 1996-2001 தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட புதிய பணிகளையும் சேர்த்து ஒன்பது லட்சத்து 36 ஆயிரத்து 129 பணிகள் செய்து முடிக்கப்பட்டன. அதற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டது போக கூடுதலாக ரூபாய் 540 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை கிராம ஊராட்சி தலைவர்களுக்கு தி.மு.க அரசு வழங்கியது. கிராம ஊராட்சி அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதற்காக ஊராட்சித் தலைவரை ஊராட்சியின் நிர்வாக அதிகாரியாக நியமித்து அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் அரசு வழங்கியது.
மின்கட்டணம், குடிநீர் கட்டணம் கூட செலுத்த முடியாத நலிந்த நிலையில் இருந்த கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு நிதி ரூ.5 கோடி 2000-2001ல் ரூ.7 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது. ரூ.11 கோடி 92 இலட்ச செலவில் 701 கிராம ஊராட்சிகளுக்கு புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. ஊரகப் பகுதிகளில் 2 இலட்சத்து 72 ஆயிரம் தெரு விளக்குகள் தமிழ்நாடு முழுவதும் போடப்பட்டன. கிராமப்புறங்களில் 12,000 தெருவிளக்குகள் சோடியம் விளக்குகளாக மாற்றப்பட்டன. நகர்ப்புறங்களில் 90,000 தெருவிளக்குகள் சோடியம் விளக்குகளாக மாற்றப்பட்டன.
கலைஞர் தலைமையில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் சென்னை, மதுரை போன்ற பல நகரங்களில் அண்ணாநகர், கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் போன்ற பல நகரங்கள் உருவாக்கப்பட்டன. தெரு பெயர்கள் தமிழில் வைக்கப்பட்டன.
கிராம ஊராட்சித் தலைவரை தலைவராகவும் மக்களை உறுப்பினர்களாகவும் கொண்டு இயங்கும் கிராமசபை அமைப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. மாவட்ட திட்டக்குழுக்கு மாவட்ட ஊராட்சித் தலைவரையே தலைவராக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது. 9 கிராம ஊராட்சிகளும் சேலம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியமும் புதிதாக உருவாக்கப்பட்டன.
அதுவரை நகர் பகுதிகளில் மட்டுமே இருந்து வந்த குடிநீர் குழாய் வீட்டு வசதிக் இணைப்பு வசதிகள் கிராம பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.
1996 -2001 தி.மு.க ஆட்சியில் ரூ.631 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 96 ஆயிரம் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. ரூ.29 கோடி செலவில் உள்ளாட்சி நிறுவனங்களைச் சார்ந்த 1,323 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு சொந்த கட்டிடங்களும் ரூ.133 கோடி செலவில் 5,376 தொடக்கப்பள்ளிகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. 18 கோடி செலவில் 1400 சத்துணவு மையங்களுக்கு ரூ.106 கோடி செலவில் 4650 நியாயவிலை கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன.
ரூ.53 கோடியே 86 லட்சம் செலவில் 35 ஆயிரத்து 500 நீர்பிடிப்பு ஆதாரங்களும் ரூ.67 கோடி செலவில் 13,500 ஜீவாதார கிணறுகளும் அமைக்கப்பட்டன.
ஊரக குடியிருப்புகளில் ரூ.53 கோடி செலவில் இரண்டு லட்சத்து 67 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. 2499 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ரூ,7 கோடியே 99 லட்சம் செலவில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டன.
ரூ.9 கோடி செலவில் 3850 விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மையங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டன. ஊரக சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.19 கோடியே 89 லட்சம் செலவில் 54,238 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. தனியார் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்த 812 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு புதிய அரசு கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன.
சாதி சமயப் பூசல் அற்ற சமுதாயம் அமைய அனைத்து சாதியினரும் பயன்படுத்தும் வகையில் புதிதாக சமத்துவ மயானம் அமைக்கபட கிராம ஊராட்சிகளுக்கு தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கிராம ஊராட்சிகளில் அய்யன் திருவள்ளுவர் பெயரில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
ஆண்டுதோறும் சிறப்பான மற்றும் புதுமையான முயற்சிகளை செயல்படுத்தும் 15 கிராம ஊராட்சிகளை சிறப்பிக்கும் வகையில் உத்தமர் காந்தி விருது வழங்கும் திட்டம் 2006 ஆம் ஆண்டு முதல் தி.மு.க அரசால் செயல்படுத்தப்பட்டது
நவம்பர் முதல் நாள் உள்ளாட்சி அமைப்புகள் தினம் என்று 2007 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய ரூ.793 கோடி கடன் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,030 கோடி கூடுதலாக வழங்கப்பட்டது.
ரூ.717 கோடி செலவில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தி.மு.க ஆட்சியில் 2010-2011ம் ஆண்டு 16 மாவட்டங்களிலும் 70 வட்டங்களிலும் உள்ள 2,500 ஊராட்சிகளிலும் 3600 கிராம ஊராட்சிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் கணினி மயமாக்கப்பட்டன. 2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் ரூ.2,047 கோடி செலவில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் 10,378 கிராமங்களில் நிறைவேற்றப்பட்டன.
2007-2008 ஆம் ஆண்டு ரூ.8 கோடி செலவில் 9 மாவட்டங்களில் 17 பேரூராட்சிகளில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் அமைத்துத் தரப்பட்டன.
மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் ஆகிய மாநகராட்சிகள் தரம் உயர்ந்தப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம், தர்மபுரி மாவட்டத்தில் அரூர், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை ஆகிய மூன்று கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல் தண்டராம்பட்டு, திண்டுக்கல் ஆத்தூர், மாதவரம், கரூர் மாவட்டம் கடவூர், குறிஞ்சிப்பாடி, வேலூர் ஆம்பூர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 9 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டன.
ரூபாய் 200 கோடி செலவில் 10,100 பஞ்சாயத்துகளில் ரூபாய் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 125 வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 4,565 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் 58 நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 100 பேரூராட்சிகளில் உள்ள இடுகாடுகளில் நவீன தகன எரிவாயு மேடைகள் அமைத்து தரப்பட்டன. நவீன இறைச்சிக் கூடங்கள், தாய், சேய் நல விடுகள் முறைப்படுத்தப்பட்டன ஏழு மாநகராட்சிகள் 180 நகராட்சிகளில் உர கிடங்குகள் அமைக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையில் பாதிப்புகள் தொடர்ந்ததால் 2006 ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் சுனாமி மறுவாழ்வு திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியது. அதன்படி 18 பேரூராட்சிகளில் 1,602 குடியிருப்புகள் அடங்கிய 257 கடலோர கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது. சுனாமி நிவாரணப் பணிகள் உள்ளாட்சித் துறை நிர்வாக அமைப்புகள் மூலம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன.
சுனாமியால் பாதித்த 19 பேரூராட்சிகளில் 61,000 உறுப்பினர்களைக் கொண்ட 3,387 சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சுனாமி பாதித்த திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம் தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் 2,630 வீடுகள் சுமார் 63 கோடி மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் கட்டித் தரப்பட்டன.
அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 3-9-2007 அன்று தொடங்கிவைக்கப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ரூ.3,184 கோடி செலவில் 561 பேரூராட்சிகளில் சாலை அமைத்தல் போன்ற கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் 12,618 கிராம ஊராட்சிகளுக்கும் 2,549 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம், நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் ரூபாய் 5,134 கோடி செலவில் 47 திட்டங்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் நகரங்களில் நிறைவேற்றப்பட்டன. இத்திட்டத்தின்படி பேரூராட்சிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டன.
- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!