DMK
இந்த தேர்தலிலும் களம் காணும் அண்ணா... கருணாநிதி... அன்பழகன் : திராவிட இயக்கத்தின் சிறப்பு இதுதான்!
சென்னை ராபின்சன் பூங்காவில் 1949 செப்டம்பர் 18ந் தேதி திராவிட இயக்க அரசியலின் தோற்றுவாய், தி.மு.கழகம் எனும் மக்கள் இயக்கம் உருவானது. இதனை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு, அவரது அடியொட்டி கழகத்தை தலைமைதாங்கி வழிநடத்திச் சென்றவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
பேரறிஞர் அண்ணா விட்டுச்சென்ற பணிகளை தமிழக மக்களுக்காக, தமிழர்களை கரைசேர்க்கும் கட்டுமரமாக வாழ்ந்த கலைஞர், திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் வெற்றி கொள்வதற்கு அமைத்த வியூகங்கள் மகத்தானவை. கலைஞரின் சொல்வளமிக்க பிரசாரங்கள், வேட்பாளர்கள் தேர்வு என தி.மு.க தேர்தலில் புதிய வடிவத்தை பெற்றது. இந்த பேரியக்கத்தின் கிரியா ஊக்கியாக செயல்பட்டவர் பேராசிரியர் க. அன்பழகன். அவரது வழிகாட்டலில் தி.மு.கழகம் எத்தனையோ தேர்தல் களங்களைச் சந்தித்துள்ளது.
தி.மு.க., தொடங்கப்பட்டதில் இருந்து தேர்தலில் களம் கண்டு, இயக்கத்தின் சங்கநாதமாக சட்டப்பேரவையில் முழங்கியவர்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் ஆவார்கள்.
பேரறிஞர் அண்ணா 1967ல் முதல்வராகி 1969ல் காலமானார். அதன்பின்னர் தி.மு.க.,வை தலைமை தாங்கி வழிநடத்திய முத்தமிழறிஞர் கலைஞர், 1957 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கழகத்தின் வேட்பாளராக குளித்தலை தொகுதியில் களம் இறங்கினார். அன்றுமுதல் 2016 ஆம் ஆண்டுவரை தி.மு.க வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் மு.கருணாநிதி என்ற பெயர் இடம்பெற்றுக் கொண்டே இருந்தது.
இதைப்போன்று, 2011 ஆம் ஆண்டுவரை தி.மு.க வேட்பாளர் பட்டியலில் க.அன்பழகன் என்ற பெயர் நிலைகொண்டிருந்தது. தான் இறக்கும்வரை பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகனையும் தி.மு.கழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது.
ஆம். இப்போதும் இந்த மூன்று பேரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று வருகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தல் 2021ல் போட்டியிடக்கூடிய தி.மு.க வேட்பாளர் பட்டியலில் 2 கருணாநிதிகளும், 2 அன்பழகன்களும், ஒரு அண்ணாதுரையும் இடம்பெற்றுள்ளனர். திராவிட இயக்கத் தூண்கள் ஒருபோதும் சாய்வதில்லை. அவர்கள் வரலாற்றில் நிலைத்தவர்கள். அதனால்தான் அவர்கள் பெயரைக் கொண்டவர்கள் தி.மு.க.,வில் நிலைகொண்டிருக்கிறார்கள். தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொட்டுத்தொடரும் பாரம்பரியமாக தி.மு.க வேட்பாளர் பட்டியலை இவர்கள் அலங்கரிக்கிறார்கள். பட்டுக்கோட்டை தொகுதியில் கா.அண்ணாதுரை, தியாகராய நகரில் ஜெ.கருணாநிதி, பல்லாவரத்தில் இ.கருணாநிதி, கும்பகோணத்தில் க.அன்பழகன், ஆரணி தொகுதியில் எஸ்.எஸ்.அன்பழகன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
திராவிட இயக்கத்தின் அடையாளமாக விளங்கும் தலைவர்களின் பெயர்களில் ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் இடம்பெறுகிறார்கள். இதுதான் தி.மு.க.,வின் சிறப்பு. இந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூட இருக்கிறார்கள் அண்ணாவும், கருணாநிதியும், அன்பழகனும்.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் அமர்ந்து இவர்கள் பேரவையை அலங்கரிப்பார்கள்.
இதுமட்டுமல்லாமல் தி.மு.க.,வின் வெற்றிச்சின்னம் உதயசூரியன். இந்தப் பெயர் மட்டும் என்ன விதிவிலக்கா?. சங்கராபுரத்தில் தா.உதயசூரியன் கழகம் சார்பில் களம் காண்கிறார்.
இந்த வரலாற்றுச் சிறப்பில் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலினும் இணைந்திருக்கிறார். கொளத்தூர் தொகுதியில் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். துறையூர் (தனி) தொகுதியில் ஸ்டாலின் குமார் என்னும் கழகத் தொண்டர் களம் காண்கிறார் என்பது கூடுதல் செய்தி.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !