DMK
“இன்னும் 5 மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வரும்; விவசாயிகளின் இன்னல்கள் தீரும்” - கனிமொழி எம்.பி உறுதி!
தி.மு.கழக முன்னணியினர் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழகம் முழுவதும் பயணித்து மக்களைச் சந்தித்து வருகிறார்.
இன்று பொள்ளாச்சி பகுதியில் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் நீண்ட காலப் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவர்களிடையே பேசினார் கனிமொழி எம்.பி.,
அப்போது விவசாயிகள், “பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். திருமூர்த்தி அணையின் 4 லட்சம் ஏக்கர் விவசாயிகளின் நீர்ப் பற்றாக்குறை பிரச்னையைத் தீர்க்க வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் நீர்ப் பாசனத் துறைக்குத் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தென்னை விவசாயத்தை மேம்படுத்தத் திட்டங்கள் வேண்டும். பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரங்களில் ஏற்படும் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இளநீருக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பின்னர் அவர்களிடையே பேசிய கனிமொழி எம்.பி., “தி.மு.க ஆட்சி என்றும் விவசாயிகளுக்கான ஆட்சியாகவே இருந்துள்ளது. தி.மு.க ஆட்சியில்தான் விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்த்த மத்திய அரசின் மின் திட்டத்தை தற்போதைய அ.தி.மு.க அரசு ஆதரித்துள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும். பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ஆதரித்த, பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலத்தைச் சேர்ந்த ஒரே முதல்வர் பழனிசாமிதான். வேளாண் சட்டத் திருத்தத்தை ஆதரித்து அ.தி.மு.க அரசு விவசாயிகளுக்குத் துரோகம் செய்துள்ளது.
விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. அதனால்தான் விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்தச் சட்டத்தினால் அடித்தட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே இந்தச் சட்டத்தை எதிர்த்து தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்.
தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு திட்டங்களுக்கு அ.தி.மு.க அரசு நிதி ஒதுக்காததால் மகளிர் சுய உதவித் திட்டங்கள் முடங்கிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 5 மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வரும். விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும்” என உறுதியளித்தார்.
Also Read
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!