DMK
இடஒதுக்கீடு,சமத்துவபுரம்: அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கும் உழைத்த கலைஞர் அரசு: மகுடம் சூடிய தி.மு.க-5
ஆரம்பகால இந்திய சமுதாயத்தில் மனுதர்மம் மற்றும் வர்ணாசிரம கோட்பாடுகளின்படி சாதியை மையமாகக் கொண்டு சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தப்பட்டன. மன்னராட்சி காலங்களில் வரி செலத்துபவர்களுக்கே சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்பட்டன
பிற்காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோரின் தலைவர் மகாத்மா நாதுராம் ஜோதிபா புலே அவர்கள் ஆரம்பித்த “சத்திய சோடக் சமாஜ்” எனும் சீர்திருத்த அமைப்பின் மூலம் சாதாரண மக்களுக்கு கல்வி இட ஒதுக்கீடு, உரிமைகளைப் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உரிமையற்ற மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஒரு ஆரம்பப் பள்ளியை துவங்கி நடத்தினார். முதன்முதலில் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி அரசு 1818ம் ஆண்டு உரிமையற்ற இந்திய மக்களில் சிலரை ஆங்கில ராணுவத்தில் சேர்த்துக் கொண்டது. பின்னர் பிற அரசுப் பணிகளில் இந்திய மக்களில் பலர் ஆங்கில அரசால் நியமிக்கப்பட்டனர்.
இங்கிலாந்து நாட்டின் அரசி விக்டோரியா மகாராணி 1858ம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்திய மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு சமநிலை சமத்துவம் உருவாக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்பின் முதன்முதலில் ஆங்கில அரசு 1882-ஆம் ஆண்டு இந்திய சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு அரசு பதவிகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. பின்னர் இந்த இட ஒதுக்கீடு 1886ஆம் ஆண்டு 12 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது.
ஆங்கில அரசு 1883 ஆம் ஆண்டு ஒரு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை வெளியிட்டது. பின்னர் 39 பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலைப் புதுப்பித்து 1898 ஆண்டு ஆங்கில அரசு வெளியிட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 1909 ஆம் ஆண்டு சட்டம், 1919 ஆம் ஆண்டு சட்டம் 1935 ஆம் ஆண்டு சட்டம் ஆகியன தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, இந்திய சமூக மக்களின் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தின.
கோலாப்பூர் சமஸ்தான மன்னர் சத்ரபதி சாகு மகாராஜா தனது அரசாட்சியில் அரசு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 26.7.1902 அன்று அரசாணை பிறப்பித்து சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்கு மகத்தான சேவை செய்தார். மைசூர் மன்னரும், பரோடா மன்னரும் பம்பாய் சமஸ்தான மன்னரும், தங்கள் ஆட்சிக்குட்பட்ட அரசாங்க வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கினர். 1932 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் இட ஒதுக்கீடு கருத்து வலியுறுத்தப்பட்டது.
சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி அரசு 16.08.1921 அன்று தென்னிந்தியாவின் முதல் இட ஒதுக்கீடு அரசாணையையும் (GO.MS No.163) 15-8-1922 அன்று இரண்டாவது இட ஒதுக்கீடு அரசாணையையும் (MRO Public Ordinance G.O. No.658, dated 15-08-1922) தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அவர்களின் முயற்சியால் டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அரசு 16.3.1928 அன்று இட ஒதுக்கீடு தொடர்பான மூன்றாவது அரசாணையையும் (MRO Public Ordinance G.O. No.761 dated 06.02.1924) வெளியிட்டது. இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு நன்மைகள் மலர்ந்தன.
தாழ்த்தப்பட்ட மக்களை மதிப்புக்குறைவாக குறிப்பிடும் சூத்திரன், பஞ்சமர் எனும் சொற்கள் நீதிக்கட்சி அரசு வெளியிட்ட அரசாணைகளின் மூலம் அரசு பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன. 1925 ஆம் ஆண்டு சீர்மரபினர் சாதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின்பு 21.11.1947 அன்று தனி இடஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.
26.1.1950 அன்று இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த செல்வி செண்பகம் துரைராஜ் என்பவர் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தொடுத்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் எழுந்தது. குறிப்பாக சென்னையில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள். சமூக நீதியின் அடிப்படை அம்சமான இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்றும் கோரி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் பல தலைவர்கள் வலியுறுத்தினார்கள். பிரதமர் நேரு அவர்களிடம் முறையிட்டனர். பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசியல் சாசன பிரிவு 15ல் கூடுதலாக உட்பிரிவு 4-யை சேர்த்து இட ஒதுக்கீடு இந்தியாவில் தொடர்ந்து மக்களுக்கும் கிடைத்திட ஆவன செய்தார். இந்த வெற்றியில் தி.மு.கவின் பங்கு மகத்தானது.
தமிழ்நாட்டில் அமைந்த காங்கிரஸ் அரசும் அ.தி.மு.க அரசும் இடஒதுக்கீடு முறையில் சில மாற்றங்கள் செய்தன. 1969ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தலைமைச் செயலகத்தில் தனித்துறை உருவாக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு தி.மு.க அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தனியாக ஒரு அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது. சீர்மரபினர் நலனை மேம்படுத்த சீர்மரபினர் நலத்துறை உருவாக்கப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் 1968 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு புகுமுக வகுப்பு வரை கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. 1969-71 தி.மு.க ஆட்சியில் சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ஆய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 7-6-1971 தி.மு.க ஆட்சியில் அந்த இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் செய்யப்பட்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 18% பிற்படுத்தப்பட்டோருக்கு 31% பொதுப் பிரிவினருக்கு 51% என்று இடஒடுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. 1969-1976 தி.மு.க ஆட்சியில் கொங்கு வேளாளர் சாதி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
தி.மு.க அரசு 28.3.1989 புதிய இட ஒதுக்கீட்டு முறையை அறிவித்தது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனும் புதிய சமூகப் பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தனியாக வழங்கப்பட்டது. அதன்பின் 13-8-1990 என்று திமுக அரசு புதிய இட ஒதுக்கீடு முறையை அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி தாழ்த்தப்பட்டோருக்கு 18%, பழங்குடியினருக்கு 1 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் சீர் மரபினருக்கும் 20 சதவீதம், பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம் என இட ஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தலைமைச் செயலகத்தில் தனி துறை 1989 ஆம் ஆண்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்திய குடியுரிமை தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு சென்னையில் 1970ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் குடியுரிமைத் தேர்வு பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.
மண்டல் குழு அறிக்கையின் அடிப்படையில் இந்திய பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு 07-8-1990 என்று மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தது. இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தினார். இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க பல போராட்டங்களை நடத்தியது. தி.மு.கவின் கடுமையான முயற்சியால்தான் மண்டல் குழு பரிந்துரை சட்டமாக்கப்பட்டது. இப்பெருமையில் தி.மு.கவிற்கு பெரும் பங்கு உண்டு.
அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி சமத்துவ உணர்வுடன் வாழுகின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்திய நாட்டின் சுதந்திரப் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 1997 ஆம் ஆண்டு திமுக அரசு உருவாக்கிய புதுமையான புரட்சிகரமான பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி அமைக்கப்படும் ஒவ்வொரு சமத்துவபுர குடியிருப்பிலும் 100 வீடுகள் கட்டப்பட்டன. அவற்றுள் 40 வீடுகள் ஆதிதிராவிடர்களுக்கும் 25 வீடுகள் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் 25 வீடுகள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் 10 வீடுகள் இதர பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆதிதிராவிடர் வீட்டின் இரு மருங்கிலும் பிற சமுதாயத்தினரின் வீடுகள் அமையுமாறு இத்திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2006-2011 தி.மு.க ஆட்சியில் 385 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன.
1997ஆம் ஆண்டு மே மாதம் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரங்களில் மரணமுற்றவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று 22-5-1998 என்று தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்தது.
20 சதவீத இட ஒதுக்கீடு கோரி 1987ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு போராடிய பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் 5,000 பேர் மீது அ.தி.மு.க அரசு தொடர்ந்த வழக்குகளை தி.மு.க அரசு திரும்பப் பெற்றது.
அந்த 1987 போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் 25 குடும்பங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூபாய் 1500 வழங்கப்பட்டது. பின்னர் 2006 ஆம் ஆண்டு அத்தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின்பு அத்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டது.
தென் மாவட்டங்களில் தீண்டாமைக்கு எதிரான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்தும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதிக் கலவரங்கள் பற்றியும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திட உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கை பெறப்பட்டு அதன் சில பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. வன்னியர் பொது சொத்து நிர்வாக வாரியம் 2-3-2009 அன்று ஆரம்பிக்கப் பட்டது.
வன்னியர் சமுதாயத் தலைவர் எஸ்.ராமசாமி படையாச்சி அவர்களுக்கு சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முயற்சியால் தி.மு.க ஆட்சியில் சென்னையில் ஆல்டா சந்திப்பில் 21-2-2002 சிலை வைக்கப்பட்டது,
1997 ஆம் ஆண்டு மே மாதம் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட சாதிக் கலவரங்கள் பற்றி முதலமைச்சர் கலைஞர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தூதுக் குழுக்களை அனுப்பி அரசு நிர்வாகத்தின் மூலம் சமாதான முயற்சிகளை மேற்கொண்டார்.
14-05-1997 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைத் கூட்டி அவர்களது ஆலோசனை நடத்தினார். அதன்பின் 15-05-1997 அன்றும் 16-05-1997 அன்றும் சாதி கலவரம் தொடர்பான சாதி தலைவர்கள் கூட்டத்தை தனித்தனியாக நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களை சமாதான முயற்சிக்கு தயார்படுத்தினார்.
கலவரம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் கலைஞர் நேரில் சென்று பார்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கினார். மீண்டும் 5-6-1997 அன்று சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும் பெற்றார். 1-7-1997 அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுத்தார். அந்த முடிவுகள் சமுதாய நல்லிணக்கத்தை உறுதி செய்து சமூக பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்தி சுமூக நிலைமையை உருவாக்கின.
2007 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக தி.மு.க அரசு நடத்தியது. பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு தி.மு.க ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. தேவர் வாழ்ந்த இல்லம் ரூபாய் 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
ரூபாய் ஒன்பது லட்சம் செலவில் நூற்றாண்டு விழா வளைவு, ரூ.9 லட்சம் செலவில் புகைப்பட கண்காட்சி, ரூபாய் 4 லட்சம் செலவில் நூலகம், ரூபாய் 5 லட்சம் செலவில் மொட்டை அடித்து முடி இறக்கும் இடம், ரூ.5 லட்ச செலவில் பால்குட மண்டபம் ரூ.5 லட்சத்தில் முளைப்பாரி மண்டபம் என அனைத்தும் திமுக ஆட்சியில் தேவர் நினைவிடத்தில் அமைத்துத் தரப்பட்டன.
தேவர் நினைவிடம் முன்பு வாழ்ந்த ஆதி திராவிட மக்களுக்கு குடியிருப்புகள் திமுக ஆட்சியில் கட்டித் தரப்பட்டன. மதுரையில் தேவர் சிலை திறப்பு விழாவை அரசு விழாவாக திமுக அரசு நடத்தியது. குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் சிலையைத் திறந்து வைத்தார். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மதுரை ஆண்டாள்புரம் பாலம் முத்துராமலிங்க தேவர்பாலம் எனப் பெயரிடப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு பிரித்து தனியாக வழங்கப்பட்டது. அதன் பின் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 26.5 சதவீதம் ஆகும்.
2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த 41 லட்சத்து 29 ஆயிரத்து 120 மாணவர்களுக்கு ரூபாய் 361 கோடியே 71 லட்சம் கல்வி நிதி வழங்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளில் பயின்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய அரசு நிதியுதவிகள் வழங்கப்பட்டன. மாநில அளவில் 10, 12 வகுப்பு தேர்வுகளில் மிக அதிக மதிப்பெண்கள் பெரும் இச்சமூகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மேல்படிப்பிற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன் சிறந்த மாணவர்களுக்கு பரிசும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த இச்சமூகங்களைச் சார்ந்த 5000 மாணவர்களுக்கு ரூபாய் பதின்மூன்று கோடி கல்வி நிதி வழங்கப்பட்டது. பள்ளிகளில் பயின்ற இச்சமூகங்களைச் சார்ந்த 1,08,285 மாணவர்களுக்கு ரூபாய் 13 கோடியே 40 இலட்சம் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது.
வல்லநாட்டு செட்டியார், பாண்டிய வெள்ளாளர், சேரகுல வெள்ளாளர், உருது பேசும் முஸ்லிம்கள் ஆகிய சாதியினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். குரும்ப கவுண்டர், அரயர், (கன்னியகுமாரி மாவட்டம்) எர்ர கொல்லர், தொரையர், லத்தின் கத்தோலிக்க வண்ணார், பானை செய்வோர் கிருஷ்தவ பரதவர் ஆகியோர் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
15 மாவட்டங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமூகங்களைச் சார்ந்த 12,179 பேர்களுக்கு ரூபாய் 12 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நிலங்கள் ஒதுக்கப்பட்டு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது.
24-4-2007 அன்று சீர்மரபினர் நல வாரியம் அமைக்கப்பட்டு, 20,387 பேர் அதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களின் நலனுக்காக ரூ.2 கோடி வழங்கப் பட்டது. தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம் 27-5-2008 அன்று அமைக்கப்பட்டது அதன் மூலம் 8,105 பேருக்கு ஒரு கோடி ரூபாய் வரையிலான நிதி வழங்கப்பட்டது.
2006-2011 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய சமுதாயத்தில் பின்தங்கிய அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் தி.மு.க அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி நன்மை செய்து அவர்களின் கல்வி பொருளாதார தொழில் வாழ்க்கையை மேம்படுத்தியது.
- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?