DMK
“ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்” - தி.மு.க தீர்மானம்!
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
தி.மு.கழகத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு :
தீர்மானம் : 1
“அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என அகிலம் அதிர முழங்கிய 1.05 கோடி தமிழ் மக்கள்!
மக்கள் கிராம சபைக் கூட்டங்களை தமிழகம் எங்கும் வெற்றிகரமாக நடத்திய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்தை கிராமந்தோறும், தெருக்கள் தோறும், வீடு வீடாகச் சென்று விளக்கிடும் வகையில் - அ.தி.மு.க. அரசின் தடைகளையும் உடைத்தெறிந்து - 23.12.2020 அன்று முதல் “மக்கள் கிராம சபை”க் கூட்டங்களை, மகத்தான மக்கள் சந்திப்பு இயக்கமாக வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கும் கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி - இளைஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னணியினர் அனைவருக்கும் இந்தக் கூட்டம் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
மாநிலம் முழுவதும் 21,500-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் - வார்டுகளிலும் இக்கூட்டங்களை நடத்தி, மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்துள்ள ஒரே இயக்கம், இந்தியத் துணைக் கண்டத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என்பதை, இந்தக் கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.
இந்தக் கூட்டங்களில் “வேலைவாய்ப்புகள் இல்லை, அடிப்படை வசதிகள் செய்யவில்லை, உள்கட்டமைப்புகளைப் பெருக்கும் பணிகளே நடக்கவில்லை, அத்தியாவசியத் தேவைகளுக்கான பணிகள் ஏதும் இல்லை - எங்கும் ஊழல், லஞ்சம் - எல்லா மட்டத்திலும் ஊழல், கொள்ளை” என்று கட்சி வித்தியாசமின்றி பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள், அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்தைச் சுட்டிக்காட்டி, ஒரு கோடியே 5 இலட்சம் தமிழ் மக்கள் இந்த “மக்கள் கிராம சபை”க் கூட்டங்கள் வாயிலாக, “அ.தி.மு.க.வை நிராகரிகத்துள்ளதை” - ஜனநாயகத்தின் முன்னேற்றத்தைக் காட்டும் பக்கங்களில் தனிமுத்திரை பதிக்கும் நிகழ்வாக இக்கூட்டம் கருதுகிறது.
இக்கூட்டங்களில் பங்கேற்ற கழகத் தலைவர் அவர்கள், வேளாண் கடன், மாணவர்களின் கல்விக்கடன், 5 பவுன் வரை நகைக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வோம் என்றும் - மக்களின் பொதுவான கோரிக்கைகள் அனைத்தும், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றித் தரப்படும் என்றும் - செய்துள்ள அறிவிப்புகளை இக்கூட்டம், தமிழக வாக்காளப் பெருமக்களுடன் இணைந்து, மனதார வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தின் உரிமைகளையும், மக்களின் நலனையும், மாநிலத்தின் வளத்தையும், முன்னேற்றத்தையும் உறுதிசெய்து பாதுகாக்க, ஓய்வின்றி உழைக்கும் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் அயராது பாடுபடும் என்றும் - நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மக்களுக்கு பொறுப்புடன் தொண்டூழியம் செய்திடும் நல்லாட்சியை - திறமையானதும், வெளிப்படையானதும், ஊழலற்றதுமான ஆட்சியை அமைத்திடவும், கழகத் தலைவர் அவர்களை முதலமைச்சராக்கிடவும் மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.
தீர்மானம் : 2
இந்தியாவிலேயே வேறெங்கும் காணமுடியாத அளவுக்கு ஊழல் ஆழமாக புரையோடிப் போன ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி!
இந்தியாவிலேயே ஊழலில் புரையோடிப் போன ஆட்சியை நடத்தி - தமிழகத்திற்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு - சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா பிடியிலும் - அதனைத் தொடர்ந்து, சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த ஊழலில் உயர் நீதிமன்றத்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதலமைச்சர் திரு.பழனிசாமி பிடியிலும் உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க.! 2011 முதல் 2016 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களின் தொடர்ச்சியாக - முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதலமைச்சரான பழனிசாமி தலைமையிலான இந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் முறைகேடுகள்! எங்கும் எதிலும் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் வெட்கக் கேடுகள் - இதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் முழு முகவரி! தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் இருக்கும் போதே, தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் ரெய்டு, டி.ஜி.பி. வீட்டில் ரெய்டு என்ற இதுவரை கண்டும் கேட்டுமிராத அவலம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் அரங்கேறியது. பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், இது குறித்து பல்வேறு தருணங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்ட ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழலில், கழகத் தலைவர் அவர்கள் கடந்த 22.12.2020 அன்று தமிழக ஆளுநரைச் சந்தித்து - அவரிடம் முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அவரது அமைச்சரவை சகாக்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட பல்வேறு ஊழல் புகார்கள் கொண்ட பட்டியல் அளித்துள்ளதை இக்கூட்டம் வரவேற்கிறது. இந்தப் புகார்கள்மீது மாண்புமிகு ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது. எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இப்புகார்கள்மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
அந்தப் புகாரில், முதலமைச்சர் பழனிசாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றிருக்கும் டெண்டர் ஊழல், மத்திய அரசு வழங்கிய அரிசியை வெளிச்சந்தையில் விற்றதில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல், வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு ஊழல்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு ஊழல், காக்னிசன்ட் டெக்னாலஜி கட்டட அனுமதியில் டாலர் கணக்கில் ஊழல்; உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது எல்.இ.டி. பல்பு ஊழல்; மின்துறை அமைச்சர் தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி ஊழல், மின் கொள்முதல் ஊழல், உதிரி பாகங்கள் கொள்முதல் ஊழல், காற்றாலை ஊழல்; மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல்; வருவாய் - பேரிடர் துறை அமைச்சர் உதயகுமார் மீது பாரத் நெட் டெண்டர் ஊழல்; மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மீது லஞ்சப் பணம் கைப்பற்றியது சம்பந்தமான ஊழல்; என முதற்கட்ட ஊழல் புகார்களை பொதுநல நோக்கில் அளித்து அ.தி.மு.க ஆட்சியின் முகத்திரையைக் கிழித்துள்ள கழகத் தலைவருக்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
இது தவிர, “குட்கா ஊழல்” “குவாரி ஊழல்” “காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல்” “கொரோனா காலத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக் கருவிகள், மருந்துகள், பிளீச்சிங் பவுடர், துடைப்பங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல்”, “முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரை டஜன் அமைச்சர்கள் மீது ஓட்டுக்குப் பணம் கொடுத்த ஊழல்”, “ஸ்மார்ட் சிட்டி ஊழல்”, “அண்ணா பல்கலைக்கழக ஊழல்”, “முட்டை டெண்டர் ஊழல்”, “கொரோனா கால டெண்டர் ஊழல்கள்”, “பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையில் கடந்த நவம்பர், டிசம்பர், மற்றும் இந்த மாதத்தில் மட்டும் ஊழலுக்காக 2885 கோடி ரூபாய் அவசர டெண்டர்கள்”, “நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் விடப்படும் கடைசி நேர டெண்டர்கள்” என அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் முடை நாற்றம் எங்கும் வீசி மக்களின் மூக்கைத் துளைத்தெடுக்கிறது. தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும் - இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கான தொழில் முன்னேற்றத்தையும், 50 ஆண்டு காலம் பின்னுக்குத் தள்ளி - கமிஷன் அடிப்பதற்காகவே கடன் வாங்கி - தமிழக மக்களின் தலையில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனை சுமத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க. அமைச்சர்களின் மீதான ஊழல் புகார்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி - தவறு செய்தோரை, முறையாக சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் பெரிதும் வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 3
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை மேலும் தாமதமின்றிக் கைது செய்திடுக!
பாலியல் வன்முறையினால் பதைபதைத்து வாய்விட்டலறும் இளம் பெண்களின் அவலக் குரலை உதாசீனம் செய்து - பொள்ளாச்சி இளம் பெண்களின் வாழ்வினை சூறையாடிய முக்கியக் குற்றவாளிகளை இன்னமும் மூடி மறைத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
அந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கொடுங் குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப விட்டதோடு மட்டுமின்றி - அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகியை இரு ஆண்டுகள் அரண் போல் பாதுகாத்து நின்றது முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. இப்போது சி.பி.ஐ., அ.தி.மு.க. நிர்வாகியை கைது செய்திருந்தாலும் - இந்தப் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அ.தி.மு.க. அமைச்சர்களின் அரவணைப்பில் இருந்த காட்சிகள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியாகியும் - இதுவரை முக்கியக் குற்றவாளிகளை கைது செய்ய விடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்து, பாதுகாத்து வருவதைக் கண்டு இக்கூட்டம் மிகுந்த வேதனைப்படுகிறது.
மேலும் கால தாமதம் செய்யாமல் - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உள்ள முக்கியக் குற்றவாளிகளை, உடனடியாக சி.பி.ஐ கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்றும், மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 4
உச்சநீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் - மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய பா.ஜ.க. அரசு நிபந்தனை இன்றி உடனே திரும்பப் பெற வேண்டும்!
டெல்லியில் வேகமாக வீசி வேதனைப்படுத்தும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து - முழுமனதோடு அ.தி.மு.க.வினால் ஆதரிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயப் பெருமக்கள் நடத்தும் “டெல்லி முற்றுகை”ப் போராட்டம் 58-ஆவது நாளாக நடைபெற்று வருவதை மிகுந்த மனக்கவலையுடன் பதிவு செய்யும் மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்முறைக்கு துளியும் இடமின்றி - அறவழியில் அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இக்கூட்டம் தனது உணர்வு பூர்வமான பாராட்டுதலையும், உறுதியான ஆதரவினையும் தெரிவித்துக் கொள்கிறது. போராட்டத்தின்போது உயிரிழந்த 100க்கும் மேற்பட்ட விவசாயப் பெருமக்களுக்கு இக்கூட்டம் வீரவணக்கம் செலுத்துகிறது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, உச்சநீதிமன்றத்தில் கழக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் மூலம் வழக்குத் தாக்கல் செய்து - தடையுத்தரவு பெற்றிருக்கும் கழகத் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்ற மத்திய பா.ஜ.க. அரசின் வீண் ஜம்பப் பிடிவாதத்தால் - உச்சநீதிமன்றமே தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தும் - இப்போதுகூட வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று விவசாயிகளின் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர மத்திய பா.ஜ.க. அரசு தயக்கம் காட்டுவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சுதந்திர இந்திய வரலாறு இதுவரை கண்டிராத இத்தகைய மாபெரும் போராட்டத்திற்குப் பிறகும் - விவசாயிகளுக்கு எதிரான இந்த மூன்று சட்டங்களையும் ஆதரித்து வெட்கமின்றிப் பேசி வரும் முதலமைச்சர் திரு.பழனிசாமிக்கும் இக்கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் - மூன்று வேளாண் சட்டங்களையும் பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 5
மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கிடுக!
காவிரி டெல்டா உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மார்கழிப் பெருமழையில் அடியோடு நாசமாகி - பொங்கல் பண்டிகை நேரத்தில் விவசாயிகள் அனைவரும் பெருந்துயருக்கும், பேரிழப்பிற்கும் உள்ளாகியிருப்பதை அ.தி.மு.க. அரசு வீணே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
நிவர் மற்றும் புரெவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இந்த “மார்கழிப் பெருமழை” பேரிடியாகவே வந்திருக்கிறது. வடி வாய்க்கால்களைத் தூர் வாரும் பணியில் கோட்டை விட்ட அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் கோட்டை விட்டு - குறட்டை விட்டுத் தூங்குகிறது. நிவர் புயல் பாதிப்பிற்குள்ளான நிலங்கள் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்காமல், தான்தோன்றித் தனமாக - ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என அ.தி.மு.க. அரசு அறிவித்தது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அறிவிக்கப்பட்ட அந்த நிவாரணமும், பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையும் இன்னும் விவசாயிகளுக்கு முழுமையாக போய்ச் சேரவில்லை. 19.1.2021 அன்று பிரதமரை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, நிவர் புயல் பாதிப்பிற்காக கேட்ட 3,750.38 கோடி ரூபாயையும், - புரெவி புயல் பாதிப்பிற்காக கேட்ட 1,514 கோடி ரூபாயையும் கூட உடனே பெற முடியாமல் - வெறுங்கையுடன் தோல்வி முகத்துடன் திரும்பி வந்திருப்பதற்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
“கணக்கு எடுக்கிறோம்” என்று வரையறையின்றிக் காலம் கடத்தாமல், உடனடியாக தொடர் மழையில் மூழ்கிய பயிர்களுக்கும் - அதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் என்றும், நிவர் மற்றும் புரெவி புயல்கள் பாதிப்பிற்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் என்பதை ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 6
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்க!
30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கழகத் தலைவர், தமிழக ஆளுநரைச் சந்தித்து இதுகுறித்து ஏற்கனவே நேரில் வலியுறுத்தியிருப்பதை இக்கூட்டம் நினைவுகூர்கிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் பேரில் - ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தினை ஏற்றுக் கொள்ளாமல், தமிழக ஆளுநர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காலம் கடத்தி வருவதற்குக் கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது.
தற்போது இதுதொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், “ஆளுநரின் இந்த காலதாமதம் அசாதாரணமானது” என்று மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதிகளே கருத்து தெரிவித்துள்ள நிலையில், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்குப் பதில் ஆளுநரே இன்னும் மூன்று நாட்களில் முடிவெடுப்பார்” என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். ஆகவே, இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக ஆளுநர் அவர்களை, மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
ஆகிய இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!