DMK
"பெரியார்- அண்ணா- கலைஞரின் நீட்சி; பெருமைமிகு தமிழகத்தின் பேசும் மனசாட்சி" : மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
பெரியார் - அண்ணா -கலைஞரின் நீட்சி; பெருமைமிகு தமிழகத்தின் பேசும் மனசாட்சி; திராவிடச் செல்வன்; செந்தமிழ் மரபுரிமை தீரன்! திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் பிறந்த நாள் இன்று!
1966 -ஆம் ஆண்டு, அதாவது தனது 13 -ஆவது வயதில், கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.கழகம் எனும் ஓர் அமைப்பை ஆரம்பித்து இயங்கிடத் தொடங்கியவர், இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார். இன்று மு.க.ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். அவர் இந்த உயரத்தை எளிதில் அடைந்திடவில்லை. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, பல்வேறு படிநிலைகளில், இந்த இயக்கத்திற்காக ஓயாமல் உழைத்து, அங்குலம் அங்குலமாக, அடிமேல் அடியெடுத்து வைத்து, அவசரப்படாமல் ஆர்ப்பாட்டம் - ஆடம்பரம் கொள்ளாமல், அமைதியாக முன்னேறி இன்றைய இந்த நிலையை எட்டிப் பிடித்தவர்! உழைத்தல் என்பது வேறு; இவர் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி, உழைப்பின் உருவகமாகத் திகழ்பவர்!
திரு.மு.க.ஸ்டாலின் கொள்கையில் தெளிவு, சொல்லினில் கனிவு, கடமையில் உறுதி, கண்ணியம் குன்றாமை, காலந்தவறாமை ஆகியவற்றால் சமுதாயத்தின் மதிப்பினைத் தேடிக் கொண்டவர்” “தந்தையின் புகழொளியால் பெருமை கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் பிறப்புரிமையாலே பெற்றிருப்பினும், தகுதியினால் பெருமை கொண்டு, தியாகத்தால் உரிமை பெற்று, தொண்டினால் பதவி பெற்று, சாதனையால் புகழ் பெற்றவர் ஸ்டாலின். எண்ணித் துணிவது, துணிந்ததை உரைப்பது, உரைப்பதைச் செய்வது, விளைவினை ஏற்பது என்னும் பழக்கத்தால் பொதுத்தொண்டில் வெற்றிநடை போடுபவர்.” - என்று இனமானப் பேராசிரியர் அவர்கள், ஸ்டாலின் அவர்களின் அனைத்துப் பரிமாணங்களையும் அளந்து அறுதியிட்டு, அவருக்கே கைவரப் பெற்ற ஆழ்ந்த தமிழ்நடையில் உறுதியாக விளக்கி உரைத்திருப்பது எண்ணி எண்ணி இன்பம் கொள்ளத்தக்கது; ‘இவரன்றோ நம் தலைவர்’ என நம்மை இறும்பூது எய்திட வைப்பது.“
“உழைப்பின் சக்தியே உலகில் உன்னதமானது; அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது”- என்றார் ஆபிரகாம் லிங்கன். நமது தலைவர் ஸ்டாலின், உழைப்பு எனும் சக்தியின் உன்னதத்தை உணர்ந்து, தனது உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து, தேர்தல் களத்திலே தீவிரமாகப் பாடுபட்டு வருகிறார். கழகத்தின் வெற்றி கண்ணுக்கெதிரில்; கைநீட்டிப் பிடிக்கும் தூரத்தில்!“ பெரியார் மறைந்த பின்னும்இயக்கம், பெரிதாய் வளர்ந்தது அண்ணாவாலே! அண்ணா இல்லாக் கழகம் தன்னை, எந்நாளும் காத்தார் தலைவர் கலைஞர்; கலைஞர் மறைந்த பின்னரோ, நீதான் தலைவராய் நின்று தம்பிகள் காத்தாய் ; உன்னை நம்பியே கழகம், இப்போது உன்னை நம்பியே நாடும்!” - என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் “உழைப்பால் விளைந்தன உனது வெற்றிகள்!” என்ற தலைப்பில் தலைவர் ஸ்டாலினைப் பற்றி எழுதிய கவிதையில், சுந்தரத்தமிழில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தலைவர் ஸ்டாலின் உழைக்கிறார், உழைக்கிறார் உழைத்துக்கொண்டே இருக்கிறார்; ஓடுகிறார் ஓடுகிறார் பந்தயக் குதிரையை விடவேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டேஇருக்கிறார்! எதற்காக? தறிகெட்டுப்போன தன்னலக்காரர்களிடமிருந்து தமிழகத்தை மீட்பதற்காக; தமிழ் மக்களுக்கு நல்வாழ்வு தருவதற்காக; இனம்- மொழி காத்து, தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்வதற்காக! தலைவர் ஸ்டாலின் அளவுக்கு நம்மால் இயலாதாயினும், இயன்ற அளவு நாமும் இணைந்து உழைத்திடுவோம்; அவரது இந்தப் பிறந்தநாள் ஆண்டினை, கழக ஆட்சி மீண்டும் மலரும் கவின்மிகு ஆண்டாக்கிடச் சபதம் ஏற்போம்!
நன்றி: முரசொலி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!