DMK

“விழிப்புணர்வு வாகனத்துக்கு அனுமதி மறுப்பு : அச்சத்தில் அ.தி.மு.க அரசு” - கார்த்திகேய சிவசேனாபதி சாடல்!

தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் சார்பாக எல்.இ.டி வாகனம் மூலம் மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், பெருந்துறை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த எல்.இ.டி வாகனம் சென்று வர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அனுமதி மறுப்பிற்குக் காரணமாக கொரோனா பரவல், சட்டம் ஒழுங்கு பிரச்னை, போக்குவரத்து சிக்கல் மற்றும் இன்னும் சில காரணங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் பல வாகனங்களில் பிரச்சாரம் செய்யும்போது, தி.மு.க-விற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமிக்கு சில கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

1. நீங்கள் உட்பட அ.தி.மு.க அரசு பல இடங்களில் கூட்டத்தைக் கூட்டி பிரச்சாரம் மேற்கொள்ளும்போது கொரோனா பரவல் தெரியவில்லையா?.

2. அடிமை அ.தி.மு.க அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறதே அதற்கென்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

3. வாகனம் தொடர்பாக அனைத்து ஆவணங்கள் கொடுத்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஏன்?

4. எங்களது ஒரு வாகனம் செல்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்வது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?

5. எங்கள் தலைவரின் குரல் பாமர மக்களைச் சென்று சேரக்கூடாது என்று திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதா?

எங்கள் தலைவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் கூடுவதைப் பார்த்து அ.தி.மு.க மிகுந்த அச்சமடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. தி.மு.க உங்களின் அடக்குமுறைக்கு அஞ்சும் கட்சியல்ல. இன்னும் மூன்றே மாதங்களில் காலம் மாறும்! காட்சி மாறும்! கழக ஆட்சி அரியணை ஏறும்!” எனக் தெரிவித்துள்ளார்.

Also Read: “எத்தனை உயிர்கள் பலியானாலும் அலட்சியமாகவே இருப்பதா?” - அ.தி.மு.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!