DMK
'சிரித்துப் பேசினார்; சிந்திக்கச் செய்தார்' - சட்டமன்றத்தில் புது மரபை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா!
காஞ்சிபுரத்தில் உள்ள ஒலி முகமது பேட்டையில் நெசவுக்குடும்பத்தில் பிறந்தவர் பேரறிஞர் அண்ணா. குடும்ப ஏழ்மைக்காரணமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சிறிது காலம் பணியாற்றி பின்னர், பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ., என இரண்டு பட்டங்களை பெற்று ஆங்கிலத்தில் புலமையடைந்தார்.
கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியராக பணியை தொடங்கிய பேரறிஞர் அண்ணாவை, தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள் கவர்ந்தன. தந்தை பெரியாருடன் இணைந்தார்.
ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழுக்காக சிறை சென்றார் பேரறிஞர் அண்ணா. பின்னாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து, 1962 ஆம் ஆண்டு, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா, நாடாளுமன்றத்தில் தென்னகத்தின் உரிமையை நிலைநாட்ட எழுச்சியுரைகளை ஆற்றினார்.
அவரின் பேச்சைக் கேட்டு வடநாட்டு உறுப்பினர்கள் வாயடைத்து போயினர். பேரறிஞரின் வாதத்திறனை கண்டு பண்டித நேரு உட்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் வியந்தனர்.
தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணா ஒரு மனதாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தமிழ் பரப்பும் பணிகளை தொடங்கிய அண்ணா எண்ணற்ற சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தார்.
சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் வைக்கும் வாதங்களை கேட்டறிந்துவிட்டு அவர்களுக்கு தக்க பதில்களை நகைக்சுவையாக அளித்து, அவையில் உள்ள அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார்.
ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.
குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார்.
இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா! அவையில் சிரிப்பலை அடங்க நேரம் பிடித்தது.
உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு நயத்தக்க வகையில் நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.
மற்றொரு முறை உறுப்பினர் விநாயகம் எழுந்து நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை மிருகக்காட்சி சாலையில் சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே! என்று புகார் கூறினார்.
உடனே அண்ணா அவர்கள் சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறினார்.
உறுப்பினர் விநாயகம் உட்பட அனைவரும் சிரித்தனர்.
பேரறிஞர் அண்ணா, தமிழக மக்களின் நல்லாதரவைப் பெற்று, முதல்வராக வீற்றிருந்த சமயம், விலைவாசி குறைந்துள்ளது என்று பேரறிஞர் அண்ணாவும், உறுப்பினர்களும் கூறியதைக் கேட்ட எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர், கேலியாக - புளி விலை குறைந்துள்ளதே அது யார் சாதனை? என்று கேட்கிறார்.
பேரறிஞர் அண்ணா அமைதியாக எழுந்து, ''அது புளியமரத்தின் சாதனை'' என்றார்
அவை சிரிப்பில் முழ்கியது! கேட்பவருக்கு எப்படி இருந்திருக்கும்?
1957-க்கு முன்பு காமராசரும், காங்கிரசாரும் பேரறிஞர் அண்ணாவையும், கழகத்தினரையும், வெட்டவெளியில் பேசி என்ன பயன் - முடிந்தால் சட்டசபைக்கு வாருங்கள் என்றனர். 1957க்கு பின்னர் தி.மு.கழகம் சார்பில் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் நுழைந்தனர்.1962-ல் தி.மு.க சார்பில் 50 உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் சென்றனர். ஆனால், அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களும், அமைச்சர்களும் தி.மு.கழகம் சரியான எதிர்கட்சியில்லை, நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று குறை கூறி கழகத்தை கேலியும், கிண்டலும் செய்தனர்.
அப்போது பேரறிஞர் அண்ணா, ''நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்'' என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.
பேரறிஞர் அண்ணாவின் வாதத்திறமைக்கும், சமயோசிதமான கூர்த்த மதியுடன் பதில் கூறும் தன்மைக்கும் எடுத்துக்காட்டாக இதைப்போலவே நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன.
நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் பேரறிஞர் அண்ணா.
திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசியபோதெல்லாம் அண்ணா தகுந்தவாறு பதிலளித்தார்.
ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக் கேட்டார்.
பேருந்தில், 'யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு' என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா?
இக்கட்டான நிலையில் பேரறிஞர் அண்ணா அகப்பட்டுத் தவிக்க வேண்டும் என்று எண்ணி எழுப்பப்பட்டக் கேள்வி இது!
டிரைவர் . . . கண்டக்டருக்காக என்றால் தொழிலாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.
பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.
இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் சாதுர்யமானது மட்டுமல்ல - மிகவும் நுணுக்கமானதுமாகும்.
''நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது'' என்று பதில் கூறினார்.
இந்த உடனடியான பதில் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்துவிட்டது. இதைப் போல பொருத்தமாகத் தெளிவுடன் உடனே பதில் சொல்லும் அறிவாற்றல் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது அவரிடம் மிகுதியாக அமைந்திருந்தது.
ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த விநாயகம் அவர்கள் அண்ணாவைப் பார்த்து,
யுவர் டேஸ் ஆர் நம்பர்ட் (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார்.
அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து,
மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷர்ட் (என் படிகள் அளவிடப்படுகின்றன ) என்றார்.
சட்டமன்றம் என்பது சட்டமியற்றும் இடம் மட்டுமல்லாது, மக்களுக்கான தேவைகளை வாக்கு வன்மையுடன் கேட்டு பெறச் செய்யும் இடமாகவும், வாத பிரதிவாதங்களை நயத்தக்க நாகரீகத்துடன் செய்ய வேண்டும் என்ற புதுமரபையும் ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
தமிழினம் தலைநிமிரச் செய்த பேரறிஞரை அவரது நினைவுநாளில் நெஞ்சில் சுமப்போம்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?