DMK
விவசாயத் துறையில் தமிழகத்தை தலைநிமிரவைத்த தி.மு.கழக அரசுகள் : மகுடம் சூடிய தி.மு.க -3
1920 முதல் 1937 வரையிலான 17 ஆண்டு கால நீதிக்கட்சி ஆட்சியைத் தொடர்ந்து 1967-1969, 1969-1971, 1971-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 வரையிலான 21 ஆண்டு கால தி.மு.க ஆட்சி என மொத்தம் 38 ஆண்டுகள் நீதிகட்சி, தி.மு.க ஆட்சி காலங்களில் தமிழகம் பல துறைகளில் வளர்ச்சி பெற்றது. குறிப்பாக விவசாயத் துறையில் மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைந்தது. விவசாயம் மட்டுமல்லாது விவசாயிகள். விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கும் தி.மு.க அரசு பெரும் தொண்டாற்றியது. தமிழகத்தின் மொத்த வேலைவாய்ப்புகளில் 45 சதவீதம் விவசாயத்தை சார்ந்துள்ளது.
முதலமைச்சர் அண்ணாவின் விவசாய வளர்ச்சி திட்டங்கள் :
1967 முதல் 1969 வரை ஆட்சியில் இருந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். புதிய விதைகளை விவசாயத்திற்கு அறிமுகப்படுத்தினார். அவரது ஆட்சியில் உணவுப் பஞ்சம் நீங்கி உணவு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றது. 1969-70 தி.மு.க ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி 63 லட்சம் டன்னாக உயர்ந்தது.
1968-1969 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 20.68 லட்சம் ஏக்கராக இருந்த விவசாய நிலப் பகுதி 1973-1974 ஆம் ஆண்டுகளில் 27.14 லட்சம் ஏக்கராக உயர்ந்தது. தமிழ்நாடு விவசாய பொறியியல் சேவை கூட்டுறவு ஐக்கிய நிறுவனம் 1968 பிப்ரவரி மாதம் தி.மு.க அரசால் தொடங்கப்பட்டது.
முதலமைச்சர் அண்ணா அவர்கள் விவசாயத்தை மேம்படுத்த பல பசுமை திட்டங்களை செயல்படுத்தினார். ரூ.150 கோடி செலவில் தமிழகத்தில் மானாவரி பண்ணை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்காக புதிய நில சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்டது. முன்பு தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த ஒரு போக சாகுபடி முறை மாற்றப்பட்டு தி.மு.க ஆட்சியில் இரு போக சாகுபடி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1967-1968 ஆண்டு காலத்தில் 6 லட்சம் ஏக்கர் நிலம் இருபோக சாகுபடி முறைக்கு மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு விளைச்சலும் வருமானமும் அதிகரிக்கப்பட்டது.
அண்ணா பண்ணை: குளத்தூர் தாலுகாவிலுள்ள குடுமியான்மலை வனப்பகுதியில் 320 ஏக்கர் நிலப்பகுதி பயன்படும் வகையில் 20 ஏக்கர் நிலத்தில் 6.9.1969 அண்ணா பண்ணை ஆரம்பிக்கப்பட்டது.
விதைகள் : 1967-1969 அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் புதிய விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1969-1971 தி.மு.க ஆட்சிக் காலத்தில் விதைகளின் தரத்தை பரிசோதனை செய்திட கோவையில் விதைகள் ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டது. உயர் ரக விதைகளை விவசாயிகளுக்கு வழங்கிட தி.மு.க அரசால் பல விதைப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. 1975-76 தி.மு.க ஆட்சி காலத்தில் ஒரு ஹெக்டேருக்கு, 2029 கிலோ என்ற அளவுக்கு நெல் உற்பத்தித் திறன் உயர்ந்தது.
தி.மு.க ஆட்சியில் 1970 ஆண்டு மாநில விவசாய விநியோக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 1-6-1971 அன்று கோயம்புத்தூரில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 7-9-1989 அன்று திருச்சியில் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
தி.மு.க ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையமும், சிவகங்கையில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையமும், அருப்புக்கோட்டையில் மண் ஆராய்ச்சி நிலையமும் கோவில்பட்டியில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையமும் ஆரம்பிக்கப்பட்டன. கோயம்புத்தூர் மற்றும் திருச்சி லால்குடி விவசாய பயிற்சி மையங்கள் நவீனப்படுத்தப்பட்டன, மேலும் 7 இடங்களில் விவசாய பயிற்சி துணை மையங்கள் அமைக்கப்பட்டன.
2006-2011 ல் தி.மு.க ஆட்சியில் 1,21,230 மெட்ரிக் டன் சான்று விதைகள் உற்பத்தி செய்யப்பட்டன. விதை மற்றும் உரம் விநியோகத் திட்டம் 2006 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 230 விதைப் பண்ணைகள் திறக்கப்பட்டன. இதனால் ஆண்டு தோறும் 30.000 விவசாயிகள் பயன் பெற்றனர். தரமான விதை உற்பத்தி மற்றும் வினியோகத்திற்கு ரூ.33.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 6,006 மெட்ரிக் டன் அளவு நெல் விதைகளும் 9,020 மெட்ரிக் டன் எண்ணெய் வித்து விதைகளும் 103 மெட்ரிக் டன் பயிறு விதைகளும் 2,23,000 விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
உரம் : விவசாயத்தில் இரசாயண மற்றும் இயற்கை உரங்களின் பங்கு மிக அதிகம். யூரியா போன்ற உரங்களில் மீதான வரிகள் குறைக்கப்பட்டன. 1970 ஆண்டு விமானம் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டது. 2006-20011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 1,04,400 மெட்ரிக் டன் உரம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்து. 8 லட்சம் விவசாயிகளுக்கு உர அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பல கோடி ரூபாய் சலுகைகள் வழங்கப்பட்டன. நீரில் கரையும் உரங்கள் உட்பட இடுபொருட்களுக்கு எக்டேருக்கு ரூபாய் 65,000 மான்யம் தரப்பட்டது.
உணவு உற்பத்தி : 1969-1971 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2,216 சிறிய பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சுமார் 10,000 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி அதிகரித்தது.
வீட்டுவசதித் திட்டம் : கலைஞரின் தி.மு.க அரசு விவசாயிகளின் நலன்களை மேம்படுத்த 1971 ஆம் தமிழ்நாடு குடியிருப்பு உரிமையாளர் சட்டம் நிறைவேட்டப்பட்டது. அதன் மூலம் அரசு நிலத்தில் குடியிருந்த 1,75,0000 விவசாய தொழிலாளர்களுக்கு அவர்கள் குடியிருந்த அரசு நிலம் அவர்களுக்கே சொந்தமாக ஆக்கித்தரப்பட்டது.
பாசன வசதி : பரப்பலாறு திட்டம், இராமாநதி நீர் தேக்கத் திட்டம், கருப்ப நதி திட்டம், பொன்னியாறு திட்டம், பிளவக்கல் திட்டம், பாலாறு திட்டம், தண்டரை திட்டம், அணைக்கட்டு திட்டம், சித்தாறு கால்வாய் திட்டம், ராதாபுரம் கால்வாய் திட்டம், போன்ற பல நீர்பாசனத் திட்டங்கள் தி.மு.க ஆட்சி காலத்தில் நிறைவேற்றபட்டன. மேலும் 20 நீர்த்தேக்கத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பல அணைகள் மேம்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.
தி.மு.க ஆட்சிக் காலத்தில் குழாய் பாசனம், சொட்டு நீர்ப்பாசனம், கிணற்று பாசனம் ஆகியவை அதிகரித்தன. 1971-1972 ஆம் ஆண்டு 10,000 சிறு பாசன திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டன. 1989-91 தி.மு.க ஆட்சியில் நீர்ப்பாசனம் நன்கு அமைந்திட நீர்வள மேம்பாட்டு நல ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 90 ஆற்றுப் படுக்கைகளில் 6.50 லட்சம் எக்டேர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் தமிழ்நாடு நீர்வளத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2006-2011 தி.மு.க ஆட்சியில் ரூ.690 கோடி செலவில் 60 துணை ஆற்றுப் படுகைகளில் நீர்பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டன.
விவசாய கடன் தள்ளுபடி : 1975 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உழவர்களுக்கு கடன் நிவாரணம் வழங்கப்பட்டது. 1974-1975 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 230 கோடி அளவில் 872 விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக 1989-1991 தி.மு.க ஆட்சியில் ரூ.381 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 1999-2000 நிதி ஆண்டில் 2,48,817 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இலவச மின்சாரம் : 1989-ல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. 1990 ஆண்டு 41,500 விவசாய பம்புசெட்களுக்கு புதிய மின்னிணைப்பு வழங்கப்பட்டது. 17-11-1990 முதல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இதன்மூலம் 2,54,000 விவசாயிகள் பயன் அடைந்தார்கள்.
2006-2011 தரிசு நில அபிவிருத்தி ஆணையம் அமைக்கப்பட்டு 2,10,747 ஏக்கர் தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு 1,75,798 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதற்கு முந்தைய 1996-2001 தி.மு.க ஆட்சியில் 10 மாவட்டங்களில் 20,000 எக்டேர் நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
1996-1997ல் பெருமழை, பெரும் வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பல இலட்ச விவசாயிகளுக்கு கோடிகணக்கான ரூபாய் வெள்ள சேதார நிதியாக வழங்கப்பட்டது. 1996-ல் அமைந்த தி.மு.க ஆட்சியில் தென்னை விவசாயிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்யூதியம் ரூ.100 என்பது ரூ.150 ஆகவும் 2000-2001 ஆம் நிதி ஆண்டில் ரூ.200 ஆகவும் கழக அரசால் உயர்த்தி வழங்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றம் : காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் கலைஞர் வலியுறுத்தினார். வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதி தீர்ப்பும் வழங்கப்பட்டது. முல்லை பெரியார் அணையின் உயரத்தை 145 அடியாக உயர்த்துவதில் தி.மு.க வெற்றி கண்டது.
கூட்டுறவு வங்கிகளில் 31.03.2006 ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்த விவசாய கடன் மற்றும் வட்டித் தொகை ரூ.6,866 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 22,59,495 விவசாயிகள் பயன் அடைந்தனர். கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானம் வைத்திருந்த 3,80,000 விவசாயிகள் பயன் பெற்றனர்.
2006-2011ல் தி.மு.க ஆட்சியில் 8,62,000 விவசாய தொழிலாளர்களுக்கு ஊக்க உதவித் தொகையாக ரூ.655 கோடி வழங்கப்பட்டது. 2006-2011ல் தி.மு.க ஆட்சியில் 60 லட்ச விவசாயிகளுக்கு ரூ.850 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டது.
2006-2011 தி.மு.க ஆட்சியில் 8,30,495 ஏழை விவசாய குடும்பங்களுக்கு இலவச விவசாய மனைப்பட்டா வழங்கப்பட்டன. 1,60,671 ஏக்கர் நிலம் இலவச பட்டா மூலம் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
2006-2007ல் 6,31,283 விவசாயிகளுக்கு ரூபாய் 1,250.62, கோடியும், 2007-2008ல் 6,48,397 விவசாயிகளுக்கு ரூ.1,393.97, கோடியும், 2008-2009ல் 6,62,005 விவசாயிகளுக்கு ரூ.1,517.43 கோடியும், 2009-2010ல் ரூ.2,000 கோடியும் ஆக மொத்தம் 2006-2011 தி.மு.க ஆட்சியில் மொத்தம் 26,41,685, விவசாயிகளுக்கு ரூபாய் 6,162.02 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. 2009-2010 தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் உணவு உற்பத்தி 95,6000 டன் ஆக உயர்ந்தது.
இலவச நிலம் : தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று, திருவள்ளுரில் 2006ஆம் ஆண்டு நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2,10,427 ஏக்கர் நிலம் 1,75,355 நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. 2006-2010ல் சுமார் 9 இலட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.975 கோடி இழப்பீடு வழங்கப்பட்டடது.
சுய உதவிக் குழுக்கள் : 2006-2011ல் 27,294 விவசாய சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 27 கோடியே 30 லட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டது. 32,940 குழுக்களுக்கு ரூ.402 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. 225 பண்ணை மகளீர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. 3,500 வேளாண் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் 27,300 விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களுக்கும் ரூ.10,000 விவசாய கருவிகள் வாங்க நிதி உதவி வழங்கப்பட்டது. மொத்தம் 33,000 விவசாய சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.403 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது.
2008-ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் தலைமையில் விவசாய மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. வேளாண்மை துறை அமைச்சர் தலைமையில் துணை குழுக்களும் அமைக்கப்பட்டன. அதன்மூலம் வேளாண்மை உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயித்து தரப்பட்டது. 2006-2011ல் தேசிய தோட்டக்கலை திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.
கரும்பு : இந்தியாவின் மொத்த கரும்பு உற்பத்தில் 9 சதவிகிதம் தமிழ்நாட்டில் விளைகிறது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2000-ம் ஆண்டு கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகித்தது. கரும்பு விளைச்சலில் உலகளவில் தமிழ்நாடு முதலிடம் வகித்தது. 1990 தென்னிந்திய சர்க்கரை ஆராய்ச்சி நிலையம் வேலூரில் ஆரம்பிக்கப்பட்டது. 2009-2010ல் தி.மு.க ஆட்சியில் கரும்புக்கான கட்டணம் ரூ.1,650 ஆகவும் பின்னர் தி.மு.க ஆட்சியில் 2010-2011ல் ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. கரும்பு விவசாயிகளுக்காக நிலுவை தொகை கிடைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடலூரில் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது.
நெல் : 1967-1969 அண்ணாவின் தலைமையிலான தி.மு.க அரசு நெல் உற்பத்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது. 1968-69ல் 17 இலட்சம் ஏக்கர் நிலத்திலும் 1970-71ல் 49 இலட்சம் ஏக்கர் நிலத்திலும் 1971-72ல் 64 இலட்சம் ஏக்கர் நிலத்திலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
புது ரக நெல் கண்டுபிடிப்பு : நெல் உற்பத்தியைப் பெருக்கி அரிசி பஞ்சத்தை போக்கிட தி.மு.க ஆட்சியில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய நெல் கண்டுபிக்கப்பட்டு அறிமுகப் படுத்தப்பட்டன. IR 8, IR5, IR20, IR22, IR24, IR27, போன்ற நெல் ரகங்கள் மேலும் மேம்படுத்தப்பட்டன. இதற்றில் ஐஆர்8 மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. ADT31 ATD29 ADT27 ADT30 ஆகிய நெல் ரகங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நெல் வகைகள் கருணா, காஞ்சி, காவிரி எனும் பெயரிட்டு அழைக்கப்பட்டன. இராஜராஜன் 1000 எனும் நெல் வகை 2001 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1998-1999ல் அரிசி உற்பத்தியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகித்தது. நெல் உற்பத்தில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் வகித்தது. 2006-2007 அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.
விளைச்சல் மேம்பாடு : எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் 1998-1999 தமிழ்நாடு அகில இந்தியா அளவில் முதல் இடத்தில் இருந்தது. கே4 எனும் புதிய வகை சோளம் அறிமுகப் படுத்தப்பட்டது. 2000ம் ஆண்டில் கோதுமை உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடம்பிடித்தது. தேனிமாவட்டத்தில் மாம்பழம் ஏற்றுமதி மையமும் கிருஷ்ணகிரியில் மாம்பழம் வணிக வளாகமும் மாம்பழம் ஏற்றுமதி வளாகமும் ஏற்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் 1966-1967ல் 883000 டன்னாக இருந்த வேர்கடலை விளைச்சல் 1971-72ம் தி.மு.க ஆட்சியில் 1148000 டன்னாக உயர்ந்தது. வேர்கடலை ஏற்றுமதியும் அதிகரித்தது.
தென்னை : 2008 ஆண்டு தென்னை அபிவிருத்தி திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 27.8.2010 அன்று தென்னை விவசாயிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. கன்னியாகுமரி, கோயம்பத்தூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தென்னை பயிரிடுவது அதிகரிக்கப்பட்டது. பட்டுக்கோட்டையில் தேங்காய் வணிக வளாகம் ஏற்படுத்தப்பட்டது.
பருத்தி : இந்தியாவில் விளையும் பருத்தியில் 7 சதவிதம் தமிழ்நாட்டில் விளைகிறது. 2006 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பருத்தி மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டது.
மானாவரி பயிர் : தமிழ்நாடு முழுவதும் ரூபாய் 150 கோடி செலவில் மானாவரி வேளாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிவகங்கையில் மானாவரி வோளாண்மை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மானாவரி பண்ணை திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி அதற்காக புதிய சட்டம் கொண்டுவந்தது.
மலர் : தி.மு.க ஆட்சியில் கன்னியாகுமரியில் மலர் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு நீலகிரியிலும், ஓசுரிலும் மலர் ஏல மையங்களும், மலர் ஏற்றுமதி மையங்களும் ஏற்படுத்தப்பட்டன.
நில உச்சவரம்பு சட்டம் : ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30 ஸ்டாண்ட்ரட் ஏக்கர் நில உச்ச வரம்பு சட்டத்தில் 1970ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தம் செய்து. தி.மு.க அரசு புதிய 15 ஸ்டான்டர்டு ஏக்கர் நில உச்சவரம்பு சட்டத்தை நடைமுறைப் படுத்தியது. இதன்மூலம் 1,01,120 ஏக்கர் உபரிநிலமாக அறிவிக்கப்பட்டது. 78,956 ஏக்கர் நிலத்தை அரசு கைப்பற்றி அதில் 58,536 ஏக்கர் நிலம் நிலமற்ற 35482 ஏழை விவசாயத் தொழிலாளருக்கு வழங்கப்பட்டது.
ஆதிதிராவிட விவசாயிகள் : 1967-76 வரையிலான தி.மு.க ஆட்சி உரிய சட்டங்கள் இயற்றி வீடுகள் இல்லாத ஆதிதிராவிட விவசாய தொழிலாளர்களுக்கு அரசு மூலம் சொந்த வீடுகள் கட்டித் தரப்பட்டன. 1996-2001 தி.மு.க ஆட்சியில் 15,000 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மான்யத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்பட்டது. ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனம் மூலம் 31-03-2006 பெற்ற கடன்தொகை ரூ.3,47,00,000 க்கு வட்டி ரூ.59 இலட்சம் அபராத வட்டி ரூ.11,90,000 ஆக மொத்தம் ரூ.525 இலட்சம் தள்ளபடி செய்யபட்டது. ஆதிதிராவிட விவசாயிகளுக்கு விவசாயக் கருவிகள் வாங்கிட மானிய கடன் வழங்கப்பட்டது.
உழுவர் சந்தை : இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்கும், விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் உரிய நல்ல சாதனமாக தி.மு.க அரசு விவசாய சந்தை முறையை அறிமுகப்படுத்தியது. 14.11.1999 அன்று மதுரையில் முதல் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. 2011 ஆண்டு நிலவரப்படி தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டில் 162 உழவர் சந்தைகள் செயல்பட்டன.
இதனால் இலட்சகணக்கான விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக சந்தையில் விற்றும் இலட்சக் கணக்கான நுகர்வோர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்றும் பயனடைந்தனர். வியாபரிகளிடம் விற்பதைவிட நுகர்வோர்களிடம் தங்கள் விளைப் பொருட்களை விற்பதால் தங்கள் பொருள்களுக்கு விவசாயிகளுக்கு 20 சதவிதம் முதல் 25 சதவிதம் வரை கூடுதல் லாபம் கிடைத்தது.
விவசாயத் தொழிலாளர்கள் : தி.மு.க ஆட்சியில் 5.8.1969 அன்று தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. விவசாயத் தொழிலாளர் நலனை மேம்படுத்த தமிழ்நாடு குடியிருப்பு உரிமையாளர் சட்டத்தை 19.06.1971 அன்று இயற்றியது. அதன்படி விவசாயத் தொழிலாளர் குடியிருக்கும் அரசு நிலம் அவர்களுக்கே சொந்தமாக்கப்பட்டது. இதன்மூலம் 1,75,000 பேர் பயனடைந்தனர்.
விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர் சமுக பாதுகாப்பு உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டது. 17.09.2006 அன்று ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2006-2011ல் இத்திட்டத்தின் 1,79,000 பேர் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு 2,10,500 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் மூலம் பல இலட்சம் விவசாயிகள் பயனடைந்தார்கள்.
தி.மு.க ஆட்சியில் விவசாயம் ஏற்றம் பெற்றது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட்டது. விவசாய பொருட்களுக்கு சந்தை மதிப்பீடு உயர்ந்தது. விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரித்தன. தி.மு.க ஆட்சியில் விவசாயத் துறையில் இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்தது.
- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!