DMK
இந்து சமயம் மற்றும் கோவில்கள் மேம்பாட்டிற்கு கலைஞர் அரசு ஆற்றிய ஆன்மீக அறப்பணிகள்: மகுடம் சூடிய தி.மு.க-4
பா.ஜ.க வினர் அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்திற்கு அவர்கள்தான் முற்றுரிமை பெற்றிருப்பவர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள். மனுதர்மமும் வர்ணாசிரமும் புகுத்திய சாதிய பாகுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் ஆண்டாண்டு காலமாக தாழ்ந்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கும் உரிமை பறிப்புகளையும் மட்டுமல்லது பல கொடுமைகளையும் ஏற்படுத்தியன. அந்த பாதிப்புகளில் இருந்து சமுதாயத்தினை மீட்டு எடுத்து சமூக சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக அரும்பெரும் திட்டத்தைத் தீட்டி நீதிக்கட்சி தலைவர்களும் திராவிட இயக்கத் தலைவர்களும் பெரும் பாடுபட்டனர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றும், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றும், பேரறிஞர் அண்ணா அவர்களும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் செய்த பகுத்தறிவு முழுக்கங்களில் எவ்வளவு பாங்காக அந்த சொற்களை கையாண்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் எவ்வளவு யதார்த்தமான அதே சமயம் ஆழமான மக்கள் தலைவர்கள் என்பதை புலப்படுத்தும்.
ஆலய நுழைவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த மக்களை அந்த ஆலயங்களுக்குள் நுழையச்செய்ய வேண்டும் என்று மகாத்மா காந்தியடிகளும் நீதிக்கட்சித் தலைவர்களும் பெரும் பாடுபட்டனர். கோயில் சார்ந்த சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பாதுகாக்கப்படவும் அதன் பயன் சமுதாய மக்களுக்கு சேர்க்கப்படவும் நீதிக்கட்சி அரசு இந்து சமய அறநிலைதுறை எனும் புது துறையை உருவாக்கியது. நீதிக்கட்சியின் வழியில் வந்த பேரறிஞர் அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் முதலமைச்சராக இருந்து தி.மு.க ஆட்சிக் காலத்தில் கோயில்களின் முன்னேற்றத்திற்காகவும் கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், ஆலய வழிபாடுகள் தமிழில் நடப்பதற்கும் பக்தர்களாகிய இந்துக்களின் கல்வி, சமூக, பொருளாதார, அரசியல், தொழில் மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றினர்.
கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்பட நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் 1925 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை எனும் அரசு நிர்வாக அமைப்பு தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை சட்டம் 27-1-1925 அன்று நிறைவேற்றப்பட்டது.
நீதிக்கட்சி அரசும், இந்திய விடுதலைக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழக அரசும் இட ஒதுக்கீடு கொள்கை, கல்வி முன்னேற்ற கொள்கை, ஆலய பிரவேசம், மக்களின் வாழ்வாதார பொருளாதார மேம்பாடு, சாதி தடைகளை நீக்கி இதுபோன்ற ஏராளமான முன்னேற்ற படிக்கட்டுகளை அமைத்து ஏழை மக்களை மக்களுக்கு ஏற்றம் சேர்த்தனர். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த தி.மு.க அரசு சமத்துவம் சகோதரத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையில் சமூக சமத்துவத்தை ஏற்படுத்த பல சட்டங்களை இயற்றி பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி பெண்கள் இளைஞர்கள் தொழிலாளர்கள் என அனைத்து பிரிவினரின் முன்னேற்றத்தையும் உருவாக்கினர்.
குறிப்பாக பெண் கல்வி, பெண்களுக்கு சொத்துரிமை, அரசு பணிகளிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்ற சட்டம் என தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெற ஏராளமான திட்டங்களை தி.மு.க அரசு நிறைவேற்றியுள்ளது. அந்த நல்ல திட்டங்களில் சில மட்டுமே இக்கட்டுரையில் தரப்படுகின்றன. 1967 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை சட்டம் 28-3-1968 முதல் நடைமுறைக்கு வந்தது. மீண்டும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. சென்னை இந்து சமய அறநிலைத் துறை சட்டம் 16-10-1968 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இருபத்தைந்து ஆண்டுகாலமாக நடத்தப்படாமல் இருந்த திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பாக நடத்தப்பட்டது. 1967 முதல் 1976 வரையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் 5 ஆயிரம் கோயில்களுக்கு திருப்பணிகளும் குடமுழுக்கு விழாக்களும் நடத்தப்பட்டன. 41,306 அறநிலையங்களும் 2,01,343 ஏக்கர் கோயில் நிலமும் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன. பெரும்புள்ளிகள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்ட 65,000 ஏக்கர் கோயில் நிலமும் 25,000 கோயில்களும் தி.மு.க அரசின் உறுதியான முயற்சிகளால் மீட்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டன. சிதலமடைந்த ஆயிரக்கணக்கான பழமையான கோயில்கள் புணரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டன. தாழ்த்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த ஒருவர் ஆலய அறங்காவலர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அறங்காவலர் குழுவில் மகளிர் ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
ஆலயங்களுக்கு சாலைகள் மற்றும் போக்குவரத்து குடிநீர் போன்ற வசதிகள் ஊழியர் நியமனங்கள் தி.மு.க அரசால் செய்து தரப்பட்டன. கோயில் வருவாயில் எஞ்சிய நிதியிலிருந்து காதுகேளாதோர், வாய் பேசாதோர் என ஊனமுற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆதரவற்ற குழந்தைகளுக்கு கருணை இல்லங்கள் நடத்தப்பட்டன. ஆலயத்தில் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்த பக்தர்கள் சிலருக்கு மட்டும் முதல் மரியாதை அளித்து பரிவட்டம் கட்டும் முறை நீக்கப்பட்டது.
கோயில் சொத்துக்களும் சொத்து ஆவணங்களும் பூஜை பொருட்கள் முறையாக பாதுகாக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறைக்கு தனியாக ஒரு அமைச்சர் பதவி 1970ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத்துறைக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. முன்பு ஆண்டுக்கு ரூபாய் 3 கோடியாக இருந்த கோயில் வருமானம் தி.மு.க அரசின் நல்ல முயற்சிகளால் 1971 முதல் 1976 வரையிலான தி.மு.க ஆட்சியில் ஆண்டு வருமானம் ரூபாய் 12 கோடியாக உயர்ந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2.12.1970 அன்று இந்து சமய அறக்கட்டளை திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. அர்ச்சகர் சட்டம் கொண்டுவரப்பட்டது. அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கோவில் கர்ப்ப கிரகத்திற்குள் சென்று முறைப்படி கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்று அந்தச் சட்டம் உரிமம் வழங்கியது. இச்சட்டத்தை எதிர்த்து 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. 14.03.1972 அன்று நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு தடை விதித்தது.
1974 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக திருக்கோயில் எனும் மாத இதழ் தொடங்கப்பட்டது. தமிழில் அர்ச்சனை நடைபெற அரசாணை வெளியிடப்பட்டது. கோவில் கோயில் உண்டியல்கள் பராமரிப்புக்காக தனி சட்டம் இயற்றப்பட்டது. 1971 முதல் 1976 வரையிலான தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆலய திருத்தப்பணிகள் போலவே 1989 முதல் 1991 வரையில் நடந்த தி.மு.க ஆட்சியிலும் ஆலயத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோயில் குளங்கள் தூர் வரப்பட்டன.
கலைஞர் வசனம் எழுதிய ‘பராசக்தி’ திரைப்படத்தில் குறிப்பிட்டதுபோல், ஆலயங்கள் கூடாது என்பதல்ல ஆலயங்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகக்கூடாது என்பதுதான் அவருடைய கொள்கை. அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள் மக்கள் பிரதிநிதியாக முதலமைச்சராக கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்கின்ற பொழுது மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற கருத்தின் அடிப்படையில் செயல்பட்டார்.
முதலமைச்சர் முன்னின்று நடத்திய கோவில் திருவிழாக்கள்: தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து கலைஞர் அவர்கள் 1968ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த மகாமகம் திருவிழாவை முன்னின்று நடத்தினார். முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்தார். அது அவரது ஆட்சியின் மாண்பு ஆகும்.
எம்மதமும் சம்மதம் என்று மத நல்லிணக்கப் கொள்கையை மனதில் தாங்கி மனிதநேயத்துடன் அனைத்து சமய, சமுதாய மக்களின் அண்ணனாய், சகோதரனாய் இருந்து ஆட்சி செய்த தலைவர், கலைஞர் அவர்கள் எல்லா மத மக்களுக்கும் மரியாதைக்கு உரியவர் ஆவார். இந்து மக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் அவர் மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு இவை அடையாளம் அல்லவா. எனவே கலைஞர் அவர்கள் உள்நோக்கமுள்ள சுயநலவாதிகளின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட சமூக சிந்தனையாளர், சமூகநீதி பாதுகாவலர் ஆவார். கலைஞர் அவர்கள் இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் உடன்பிறப்பு ஆவார். தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து சமய சமுதாய மக்களின் சமுக சமத்துவத்திற்காவும், நல்லிணத்திற்காகவும் பாடுபட்டுவருகிறார்.
தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது தி.மு.க அரசு. அக்கோயிலுக்கு செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆலய நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் 5,824 கோயில்களுக்கு ரூபாய் 673 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று குடமுழுக்கு விழாக்களும் நடத்தப்பட்டன. 1996-2001 தி.மு.க ஆட்சியில் 8,535 புதிய சொத்து பதிவேடுகள் ஏற்படுத்தப்பட்டன. 19 ஆயிரம் ஏக்கர் நிலமும் 390 கிரவுண்ட் மனைகளும் பல கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களும் ஆக்கிரமிப்பாளர்கள் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. கோயில் நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றிற்கான வாடகை மற்றும் குத்தகை முறைப்படுத்தப்பட்டன.
ஏழை தம்பதியர்களுக்கு கோயில்களில் இலவசமாக திருமணங்கள் நடத்தப்பட்டன. அவர்களது திருமணங்களுக்கு ஆகும் அடிப்படை செலவுகளை அரசே ஏற்றுக்கொண்டது. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தை செம்மைப்படுத்தவும் மாவட்டந்தோறும் ஆன்மீகப் பணிகளை முறைப்படுத்தவும் ஓர் அலுவலகம் தேவை என்ற நிலையில் கரூர், திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 வருவாய் மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு அவை 15.04.2008 முதல் செயல்பட தொடங்கின. தஞ்சாவூரில் அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகம் 27.09.2007 அன்று தொடங்கப்பட்டது. தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் ஒன்று 1.12.2009 முதல் செயல்படத் தொடங்கியது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் தினசரி ஒரு கால பூஜை கூட செய்ய இயலாத நிலையில் உள்ள கோயில்களுக்கு ஒரு கால பூஜை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து 967 கோயில் பூஜை நடைபெற ஒவ்வொரு கோயிலுக்கும் ரூபாய் 25,000 ஆதார நிதி வழங்கப்பட்டது. பின்னர் இந்த ஒரு கால பூஜை நிதி தொகை ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது. நிதி வசதி இல்லாத சுமார் ஆயிரம் கோயில்களுக்கு அரசின் சார்பாக இலவச மின் விளக்குகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன.
60 வயதை கடந்த கோயில் பணியாளர்களுக்கு 1997 ஆம் ஆண்டு முதல் மாதாந்திர ஓய்வூதியமாக ரூபாய் 500 வழங்கப்பட்டது. இந்த ஓய்வூதியம் 1.1.2006 முதல் ரூபாய் 750 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. 1.1.2010 முதல் ஓய்வு ஊதியம் ரூபாய் 800 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 829 ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
பணிக்காலத்தில் இறக்கும் கோயில் பணியாளர்கள் குடும்பங்களுக்கு அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த குடும்ப நல நிதி ரூபாய் 75,000 என்பது 20.10.2008 முதல் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. வருவாய் குறைவாக உள்ள ஆலயங்களில் பணிபுரிந்த பணியாளர்களில் மாதச் சம்பள நிலுவைத் தொகை முறையாக வழங்கப்பட ஆவன செய்யப்பட்டது. அவர்களுக்கும் குடும்ப நல நிதி உள்ளிட்ட அனைத்து அரசு உதவிகளும் வழங்கப்பட்டன. 30 புராதன கோயில்கள் ரூபாய் மூன்று கோடி செலவில் புனரமைக்கப்பட்டன. ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கோவில்களில் ஓதுவார்கள், நாதஸ்வர இசைக் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு பூஜை முறைகள் நிறைவாக கடைபிடிக்கப்பட்டன.
கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக நிதி ஆதாரங்களைத் திரட்ட புரவலர் விருது மற்றும் தங்க நிற அட்டை வழங்கும் திட்டம் தி.மு.க அரசால் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி ரூபாய் 5 லட்சம் நன்கொடை வழங்குபவர்களுக்கு கோயில் புரவலர் என்ற சான்றிதழும் தங்க நிற அட்டையும் வழங்கப்பட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் மூலமாக பராசக்தி மகளிர் கல்லூரி - குற்றாலம், தேவி குமரி மகளிர் கல்லூரி- குழித்துறை, பூம்புகார் கல்லூரி- மேலையூர் ஆகிய மூன்று கல்லூரிகளும் 36 பள்ளிகளும் சைவ வைணவக் கோயில்களில் இசைப் பள்ளிகளும் நடத்தப்பட்டன. நிதி வசதி உள்ள கோயில்களில் உபரி நிதியிலிருந்து நிதி மாற்றத்தின் மூலம் ரூபாய் 5 கோடி அளவில் மைய நிதி உருவாக்கி அதிலிருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து ஆண்டுதோறும் ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூபாய் 15 லட்சம் வீதம் ரூபாய் 45 இலட்சம் வழங்கப்பட்டது. இதேபோல் பள்ளிகளில் மேம்பாட்டிற்கும் நிதி வழங்கப்பட்டது.
கிராம கோயில் பூசாரிகள் நலவாரியம் 23.1.2007 அன்று அமைக்கப்பட்டது. அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடு இன்றி கோயில்களில் அர்ச்சகராகலாம் என்று தி.மு.க அரசு 2.01.2007 அன்று அரசாணை பிறப்பித்தது. புதிதாக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அர்ச்சகர்களுக்கு பயிற்சியளிக்க பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை, சென்னை, திருவரங்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டன. ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 34 பேரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 55 பேரும் என மொத்தம் 207 பேர் பயிற்சி முடித்து அவர்களுக்கு இடைநிலை அர்ச்சகர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், சேலம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சீர்காழி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 ஊர்களில் உள்ள கோயில்களில் இசைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
ஆலயங்களில் அன்னைத் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டது. தமிழில் ஆகம நூல்கள் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. அதேபோல தமிழ் போற்றி புத்தகங்கள் வடமொழியிலிருந்து மந்திரங்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. பல கோயில்களுக்கு தங்க ரதங்களும் வெள்ளி ரதங்களும் புதிதாக உருவாக்கி தரப்பட்டன. பல கோயில்களுக்கு திருமண மண்டபங்கள் கட்டி தரப்பட்டன. தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழா 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் அரசு சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!