DMK

“வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்” - உதயநிதி ஸ்டாலின் ‘பொளேர்’ பதில்!

தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருவல்லிக்கேணி பகுதி பெசண்ட் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன்ராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

முன்னதாக, தேர்தல் பணிமனையை திறந்து வைத்து, அங்கிருந்து ஆட்டோவில் ஏறி தொண்டர்கள் சூழ பேரணியாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். பட்டாசு வெடித்தும், மேளதாளம் முழங்கியும் கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தி.மு.க ஆரம்பத்தில் இருந்தே குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் முதலில் கைதானதும் நான்தான்.

ஆட்சிக்கு வந்ததும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். சிறுபான்மையின மக்களுக்கு அரண் யார் என்பது பொதுமக்களுக்குத் தெரியும்.

வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எம்.எல்.ஏ பொறுப்பு என்பது நியமனப்பதவி கிடையாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி. தி.மு.கவில் குடும்ப அரசியல் உள்ளதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். வாரிசு அரசியல் என நினைத்தால் என்னை மக்கள் நிராகரிக்கட்டும்” என்றார்.

தொடர்ந்து, தி.மு.க கட்டப் பஞ்சாயத்து செய்யும், நில அபகரிப்பு செய்யும் என அ.தி.மு.க பிரச்சாரம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும் என தி.மு.க தலைவர் உறுதியளித்துள்ளார். வன்முறையற்ற வகையில், மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தி.மு.க கொடுக்கும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “அ.தி.மு.க முற்றிலும் துடைத்தெறியப்படும்; தி.மு.க மாபெரும் வெற்றியை பெறும்” - ‘இந்து’ என்.ராம் ட்வீட்!